ராஷ் பிஹாரி போஸ்... மறத்தல் தகுமோ?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 PM | Best Blogger Tips
 


சிம்மசொப்பனம், வீரம், புரட்சி என்று படித்தால், உடனே பளீரிட வேண்டிய பெயர் ராஷ் பிஹாரி போஸ்.

வங்கத்தில் பர்தவான் மாவட்டத்தில் உள்ள கபால்டா எனும் கிராமத்தில் 1886-ம் ஆண்டு மே 25-ம் தேதி பிறந்தவர். தமது 15-வது வயதில், சாரு சந்திரராய் என்பவர் தலைமையில் நடந்த 'சுஹ்ரித் சம்மேளம்என்ற புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் ராஷ் பிஹாரி போஸ்.

குதிராம் போஸ் வீசிய குண்டில் ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டதால் அலிப்பூர் சதி வழக்கு இவர் மீதும் பாய்ந்தது. வங்கத்தை விட்டு டேராடூனுக்கு கிளம்பி போனார். அங்கே அரசாங்கப் பணியில் சேர்ந்து கொண்டே ஒரு மாபெரும் திட்டத்தை வகுத்தார் போஸ்.

வைஸ்ராயின் கொலைத்திட்டம் அது. வெடிமருந்து, கொஞ்சம் ஆணிகள், கொஞ்சம் ஊசிகள் எல்லாமும் சேர்த்து குண்டுகள் தயாராகின. பெண் வேடம் பூண்டு கொண்டு இவரும், பசந்த குமார் பிஸ்வாசம் கடிகார கோபுரத்தின் மேல் டெல்லியில் ஏறிக்கொண்டார்கள். வைஸ்ராயின் மீது சிகரெட் டப்பாவில் இருந்த குண்டு வீசப்பட்டது. இன்னொரு குண்டு கூட்டத்தின் பக்கம்; மூவாயிரம் பேர் பாதுக்காப்புக்கு இருந்தபொழுதும் இது நடந்தே விட்டது. இதை முடித்துவிட்டு அமைதியாக டேராடூனுக்கு திரும்பி ரயிலேறி வந்துவிட்டார் போஸ். அத்தோடு நில்லாமல் குண்டுவெடிப்பை கண்டித்து கூட்டம் வேறு நடத்தினார். வழக்கில் முக்கிய குற்றவாளி இவர்தான் என்று தெரிந்து கொள்ளவே மூன்று வருடங்கள் ஆனது ஆங்கிலேய அரசுக்கு . இவரை அவரின் வாழ்நாள் வரை பிடிக்கவே முடியவில்லை என்பதே இவரின் சாதுரியத்தை சொல்லும்.

முதல் உலகப்போர் சமயத்தில் அமெரிக்காவில் இருந்து இயங்கிய கதர் கட்சியுடன் இணைந்து ஆங்கிலேய படைக்குள் நுழைந்து தாக்கி இந்தியாவை மீட்பது என்று முடிவு செய்தார் ராஷ் பிஹாரி போஸ். அதை ஆங்கிலேய அரசு மோப்பம் பிடித்து இவரைப்பிடிக்க வலை விரித்து தேட ஆரம்பித்தது.

இருந்த ரயிலை சுற்றி வளைத்தால் சாமியார் வேஷம் போட்டு எஸ்கேப் ஆகி விட்டார் மனிதர். இதைவிட பெரிய கூத்து... கைது செய்ய வந்த அதிகாரிக்கே குதிரை ஓட்டி நையாண்டி செய்து தப்பித்தது. இன்னொரு முறை இறந்து போய் ஆவியாக சுற்றிக்கொண்டு இருப்பதாக நம்பப்பட்ட கிழவான் வேஷம் போட்டு கம்பி நீட்டினார்.

லாகூர், சிங்கப்பூர் என்றெல்லாம் பயணம் செய்து இறுதியில் ஜப்பான் போய் சேர்ந்தார். விடாமல் துரத்தினார்கள் உளவாளிகள்; புத்த மதத்துறவி, வணிகர், டீ மாஸ்டர், டிராமா ஆர்டிஸ்ட் என்று அங்கேயும் அடிக்கடி வேஷம் போட்டு தப்பித்தார். இறுதியில் சோம அய்சோ என்பவரின் நகரமுயா உணவகத்தில் தங்கிக்கொண்டார். அவரின் பெண்ணை மணந்து ஜப்பானிய பிரஜை ஆனார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டபோதும், ராஷ் பிஹாரிபோசின் புரட்சி எண்ணம் கனன்றுகொண்டே இருந்தது. ஜப்பானில் இருந்த மற்றொரு விடுதலை வீரரான ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயருடன் இணைந்து, ஜப்பான் அதிகாரிகளுடன் நெருங்கியதொடர்பு கொண்டார். 1942-ல் ராஷ் பிகாரி போஸ், ஜப்பானில் உள்ள இந்திய மாணவர்களில் சுதந்திர வேட்கை கொண்டவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில், இந்தியா விடுதலை பெறுவதற்கு பிரிட்டிஷை எதிர்க்கும் வலிமையான ராணுவம் தேவை என்று அறிவித்தார். அதற்கான முதற்படியாக இந்திய சுதந்திர லீக் ஒன்றை உருவாக்கினார். அதற்கு, ஜப்பான் அரசு உதவி செய்தது. அதற்கு பிறகு போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட இந்திய வீரர்களை கொண்டு மோகன் சிங் என்பவரை தளபதியாக கொண்டு  இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அதன் தலைமைபொறுப்பை நேதாஜி சுபாஸ் சந்திர போஸிடம் தந்தார்.

எண்பதாயிரம் பேர் கொண்டு பர்மா, ஜப்பான், சிங்கப்பூர் என்று எண்ணற்ற பகுதிகளில் இருந்த இந்தியர்கள், இந்திய வீரர்கள் குறிப்பாக தமிழர்கள் பங்கெடுக்க இந்தியாவின் மீது போர் தொடுத்தார்கள் அவர்கள். உலகப் போரில் ஜப்பானின் தோல்வி, ஜெர்மனியின் சரணாகதி எல்லாமும் பெரும் சிக்கலை உண்டு செய்தன. ஜப்பானில் குண்டுகள் வீசப்பட்டபொழுது மனைவி, பிள்ளைகளை பத்திரமாக அனுப்பி விட்டு போர்க்களம் புகுந்து 21.01.1945-ல் போரில் கொல்லப்பட்டார்.

ஜப்பான் அரசு அவரின் வீரத்தை மெச்சி, அவருக்கு மறைவுக்குப் பிந்தைய 'ORDER OF RISING SUN ' என்ற உயர் விருதை வழங்கி  கௌரவித்தது.


இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, ரத்தத்தால், போரால் இந்த நாட்டை மீட்கும் பெருங்கனவை நோக்கி பயணப்பட்ட ராஷ் பிஹாரி போஸை மறத்தல் தகுமோ?

இன்று - மே 25: ராஷ் பிஹாரி போஸ் பிறந்த நாள்.

- பூ.கொ.சரவணன்,  Vikatan Emagazine