கல்விக் கடன் எப்படி வாங்கலாம்? முழுமையான தகவல்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 AM | Best Blogger Tips


பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம், எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.

உடனடியாக வேலை கிடைக்கக்கூடிய படிப்பு நல்ல கல்லூரியில் கிடைக்குமா என்கிற கவலை ஒருபக்கம்... அப்படி கிடைத்துவிட்டால் படிப்புச் செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என்கிற கவலை இன்னொரு பக்கம்... மகன்/மகளின் கல்லூரிப் படிப்புக்கென கொஞ்சம் பணம் சேர்த்தவர்களை விட்டுவிடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன்தான்.

இந்த கல்விக் கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும், எதன் அடிப்படையில் கல்விக் கடன் தருவார்கள்? கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்?

அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுத் துறை/தேசிய அல்லது தனியார் வங்கியில் கல்விக் கடன் பெறலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புள்ள கல்விப் பிரிவை தேர்வு செய்வது கல்விக் கடனை பெறுவதற்கு அடிப்படையான விஷயம்.

பிரிவைத் தேர்வு செய்வது போல, சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வ திலும் கவனம் அவசியம். கல்லூரியில் சேர்ந்த பின்னர் அருகில் இருக்கும் வங்கி மேலாளரை அணுகி கல்விக் கடன் பெறுவதற்கான விதி முறைகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கல்வி பயில சேர்ந்திருக்கும் கல்லூரி யிருந்து போனோஃபைட் என்று சொல்லப்படுகிற சேர்க்கைக் கான ரசீதையும், ஃபீஸ் ஸ்ட்ரக்சர் என்று சொல்லப் படுகிற முழுப் படிப் புக்குமான செலவு விவரம் அடங்கிய சான்றிதழ்களையும் வாங்கி வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தவிர, பிளஸ்டூ மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றுக்காக ரேஷன் கார்டு அட்டையின் அட்டஸ்டேட் நகல், வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் முடிந்தமட்டும் பிளஸ்டூ படித்து விடுமுறையில் இருக்கும்போதே தங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் வங்கிகளுக்கு பெற்றோருடன் சென்று கல்விக் கடன் குறித்து விசாரித்துவிடுவது நல்லது.

''கல்விக் கடன் பெற நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்தி ருக்கும் வங்கிகளையே முதலில் அணுகலாம். சேமிப்புக் கணக்கு இல்லாத வங்கிகளையோ, அறிமுகமே இல்லாத வங்கி களையோ நாடும் போது கல்விக் கடன் கிடைக்க, நேரம் நிறைய விரயமாகலாம். சிறிய ஊர்களில் இருப்பவர்கள் லீட் வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற லாம்'' என்றார் ஐ.ஓ.பி. மேலாளர் கிருஷ்ணன்.

கல்விக் கடன்: யாருக்கு கிடைக்கும்?

இந்திய அரசாங்கம் கல்விக் கடன் பெற தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்கிற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் பிறப்பித்திருக்கிறது. ஏழை மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர் வாங்கிய மதிப்பெண்களுக்கு ஏற்ப கல்விக் கடன் கிடைக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கும்.

எதிர்காலத்தில் வேலை வாய்ப்புள்ள இளங்கலை படிப்புகள் (பி.காம்., பி.எஸ்.சி., பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்புகள்), முதுகலை படிப்புகள் (எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகள்) மற்றும் தொழிற்கல்விகள் (பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், மேலாண்மை போன்ற படிப்புகள்), ஐ.ஐ.டி., என்.ஐ.எஃப்.டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களில் இருக்கும் படிப்புகள் மற்றும் சி.ஏ., சி.எஃப்.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ. போன்ற படிப்புகளுக்கும், டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் கிடைக்கும்.

ஆனால், வேலை வாய்ப்பில்லாத படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் தயங்கவே செய்யும். அது மாதிரி தரப்படும் கடன்கள் திரும்ப வருமா என வங்கிகள் அஞ்சுவதே இதற்கு காரணம். தவிர, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கண்டிப்பாக கிடைக்காது.

