இந்து மதம் கூறும் கருத்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:43 PM | Best Blogger Tips


இந்து மதத்தின் அடிப்படையான புனித நூல் எது ? அந்நூல் கூறுவதைச் சுருக்கமாகத் தர முடியுமா?
இந்து மதத்திற்கு ஆதாரமான புனித நூல்கள் வேதங்களாகும். வேதம் என்றால்மெய்யறிவு அல்லது ஞானம். ஸ்ருதி (வெளிப்பட்ட ஒன்று), ஆகமம் (மரபு வழியாக வழங்கப்பட்டது), நிகமம்  (வாழ்கையின் முடிவான பிரச்சனைகளுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் தீர்வுகள் தருவது) என்ற மூன்று பெயர்களாலும் வேதம் அழைக்கப்படுகிறது. சாதுக்களும் ரிஷிகளும் இறைவனின் அருளால் தங்கள் அனுபூதியில் உணர்ந்து கொண்டவை வேதங்கள்.
வேதங்கள் நான்கு ரிக் , யசுர் ,சாமம் ,அதர்வணம். இவற்றுள் ரிக் வேதம் தான் மிகவும் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானியில் விவரங்களை வைத்து குறைந்தது எட்டாயிரம் வருடங்களுக்கு முன் அது எழுதப்பட்டது என்று பாலகங்காதர திலகரும் , பல ஆராய்ச்சியாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
பிரார்த்தனைப் பாடல்களின் தொகுதியே ரிக் வேதம் என்று சொல்லலாம் யாகங்களுக்கான சடங்குகள் மற்றும் வழி முறைகளைப் பற்றியது யசுர் வேதம். ரிக் வேதத்திலிருந்து பல பிரார்த்தனை பாடல்களை பண் அமைத்து இனிமையாக்கித் தருகிறது சாம வேதம். குறிப்பிட்ட சில யாகங்களில் எப்படி எப்படி அவற்றை ஓத வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது . நம் முடைய மரபு வழி இசைக்குப் பிறப்பிடமே சாம வேதம் தான். ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நீண்ட ஆயுள் பெறுவது தொடர்பான அறிவியல் துறையான ஆயுர் வேததத்தையும் , பெரும்பாலும் அற நெறிகளையும் உள்ளடக்கிய தொகுப்புஅதர்வண வேதம்.
ஒவ்வொரு வேதமும் மரபுப்படி நான்கு பிரிவுகள் கொண்டது.
1 . மந்திரம் அல்லது சம்ஹிதை 
2 . ப்ராம்மணம் 
3 . ஆரண்யகம் 
4 . உபநிடதம் .
இந்திரன் , வருணன் , விஷ்ணு போன்ற தெய்வங்களை குறித்து  பிரார்த்தனைகளின் தொகுப்பே சம்ஹிதைகள்.  ப்ராம்மணம் என்பதை பிராமணர் என்ற குலத்தோடு தொடர்பு படுத்தி குழப்பக்கூடாது. யாகங்கள் பற்றிய வழி முறைகளை விளக்குவதே ப்ராம்மணம். ஆரண்யகம் என்பது காட்டில் செய்யப்படும் யாக , யக்னங்களை அடிப்படையாக கொண்ட , தியானத்துடன் கூடிய உபாசனைகளை விளக்குகின்றன. தத்துவங்களை ஆராய்ந்து , விளக்கங்கள் தருபவை உபநிடதங்கள். இந்த பிரபஞ்சம் , அதற்கு ஆதராமான பேருண்மை, மனித இயற்கை, வாழ்கையின் குறிக்கோள், அதை அடைவது எப்படி என்பவையெல்லாம் அவற்றில் அடங்கும்.
நன்றி  vivekanandadasan.wordpress