நமது எண்ணத்திற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது. செயலுக்கு ஏற்பவே முடிவு அமைகிறது.
நீங்கள் விரும்பியவாறு உங்களால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாவிட்டால், விரும்பிய செயல் புரிய இயலவிலலை என்றால்,
எத்தகைய சாக்குப்போக்குச் சொல்லியும் பயனில்லை.
ஏன்?
தலையைச் சுற்றிப் பாருங்கள்; அல்லது ஊரைச் சுற்றிப் பாருங்கள். நொடிதோறும் எத்தனை பேர் எத்தனை சவால்களை வென்று கொண்டிருக்கிறார்கள்?
கல்வித் தகுதி இல்லாதவர் கூடச் சாதனையின் விலாசத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்.
‘உலகப் பொருளாதாரமே சுணங்கிக் கிடக்கிறதாம்; அதனால் நான் இன்று வேலைக்குப் போக மாட்டேன்’ என்றெல்லாம் மனைவியிடம் வம்பு பண்ணாமல் சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவர் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஏகப்பட்ட பிள்ளை குட்டிகளுடன் இருப்பவர் உற்சாகமாய் இருக்கிறார்;
மனைவியுடன் சண்டைக் கோழியாய் வாழ்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அணுதினமும் காதல் என்று இல்லறத்தை மகிழ்வாய் மாற்றிக் கொண்டுவிட்டார்.
தெருவுக்குத் தெரு இப்படி நிறைய உதாரணங்கள் காணலாம்.
இவர்களெல்லோரும் நமக்கு என்ன உணர்த்துகிறார்கள்? வாழ்க்கையில் அவர்கள் அவர்களுக்கான தேவைகளைச் சாதிக்க நினைத்தார்கள். அதைச் சாதிப்பது முக்கியம் என்று தங்களது மனவோட்டத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டார்கள். அதில் லயித்துச் செயல்பட்டார்கள்.
அவ்வளவுதான்!
சூழ்நிலைகளையும் மக்களையும் நாம் குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் நமது மனோபாவம் மாறிவிடும் அதற்கேற்ப நமது மன மகிழ்வின் விகிதாச்சாரம் நேரெதிராய் அமைந்துவிடும். எந்த அளவு குறையோ அந்த அளவிற்கு மன மகிழ்வு குறையும்.
நமக்கு வாழ்க்கை என்பது ஒரு முறையே. அந்த ஒரேயொரு வாய்ப்பில் ‘என்னால் ஏன் மன மகிழ்வுடன் இருக்க முடியவிலலை’ என்று குறைகளின் பட்டியலைப் பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்தால், விஷயம் ஒன்று மட்டுமே!
நீங்கள் மன மகிழ்வடைய முயலவில்லை.
அதையெல்லாம் ஓரமாய் ஒதுக்கிவிட்டு மகிழ்வுடன் வாழ்வதற்கான வழிவகைகளைத் தேடினால் போதும். உங்கள் மனம் தயாராகிவிடும். கொஞ்சம் முயன்று பாருங்கள். “அட! மனம் மகிழத் தயார்” என்பதை உணர்வீர்கள்.