பயலுக படுத்துறாய்ங்க…

மணக்கால் அய்யம்பேட்டை | 1:47 PM | Best Blogger Tips

 
 
அப்ப்ப்பா… என்ன சேட்டை… பிள்ளையா இது?
இப்படி உங்கள் வீட்டிலும் அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா?
குழந்தைகளின் உலகம் பல பெற்றோருக்கு புரியாத புதிர்! இதனாலேயே நல்ல பிள்ளைகளாக வளர்க்கிறோம் என்ற பெயரில் குழந்தைகளின் சிறகுகளை எளிதாக முறித்துவிட்டு, அவர்கள் எதிர்காலத்தில் உயரப் பறப்பார்களென்று கனவு காண்கிறோம்.
அதிர்ஷ்டவசமாக, சத்குரு இந்த மன அழுத்தத்திற்கு ‘செக்’ வைக்கவும் உங்கள் குழந்தைகளிடம் சரியாக நடந்துகொள்ளவும் ஒரு சில குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்.

#1 உங்கள் குழந்தைகளை அவர்கள் இல்லாத ஒருவராக வார்க்கும் முயற்சியை நிறுத்துங்கள்

ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது. நாம் நமக்கு நாமே அந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாலும், நம் கற்பனையில் நம் திட்டப்படி குழந்தைகளை கட்டாயப்படுத்தவே முயற்சிக்கிறோம்.
முதலில் நாம் நம்மை பெற்றோராக கற்பனை செய்தபோது, குழந்தை வளர்ப்பு செயல்முறை குறித்தும் குழந்தைகள் எதுபோன்ற மனிதராக வர வேண்டுமென்றும் விரிவான கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில், நாம் இந்த செயல்முறை மீது கட்டுப்பாடு செலுத்த முடியாது!
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான, உள்ளார்ந்த ஆளுமை உண்டு. எனவே குழந்தையை தன் இயல்பை விடுத்து வேறொருவர் போல் இருக்க வேண்டுமென கட்டாயப்படுத்த முயற்சிக்கும்போது மனஅழுத்தம் மட்டுமே ஏற்படும். உங்களுக்கும் வேதனைதான் மிஞ்சும்.

#2 உண்மையான அன்பு என்பது உங்களுடைய குழந்தைக்கு தேவையானதை மட்டுமே செய்வது என்பதை நினைவில் கொள்ளுங்கள்


சத்குரு கருத்துப்படி:

“பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவதை குழந்தைகளது ஆசைகளைப் பூர்த்தி செய்வதென்று தவறாக புரிந்து கொண்டு, அவர்கள் கேட்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்தார்கள் என்றால், அது முட்டாள்தனம் தானே? அன்பு செலுத்துவதென்றால், எப்பொழுது என்ன தேவையோ, என்ன அவசியமோ, அதைத்தான் செய்ய வேண்டும். உண்மையிலேயே யாரையாவது நீங்கள் விரும்பும்போது, அதனால் உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும் நீங்கள் விரும்புபவர்களுக்கு சிறந்ததையே செய்ய தயாராக இருப்பீர்கள்.”
பெற்றோராக நாம் அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்க ஆசைப்படுவதுண்டு. நாம் கற்பனை செய்த பெற்றோராக நாம் இல்லாத பட்சத்தில் குற்ற உணர்வால் மிகவும் சோர்வாகவே உணரலாம்.
எனினும், உங்களுடைய மனதிலிருந்து இந்த எண்ணத்தை வெளியேற்ற வேண்டும்! உண்மையான அன்பு, பரிசுகளால் மழை பொழிவதும் விருந்து பலவற்றை வழங்குவதும் அல்ல. நல்ல மக்களாக வருவதற்கான பாதையை அவர்களுக்கு வழிவகுத்து தருவதே. அதுவே உங்கள் வேலை.
உங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு சலனத்திற்கும் இசைந்து கொடுப்பதல்ல, ஒரு பெற்றோரின் பணி. மாறாக, நீங்கள் அவர்களை போதுமான அளவு நேசித்து கடினமாக இருப்பினும் கூட, அவர்களுக்கு தேவையானதை மட்டுமே செய்ய வேண்டும்.

