தந்தை சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்... மகன் ஐஏஎஸ் அதிகாரி!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:31 PM | Best Blogger Tips
தந்தை சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்... மகன் ஐஏஎஸ் அதிகாரி!

வறுமைதான் என் வைராக்கியத்தை உறுதிப்படுத்தியது..!

படிப்பறிவும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத நாராயண், வாரணாசியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர். இவருக்கு மூன்று பிள்ளைகள். சாப்பாட்டுக்கே சிரமமான நிலைமை. இந்த வறுமையான சூழ்நிலையிலும் தன் மகன் கோவிந்த் ஜெய்ஸ்வாலை ஐஏஎஸ் படிக்க வைத்துள்ளார். இன்று கோவிந்த் உதவி ஆட்சியர்.

தான் படிக்காவிட்டாலும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த நாராயண், தன் சிரமமான பொருளாதார நிலைமையிலும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்துள்ளார். அதில் இளைய மகனான கோவிந்த் ஜெய்ஸ்வால்தான் இப்போது ஐஏஎஸ் அதிகாரி.

நெருக்கடி மிகுந்த வாரணாசி பகுதியில் 12 x 8 என்ற அளவுகொண்ட ஒரு சிறிய அறைதான் கோவிந்தின் வாடகை வீடு. அந்தச் சிறிய அறையில்தான் கோவிந்தின் படிப்பு, வீட்டின் சமையல், துணிகளைத் துவைத்தல் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரின் இரவு நேர உறக்கமும். வறுமை ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, கூடவே கோவிந்தின் ஐஏஎஸ் கனவும் வளர்ந்திருக்கிறது. வீட்டைச் சுற்றியுள்ள மின்தறி சத்தங்கள், தொழிற்சாலைகளின் புகை, பதினான்கு மணி நேரம் மின்வெட்டு எனப் பல்வேறு பிரச்சினைகள் அவரது கனவுக்கு முட்டுக்கட்டை போட்டாலும் அவற்றை வென்று, கனவைக் கைப்பற்றியிருக்கிறார் கோவிந்த்.

சிறு வயதில் மற்ற பிள்ளைகளைப் போல வீதியில் விளையாடுவது, நண்பர்களுடன் அரட்டை என எதுவும் இல்லாமல் படிப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். இதனால், மற்ற மாணவர்கள் கோவிந்தை கூச்ச சுபாவம் மிக்க மாணவராவே கருதினர். ஆனால், உண்மையில் கோவிந்த் தனது லட்சியத்துக்காக தனது சிறு வயது பால்ய சந்தோஷங்களை தியாகம் செய்துள்ளார் என்பதே உண்மை.

கணக்குப் பாடத்தில் வல்லவரான கோவிந்த், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே மற்ற ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களுக்கும் மாலை வேளையில் டியூஷன் சொல்லிக் கொடுத்து அதில்வரும் வருமானத்தில் தன் அக்காக்களுக்கும், குடும்பத்திற்கும் உதவிகரமாக இருந்துள்ளார். பள்ளியில் அவர்தான் முதல் மாணவர். பின்பு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப் படிப்பினை முடித்து, ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார். மேலும், தனது ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சிக்காக டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் கோவிந்த். அந்த நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக கோவிந்தின் தந்தைக்கு காலில் அடிபட்டு படுக்கையில் முடங்கினார். ஒரு பக்கம் தன் கனவு, இன்னொரு பக்கம் தந்தையின் உடல் நிலை என இறுக்கமான சூழ்நிலையில் இருந்த கோவிந்திற்கு அவரது தந்தை நாராயண் நம்பிக்கை அளித்து, டெல்லிக்குச் சென்று படிக்க, மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய இடத்தினை 30,000 ரூபாய்க்கு விற்று, கோவிந்தை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன் குடும்பத்தின் வறுமை நிலையை எண்ணி கடுமையாகப் படித்த கோவிந்த், 2006ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். மேலும் இரண்டு வருட ஐஏஎஸ் பயிற்சியில் தனக்குக் கிடைத்த உதவித்தொகையை அடிபட்ட தந்தையின் மருத்துவச் செலவிற்காக அனுப்பியுள்ளார் கோவிந்த். 

வெற்றிபெற்ற அனுபவத்தை கோவிந்த் கூறும்போது, "சிறு வயதில் பகல் நேரத்தில் தொழிற்சாலைகளின் சத்தத்தில் நான் கணக்குப் பாடங்களின் சூத்திரங்களை மட்டுமே போட்டுப் பார்ப்பேன். ஏனென்றால், அந்தச் சத்தத்தில் மற்ற பாடங்கள் சரியான முறையில் மனதில் ஏறாது. சத்தங்கள் மாலை நேரங்களில் குறைந்ததும் மற்ற பாடங்களைப் படிப்பேன். அப்துல் கலாம் தான் என்னுடைய ஹீரோ. என்னுடைய ஐஏஎஸ் கனவு நிஜமாக என்னுடன் இருந்து நம்பிக்கையூட்டியது அவர் எழுதிய, ‘அக்னி சிறகுகள்’ புத்தகம். மேலும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி உற்சாகம் அளித்த சகோதரிகளுக்கும், என் கனவின் மேல் நம்பிக்கை வைத்து என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்த என் தந்தைக்கும் மனம் நெகிழ்ந்த நன்றியைக் கூறுகிறேன். என்னுடைய சிறுவயது நாட்கள் கஷ்டமானவையாக இல்லாமல் போயிருந்தால் நான் ஐஏஎஸ் ஆகியிருக்க வாய்ப்பில்லை. அந்த வறுமையும் கஷ்டங்களும்தான் என் வைராக்கியத்தை அதிகப்படுத்தி, பொறுப்புடன் படிக்க காரணமானது" என்கிறார் கோவிந்த். 

ஐஏஎஸ் பிரதானத் தேர்வில் கணக்கினைத் தவிர்த்து விட்டு தத்துவம், வரலாற்றுப் பாடங்களைப் பிரதானமாகத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார் கோவிந்த். "உலகில் எல்லாப் பாடங்களும் எளிதில் படிக்கக் கூடியவைதான். ஆனால், அதில் நாம் எவ்வளவு தூரம் ஆழமாக கற்றுக் கொள்கிறோம் என்பதே முக்கியம்" என்கிறார். ஐஏஎஸ் தேர்வில் அனைத்துப் பாடங்களையும் தாய்மொழி ஹிந்தியிலேயே எழுதியிருக்கிறார் இவர். "தாய்மொழியில் தேர்வு எழுதுவது பிரச்சினை கிடையாது. நாம் கற்றதை தெளிவான முறையில் எப்படித் தேர்வில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இத்துடன் தளராத நம்பிக்கையும் இருந்தால் எந்தத் தடையையும் உங்களால் வெல்ல முடியும்" என்று சொல்லும் கோவிந்த் ஜெய்ஸ்வால், இப்போது நாகாலாந்து மாநிலத்திலுள்ள சூன்ஹிபோடோ (zunheboto) என்ற மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிகிறார்.

- என். ஹரிபிரசாத்

- என். ஹரிபிரசாத்,

நன்றி பசுமைப் புரட்சி Green Revolution