பொதுவாக, இதயத்திற்கு இரத்தம் அளிக்கும் செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்துக் கொள்ளும்போது இரத்தக் குழாய்களின் குறுக்களவு குறைந்து இரத்த அழுத்தம் அதிகமாகிறது. சில சமயம் போதுமான அளவு எண்ணிக்கையில் இதயம் துடிக்காததால் இதயத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து நாளடைவில் இதயம் பலவீனம் அடைவதுண்டு. இத்தகைய இதயக் கோளாறுகளை முறையான உணவுப் பழக்கங்களால் ஓரளவு குணப்படுத்தலாம். நெடுநாள் இரசாயண மருந்துகளையே பயன்படுத்தி வருவதால் உடலில் இயற்கையான எதிர்ப்பு சக்தி குறைந்து, உடல் தளர்வு அடைந்து மிகவும் பலவீனமாக உள்ளவர்களும் இத்தகைய சீரான உணவுப் பழக்கத்தால் போதுமான உடல் பலத்தைப் பெறலாம். இதய நோய் உள்ளவர்கள் என்றில்லாமல் அனைவருக்குமே பயன்படக் கூடிய ஒரு உணவுப் பழக்கத்தை இங்கு அளிக்கிறோம்.
காலையில் வெறும் வயிற்றில் வில்வம், துளசி இதழ்களுடன் மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்கவும். பத்து வயதிற்கு ஒரு மிளகு என்ற கணக்கில் மிளகைச் செர்த்துக் கொள்ளவும்.
ஒரு மணி நேரம் கழித்து காலை உணவாக பொன்னாங்கண்ணி அல்லது வல்லாரைக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை பருப்புப் போட்டோ, பருப்பு சேர்க்காமலோ சமைத்து உண்ணலாம்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு டம்ளர் கேரட் சூப் பருகவும்.
பின்னர் பத்து பாசுமதி அரிசியை லேசாக வாணலியில் வறுத்து நீரில் கலந்து குடித்து விடவும்.
சிறிது நேரம் கழித்து ஐந்து சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) தண்ணீரில் வேக வைத்து ஆறியவுடன் வெங்காயத்தை நீருடன் சேர்த்து சாப்பிட்டு விடவும்.
வாரம் ஒரு முறையாவது மிதமான சுடுநீரில் வேப்பிலை போட்டு குளித்து வரவும்.
திங்கட் கிழமை அன்று ஐந்து பல் நாட்டுப் பூண்டில் நெய் தடவி லேசாக வதக்கி உண்ணவும்.
ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் கேழ்வரகு தோசையும், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் சோள தோசையும், புதன், சனிக் கிழமைகளில் கம்பு தோசையும் உண்டு வரவும்.