நிஃப்டி என்றால் என்ன தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:51 | Best Blogger Tips

What Is Nifty Or S P Cnx Nifty

மும்பை பங்குச் சந்தையின் (பி.எஸ்.இ.) இன்டெக்ஸ் சென்செக்ஸ் என்று அழைக்கப்படுவது போல் தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.இ.) இன்டெக்ஸ் நிஃப்டி என்று அழைக்கப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் முதல் 30 நிறுவனங்களின் பங்குகளுக்கான இன்டெக்ஸ் உருவாக்கப்பட்டு சென்செக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதே போல் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் முதல் 50 நிறுவனங்களின் பங்குகளுக்கான இன்டெக்ஸ் உருவாக்கப்பட்டு நிஃப்டி என்று அழைக்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி., ஹெச்.டி.எஃப்.சி., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, லார்ஸன் அன்ட் டூப்ரோ, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ் போன்றவை நிஃப்டியில் அங்கம் வகிக்கும் 50 நிறுவனங்களில் சில நிறுவனங்களின் பங்குகள் ஆகும்.
நிஃப்டியில் உள்ள நிறுவனங்கள் தொழில்துறையில் வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்தவை. இரும்பு எஃகு, சிமெண்ட், தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, வங்கியியல், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் எரிவாயு, உள்கட்டமைப்பு, மருந்துத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் நிஃப்டியில் அங்கம் வகிக்கின்றன. தேசிய பங்குச் சந்தை மற்றும் இந்திய தர மதிப்பீடு மற்றும் தகவல் சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ஐஐஎஸ்எல் எனப்படும் இந்தியா இன்டெக்ஸ் சர்வீசஸ் அன்ட் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் தான் நிஃப்டியினை நிர்வகிக்கும் உரிமையாளர்.
நிஃப்டி அவ்வப்போது மற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டுள்ளது. சில பங்குகள் நிஃப்டியில் சேர்க்கப்படுவதும், சில பங்குகள் நீக்கப்படுவதும் நடைபெறுகின்றன. உதாரணமாக, அண்மையில் நிஃப்டியிலிருந்து விப்ரோ நிறுவனம் நீக்கப்பட்டு என்.எம்.டி.சி. சேர்க்கப்பட்டது. அதேபோல், சீமென்ஸ் நீக்கப்பட்டு இன்டஸ் இன்ட் வங்கி சேர்க்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியானது, நாள்தோறும் ஏறி இறங்கி தற்போது 5800 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டுள்ளது.