''பலசரக்கு கடையில் 75 ரூபாய்க்கு வேலை
பார்த்த நான் இன்று, வருடத்திற்கு 120 கோடி ரூபாய் டேர்னோவர் செய்யும்
அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் எனது வளர்ச்சிக்காக
மேற்கொண்ட எல்லா முயற்சிகளுமே திருப்புமுனைதான்.
எனக்கு எந்த படிப்பும் கிடையாது. குடும்ப
நிலைமைக் காரணமாக சிறு வயதிலேயே பலசரக்கு கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்.
நான் வேலை பார்த்த கடையின் முதலாளி வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என
நினைத்தார். சேமியா தயாரித்து விற்கலாம் என அவர் முடிவு செய்தபோது, அந்த
வேலையைக் கற்றுக்கொள்ள நம்பிக்கையான ஆள் வேண்டும் என என்னை
தேர்ந்தெடுத்தார்.
கோயம்புத்தூரிலிருந்து வேலையைக் கற்றுவந்த
என்னை நம்பி, கடை முதலாளி 55 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்த தொழிலைத்
தொடங்கினார். உற்பத்தி செய்வதோடு, அதன் கணக்குவழக்குகளையும் நானே
பார்த்தேன். இதனால் கொள்முதல் செய்வது, ஏஜென்டுகளை நியமிப்பது என எல்லா
பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்ததோடு,50 சதவிகித உரிமையையும் எனக்குத்
தந்தார் என் முதலாளி.
அதுவரை ஜூபிடர் சேமியா என்கிற பெயரில்
இருந்த பிராண்டை அணில் சேமியா என பெயர் மாற்றினோம். விற்பனையை அதிகரிக்க
விளம்பரம் தேவை என்றறிந்து ஒவ்வொரு ஊராகச் சென்று சுவரில் எழுதுவோம்.
சேமியாவை வீடுகளில் இனிப்பு, பதார்த்தம் செய்ய மட்டுமே பயன்படுத்துவார்கள்.
இதை மாற்றி டிபன் வகைகளும் செய்யத் தோதாக மெலிதான இழைகள் கொண்ட சேமியா
வகைகளைச் செய்து மக்களிடம் கொண்டு சென்றோம். எனது நம்பிக்கையான
உழைப்பிற்காக நிறுவனத்தின் மொத்த உரிமையையும் என்னிடமே கொடுத்தார் என்
முதலாளி.
பத்து வருடத்துக்கு முன்பு வரைகூட சராசரி
வளர்ச்சியே இருந்தது. மாறிவரும் நமது உணவுப் பழக்கவழக்கங்களில் உடனடி
உணவுகள் இடம் பிடிக்கத் தொடங்கியதிலிருந்து எங்கள் வளர்ச்சியும்
வேகமெடுத்தது. இதற்கேற்ப, ஐந்து நிமிடத்தில் டிபன் என்கிற ஐடியாவை
விளம்பரப்படுத்தினோம். ராகி சேமியா என்கிற எங்களது அடுத்த முயற்சிக்கும்
நல்ல வரவேற்பு கிடைத்தது.
நமது பாரம்பரிய உணவு வகைகளையும் நகர்ப்புற
மக்களிடம் கொண்டு செல்லலாமே என்று நினைத்து, புட்டுமாவு கொண்டு வந்தோம்.
சேமியா மட்டுமில்லாமல் இப்போது லெமன் சேமியா, புளியோதரை சேமியா என்று புதிய
முயற்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இன்று ஆயிரம் பேருக்கு மேல் பணியாற்றும்
நிறுவனமாக வளர்ந்ததற்குப் பின்னால் என் புதிய முயற்சிகளும், நம்பிக்கையான
உழைப்பும் நிறையவே இருக்கிறது.''
- நீரை.மகேந்திரன்
Via நாணய விகடன்