#3 குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டும்

அடிக்கடி, நாம் நம் குழந்தைகளை முதிர்ந்தவர் போல் நடந்துகொள்ள அவசரப்படுத்துகிறோம். நாம் வேகமாக திறமைகளை கற்றுக்கொள்ளுமாறும் விரைவாக தயாராகுமாறும், அவர்களிடம் அனத்திக் கொண்டே இருக்கிறோம். ஆனால் உண்மையில் இதில் யாருக்கு நன்மை?
குழந்தைகள் விரைவாக வளர்ந்துவிட்டால் நமக்கு அது குறைந்த அளவிலான அழுத்தத்தையும் கவலையையும் தருமென நினைக்கிறோம். ஆனால் போகப்போக, நாம் குழந்தையின் உள்ளார்ந்த அழகான உயிர்ப்பினையும் மகிழ்ச்சியாக இருக்கும் திறனையும் குறைத்துவிடுகிறோம்.
அதற்கு பதிலாக முதிர்ச்சியை நோக்கி அவர்களை அவசரப்படுத்தாமல் விளையாட்டை தீவிரப்படுத்துவதும் தூய, கலப்படமற்ற மகிழ்ச்சியை உணர்வதற்கும் அவர்களை நம் நினைவூட்டிகளாக அமைத்துக் கொள்வதற்கும் நமக்கு நாமே அனுமதி வழங்க வேண்டும். குழந்தைகள் தானாகவே போதுமான அளவு வேகமாக வளர்வார்கள். உங்கள் சொந்த நலனுக்காக அவர்களை விரைவாக, பாதை நெடுக துரிதப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.

#4 உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள்

நம் குழந்தைகள் அவர்களை சுற்றி நடப்பதையும், சுற்றி இருப்பவர்களின் சிந்தனை மற்றும் செயல்முறைகளையும் கற்றுகொண்டு பின்பற்றுகிறார்கள்.
தன் தாயும் தந்தையும் மன அழுத்தத்துடன் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்தால், அதை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்டு, அதையே உள்வாங்கிக் கொண்டு இறுதியில் அதையே தானும் செய்வார்கள். இதனால், நீங்கள் ஏதேனும் ஒரு தவறான செய்கை மூலம் உங்கள் குழந்தையை தோல்விக்கும் ஆபத்திற்கும் இட்டுச் செல்கிறீர்கள் என்று அர்த்தமில்லை, உங்களுடைய நடவடிக்கைகளே போதும்.
அப்படியென்றால் நான் எல்லா நேரமும் 100% விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம். அப்படியில்லை, உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் வெளிப்புற சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும்.
சத்குரு கூறுவது போல, “நீங்கள் உண்மையில் உங்கள் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க ஆர்வமாக இருந்தால், முதலில் நீங்கள் அமைதியும் அன்பும் நிறைந்த மனிதராக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.”
நீங்கள் எப்போதும் சோர்வாகவும் அழுத்தத்துடனும் இருந்தால், உங்கள் நல்வாழ்வினை மேம்படுத்த தேவையான செயல்களைச் செய்யுங்கள். இதன்மூலம், நீங்கள் உங்கள் குழந்தையிடம் அன்பும் ஆதரவும் உள்ள பெற்றவராக இருக்க முடியும்.
உங்கள் அட்டவணையில் யோகாவோ உங்களை முழுமையாய் ஈடுபடச் செய்யும் வேறெதாவது செயலோ இருந்தால் சிறப்பு, அது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். உங்களுக்காக நீங்களே நேரம் எடுத்துக் கொள்வது பேராசை அல்ல – உங்கள் குழந்தையை கவனிக்க உங்களை பார்த்துக் கொள்வது முக்கியம் என்ற யோசனையை அது வலுவூட்டும்.
உங்கள் குழந்தைக்கு நிலையான வழிகாட்டுதலும் ஆதரவும் நிச்சயம் தேவை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இந்த தேவைகளுக்கு ஒரு வசீகரமான வெளியீட்டினை வழங்கவில்லை என்றால், உங்கள் குழந்தைகள் வெளியில் ரோல்மாடல்களை தேட ஆரம்பிப்பார்கள். அவர்கள் முன்மாதிரியாக கொள்ளும் நபர்கள் நல்ல முன்னுதாரணமாக இல்லாமலும் போக வாய்ப்புண்டு.
நீங்கள் உண்மையில் மகிழ்ச்சிமிக்க நபராக இருக்கும்போது, உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்லாவிட்டாலும் வந்து உங்கள் ஆலோசனையை கேட்பார்கள். இதனால் உங்கள் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் நேர்மறையான உறவு வகையை உருவாக்கும். மேலும் பிற்காலத்தில், நல்ல மனிதர்களாக அவர்கள் வாழ வழிவகுக்கும்.

நன்றி சத்குரு பிளக்கர்.