ஹிட்லரும் இவாவும்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:50 AM | Best Blogger Tips


ஹிட்லர்... பரபரப்பை உண்டாக்கும் பெயர். தான் வாழ்ந்த காலத்தின் வரலாற்றை தன்னைச் சுற்றியே தவறான காரணங்களுக்காக சுழல வைத்தவர். அடிப்படையில் ஆஸ்திரிய நாட்டில் பிறந்த இவரின் அப்பா யூதர் என்பது சமீபத்தில்தான் தெரியும். அப்பா பெல்ட்டால், சிகரெட்டால் என எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அடித்து துவைத்தார் இவரை. வலிகளால் வாழ்க்கை நகர்ந்தபொழுது இருந்த ஒரே ஆறுதல் அம்மாவின் அரவணைப்பு மட்டுமே.

அம்மாவும் இறந்து யாருமே இல்லாத நிலையில் நடுத்தெருவில் ஏழைகளுக்கு வழங்கும் சூப் குடிக்கும் கூட்டத்தில் இவர் நின்றபொழுது அங்கே யூதர்களின் கூட்டம் இல்லாததை கண்டார். யூதர்கள் செல்வந்தர்கள் என தெரியும் அவருக்கு, தன் நாட்டை அவர்கள் கூறு போட்டு உண்கிறார்கள் என்கிற எண்ணம் அப்பொழுதே வலுப்பெற ஆரம்பித்தது.

ஓவியக் கல்லூரிக்கு போனார். ஓவியம் வரைய வராது என அனுப்பிவிட்டார்கள். அன்றைக்கு கொஞ்சம் கனிவோடு மனிதரை உள்ளே விட்டிருந்தால் நாடுகளின் எல்லைகள் மாறாமல் இருந்திருக்க கூடும். உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருந்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தேசங்களுக்கு இணையாக தானும் மாற ஜெர்மனி ஆவல் கொண்டது. அப்பொழுது இரு கொலைகள் புகைந்து கொண்டிருத்த குண்டை வெடிக்க வைத்தது. முதல் உலகப் போர் நடந்து முடிந்தது; ஜெர்மனி தோல்வியை தழுவியது.

எல்லா தப்புக்கும் ஜெர்மனி தான் காரணம் என வெர்சைல்ஸ் ஒப்பந்தம் சொன்னது. பல கோடிகளை இழப்பீடாக வாங்கிய வென்ற நாடுகள், இருந்த பல பகுதிகளை கூறு போட்டு தனித்தனி நாடுகள் ஆக்கினார்கள். ராணுவ பலத்தை குறைக்கவும் செய்தார்கள். அவமானத்தால் ஜெர்மானியர்கள் வருந்தினார்கள். கரன்சி மதிப்பு விழுந்தது. நாடு முழுக்க பசி தாண்டவமாடியது.

ஹிட்லர் என்னென்னவோ பண்ணி பார்த்துவிட்டு அரசியல் பக்கம் வந்து சேர்ந்தார். ஒரு முறை ஆட்சியை கவிழ்கக புரட்சி செய்யப்போய் மது விடுதிலேயே கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த பொழுது மெயின் காம்ப் எழுதினார். அப்படி ஒரு வசீகரமான நடை. நம்முடைய சிக்கல்களுக்கு மற்ற இனங்களின் ஆதிக்கமே காரணம். நாஜி இனம் ஓங்க வேண்டும். யூதர்கள் முதலிய தீயவர்கள் ஒழிய வேண்டும் என முழங்கினார்.

தனி வாழ்க்கையில் சுத்த சைவம், நோ சிகரெட், நோ மது, ஓரிரு பெண்கள்தான் மொத்த வாழ்க்கையில். அவர்கள் மீதும் பெரிய போதையெல்லாம் இல்லை. ஆனால் ஹிட்லர் போர்வெறியின் குழந்தை. இனவெறியின் மகன். ஏகாதிபத்திய நாடுகளின் வரிசையில் ஜெர்மனி இணைய முயன்ற பல்வேறு முன்னெடுப்புகள் கூட்டிச்சென்ற முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்பதற்கு யூதர்கள் காரணம் என இவர் திடமாக நம்பினார். பேச்சால் இனவெறியால் மக்களை கட்டிப்போட்டார்.

வெளியே வந்ததும் தேர்தலில் நின்றார்; ஓரளவுக்கு அதிகமான சீட்கள் கிடைத்து இருந்த நேரம். சான்சலர் ஆக இருந்த நபர் கண்ணை மூடியது வசதியாக போனது. சர்வாதிகாரத்தை கையில் எடுத்தார். பொருளாதாரத்தை மீட்டார்.

ஹிட்லரின் எழுத்திலும் பேச்சிலும் வசீகரம் தொனிக்கும். பிரசார பாணி அலாதியானது. முதலில் ஒரு பொய்யை மீடியா சொல்லும்; இன்னொரு புறம் மக்கள் கூடுகிற இடங்களில் எளிய மக்கள் போல வேடமிட்டு ஒற்றர்கள் சொல்வார்கள்; ஜோசியர்களும் சொல்வார்கள். எங்கெங்கும் அந்த பொய் பரவும்.

யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள்; விஷ வாயு சேம்பருக்குள் அனுப்பி மொத்தமாக க்ளோஸ் செய்வார்கள்; துப்பாக்கியால் சுட்டு, சித்திரவதை செய்து கொல்வார்கள். எந்த அளவுக்கு நிலைமை மோசம் என்றால், இந்த அரும்பணியை செய்வதற்கு ஒரு தனி அமைச்சகமே இருந்தது. பெரும்பாலும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஹிட்லரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு லட்சகணக்கான யூத குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என சகலரும் கொல்லப்பட்டனர்.

