ஒருவன் பணக்காரனோ, ஏழையோ, எங்கும் புகழ் பெற்றவனோ, காதவழி கூடப் பெயரில்லாதவனோ, எவனாக இருந்தாலும் அவனவன் உள்ளத்திலும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது.
அந்த நெருப்பின் ஜுவாலை கூடலாம், குறையலாம். குறைந்த பட்சம் புகை மண்டலமாவது மண்டிக் கிடக்கிறது.
ஒவ்வொரு நெஞ்சிலும் ஏதேனும் ஒரு வடு விழுந்திருக்கிறது.
ஒரு வேளையாவது மனிதன் மூச்சு, அனல் மூச்சாக இறங்குகிறது.
அவலம், ஆதங்கம், ஏக்கம், தோல்வி, குத்தல், குடைச்சல்.
ஒவ்வொரு மனிதனும், மரணத்தைப் பற்றி ஒரு முறையாவது சிந்திக்கிறான்.
`இதைவிடச் செத்துப்போவது நல்லது கடவுளே’ என்று நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சொல்லியிருக்கிறார்கள்.
`போதுமடா சாமி’ என்று அலுத்துக் கொள்ளாதவர்களே இல்லை.
`என்னை நிம்மதியாக இருக்க விடுங்களேன்’ என்று ஒவ்வொரு குடும்பஸ்தனும் சத்தம் போட்டிருக்கிறான்.
நிம்மதி: அது தெய்வத்தின் சந்நிதி.
துன்பம்: அது சாத்தானின் சந்திதி.
சாத்தானின் சந்நிதியில் இருந்து நீங்கள் தெய்வத்தின் சந்நிதிக்குப் போக விரும்புகிறீர்களல்லவா?
வாருங்கள்! உலகத்தின் மூலத்தைக் காண்பதற்கு முன்னால், துயரத்தின் மூலத்தைக் காணலாம்.
துன்பம் மொத்தத்தில் இரண்டு வகையாக வருவது.
ஒன்று, மனிதன் தானாகவே கை கால்களை மாட்டி இழுத்துக் கொள்வது; மற்றொன்று, அவனுக்குச் சம்பந்தமில்லாமலேயே விதி விளையாடுவது.
இரண்டாவது வகையில் அவனுக்குச் சம்பந்தமில்லையாயினும், விதி அவன் மூலமாகவே செயல்படுகிறது.
விளையாட்டிலே நீ கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டால், அது விதியின் செயல்தான். ஆனால், உன்னையே விளையாடச் சொல்லி, நீயாகவே விழுந்து கால் ஒடியும்படி அது வைத்து விடுகிறது.
ஒரு பெண்ணை நீ காதலித்து, அந்தக் காதலே துயரமாகி விடுமானால், விதி உன் கண்களிலிருந்து விளையாடி இருக்கிறதென்று பொருள்.
சரியான தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அது தவறானதாகிக் கையைச் சுட்டுக்கொள்ள நேருமானால், விதி உன் மூளையில் நின்று விளையாடி இருக்கிறதென்று பொருள்.
ஒவ்வொரு சிக்கலிலும், பின்னலிலும் விதியின் பங்கு பெரியது.
நீ சாப்பிடும் சாப்பாட்டில் பல்லி எச்சமிட்டு நீ நோய் வாய்ப்பட நேர்ந்தால், உனக்குச் சம்பந்தமில்லாமல் விதி செயல்பட்டதாகப் பொருள்.
`இது என்ன செய்துவிடப் போகிறது’ என்று ஏதாவதொரு தவறான வழியில் நீ இறங்கிவிட்டால், அதில் உன் செயல் முக்கால் பங்கு, விதி கால் பங்கு.
ஆகவே, ஒவ்வொரு துன்பத்திற்கும் ஒரு பின்னணி இருக்கிறது.
அதனால்தான், புத்தி தாமதமாக உதயமாகியது.
இந்தத் துன்பங்களைக் களைவதற்கு வழி என்ன?
ஒரே வரியில் சுலபமாகச் சொல்வதென்றால், சித்தர்களும், ஞானிகளும் சொன்னது போல் பந்தம், பாசம், உடமைகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, `வீடு நமக்குண்டு திருவாலங்காடு, நிமலர் தந்த ஓடுண்டு அட்சய பாத்திரம்’ என்று கோவணத்தோடு ஓடி விடுவதுதான் ஒரே வழி.
ஆனால், லெளகீகத்தில் இருப்பவனுக்கு இப்படியொரு யோசனையைச் சொல்வதை விட மடத்தனம் வேறு இருக்க முடியாது.
ஏற்படும் பிணைப்புகளை உறுதி செய்துகொண்டே நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்வதுதான், பயனுள்ளதாக அமையும்.
மனிதன் அனுபவிக்க விரும்பும் பொருள்களில் இருந்து அவனை அப்புறப்படுத்துவதும் சுலபமான காரியமல்ல.
எல்லோரையும் அப்படி அப்புறப்படுத்தி விட்டால், உலக இயக்கங்கள் ஸ்தம்பித்துப் போகும்.
ஆகவே, வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய சில எச்சரிக்கைகளை, வலிமையான உள்ளத்தை அவனுக்குத் தந்து, இன்பத்தோடு கலந்து வரும் துன்பங்களைக் களைந்தெடுக்க வழி காண்பதே நல்லது