பெண்களை பிள்ளை பெற்றுத்தரும் மெஷின் என அவர் கருதினார். ராணுவத்தை நவீனப்படுத்தினார். மற்ற நாடுகளின் மீது அங்கே நாஜிக்கள் இருக்கிறார்கள் இடதைக்கொடு என்றும் கேட்பார்; பின்னர், போய் ஜெயித்து வந்து விடுவார் இப்படியே போகிற பக்கமெல்லாம் நாடுகள் வீழ்ந்தன; ஸ்டாலினுடன் கூட்டு போட்டுக்கொண்டு உலகப் போரில் கலக்கினார். திடீர் என்று இருவருக்குள்ளும் சிக்கல்கள் வந்தன; அதற்குள் பிரான்ஸ் தொடங்கி பல்வேறு நாடுகள் ஜெர்மனி வசம் வந்திருந்தன. இப்பொழுது இரண்டு மலைகளும் மோதிக்கொண்டன .

விலகவே விலகாத செம்படைகளிடம் பல கால போராட்டத்துக்கு பின் இவரின் படைகள் வீழ ஆரம்பித்தன. ஒரே ஒரு நாள் பெத்தடின் கண்ணில் போட்டுக்கொண்டதும் நார்மண்டியில் புகுந்து விளையாடின எதிர் படைகள். தோல்வி தெரிந்தது. இவா பிரவுனுக்கு கொஞ்சம் விஷம்; தனக்கு தோட்டாக்கள் என முடித்துக்கொண்டார் அவர். அதற்குள் சில கோடி மக்களும், பல லட்சம் யூதர்களும் கொல்லப்பட்டு இருந்தார்கள்.

***

ஈவா பிரவுன்.. ஹிட்லரின் காதலி என்பதை தாண்டி அவளைப் பற்றி வரலாறு பேசுவதில்லை. அவளின் அப்பா, அம்மா இளவயதிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின் பொருளாதார மந்தநிலை அவர்களை இணைத்தது. அன்பின் நிழல் ஈவாவுக்கு வாய்க்கவே இல்லை. ஹாப்மன் எனும் மனிதரிடம் புகைப்பட உதவியாளராக சேர்ந்தார். அந்த மனிதர் ஹிட்லருக்கு அந்தரங்க புகைப்படகாரர். ஹிட்லரை இளம் வயதில் ஓரிரு முறை சந்தித்திருந்தார் இவர். அப்பொழுதே ஒரு மையல். ஹிட்லரின் படுக்கையறை தோழியாக இருந்த அவரின் உறவுக்கார பெண் தற்கொலை செய்துகொள்ள, அதே சமயத்தில் ஹிட்லரின் கவனம் ஈர்க்க, பிஸ்டலால் சாகாத அளவுக்கு சுட்டு கொண்டாள் ஈவா. கவனித்தார் ஹிட்லர்; காதல் பூத்தது.

பெண்கள் வெறும் வீட்டு வேலை செய்யத்தான் என முழங்கிய ஹிட்லர் தான் திருமணம் செய்யாமல் இருத்தலே தன்னுடைய கவர்ச்சியை அதிகப்படுத்தும் என எண்ணி இவருடனான உறவை ரகசியமாகவே வைத்திருந்தார். அதிலும் இவரைவிட 23 வருடம் இளையவர் ஈவா என்பது இன்னமும் நிலையை சிக்கலாக்கும் எனவும் எண்ணினார். குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்பொழுது மட்டும் அருகருகே அமர்ந்து இருக்கிறார்கள். மற்றபடி எப்பொழுதும் பொதுமக்கள் முன் இணைந்து தோன்றியதில்லை. அரசாங்க அலுவலுக்குள் எப்பொழுதும் அவள் தலையிட்டதில்லை. பெரும்பாலும் ஹிட்லர் அன்பொழுக நடந்து கொண்டதும் இல்லை. எப்பொழுதாவது திருட்டுத்தனமாக படுக்கையறை வந்து போவார்; அவ்வப்பொழுது ஹிட்லரின் படங்களை இவர் எடுப்பார் -அவ்வளவே.

அன்புக்காக ஏங்கிக் கிடந்த இவரின் இறுதிவரை உடனிருந்த சேவையை, ஹிட்லர் ரஷ்ய படைகளிடம் ஜெர்மனி விழுந்த பிறகு திருமணம் செய்துகொள்வதன் மூலம் அங்கீகரித்தார். வெறும் நாற்பது மணிநேரம் மனைவி அந்தஸ்து; பின் கொஞ்சம் சொட்டு விஷம். முடிந்தது விஷயம். கரிந்துபோன இவளின் உடலின் மிச்சங்களை முதலில் அடக்கம் செய்திருந்தனர். பின் அதையும் கேஜிபி எழுபதுகளில் எரித்து அதை பீடெரிட்ஸ் நதியில் சாம்பலை தூவி விட்டார்கள்.

சலனமில்லாமல் ஓடும் அந்த நதிபோல வாழ்க்கையின் எந்த முனையிலும் சப்திக்காமலே எத்தனை ஈவாக்கள் மரித்துப்போகிறார்கள்?

(இன்று - ஹிட்லர் மற்றும் ஈவாவின் நினைவு தினம்.)

- பூ.கொ.சரவணன்