கல்விக் கடன் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் அவசியமாக இருக்க வேண்டும்.

* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

* வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகளாக கருதப்படும் கல்விகளைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.

* அரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந் திருக்க வேண்டும்.

* பிளஸ்டூ மதிப்பெண்கள் கூட்டு சதவிகிதத்தின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் 50%-ம், மற்ற பிரிவினருக்கு 60%-மாகவும் இருத்தல் அவசியம்.

எவ்வளவு கிடைக்கும்?

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர் களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் கிடைக்கும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் கிடைக்கும்.

இதற்கு அதிகமாக கல்விக் கடன் தேவை எனில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலோ, அவர்கள் தேர்வு செய்திருக்கும் படிப்பின் எதிர்காலத்தின் அடிப்படையிலோ அல்லது பெற்றோர்களின் வருமான விகிதம் போன்ற அடிப்படை விஷயங்களை சரி பார்த்து அதிக கல்விக் கடன் கேட்கும் மாணவனுக்கு கடன் கொடுக்கலாமா, வேண்டாமா என்பதை வங்கியே முடிவெடுக்கும்.

கல்விக் கடன்: உத்தரவாதம் தேவையில்லை!

கல்விக் கடன் நான்கு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை. இன்றைய தேதியில் தமிழகத்தில் பல மாணவ, மாணவிகளின் தேவை இதற்குள் அடங்கிவிடும் என்பதால் கல்விக் கடன் வாங்குகிற பெற்றோர்கள் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரவேண்டியதில்லை.

நான்கு லட்சத்திலிருந்து 7.5 லட்சம்வரை கல்விக் கடன் என்கிறபோது பெற்றோரில் ஒருவரோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபர் உத்தரவாதம் தரவேண்டி வரும். ஏழு லட்சத்துக்கு அதிகம் என்கிற போது தன் வசம் இருக்கும் சொத்துக்களில் ஏதாவது ஒன்றை பிணையமாக வைக்க வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

எந்த செலவு அடங்கும்?

வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் கீழ்க்கண்ட செலவினங்கள் முழுமையாக அடங்கும்.

* கல்லூரியில் கட்ட வேண்டிய கல்வித் தொகை.

* தேர்வுக் கட்டணம், புத்தகம் மற்றும் ஆய்வகக் கட்டணம்.

* விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள்.

* மாணவர்களின் கல்விச் சாதனங்கள் மற்றும் சீருடைகள்.

* படிப்பிற்கான கம்யூட்டர் வசதி மற்றும் புராஜெக்ட் செலவினங்கள்.

படிப்பில் கவனம் தேவை!

கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில், செமஸ்டர் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு இடையே வங்கி மேலாளரிடம் காட்ட வேண்டும்.

ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், மேற்கொண்டு தர வேண்டிய கடன் தொகை நிறுத்தப்படலாம். மீண்டும் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்ற பிறகே வங்கியிடமிருந்து கல்விக் கடனை எதிர்பார்க்க முடியும்.

கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, ஒழுங்கீனமாக நடந்து கொள்வதன் மூலம் கல்லூரி யிலிருந்து விலக்கப்பட்டாலோ கல்விக் கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.

கல்விக் கடனை வழங்குவதற்காக அரசாங்கமே தனியாக ஒரு வங்கியை ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கல்விக் கடனுக்கான வங்கி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் இந்த வங்கியில் மட்டுமே கல்விக் கடனை பெற முடியும். மற்ற வங்கிகளில் பெற முடியாது.

கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு தரப்படும் டிகிரி சான்றிதழில், எந்தவொரு மாணவன்/மாணவி கல்விக் கடன் வாங்கி படித்திருந்தாலும் இவர்கள் இந்த வங்கியில் கல்விக் கடன் வாங்கி படித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட போகிறார்களாம். இப்படி செய்யும் பட்சத்தில் கல்விக் கடன் வாங்கி படித்த மாணவன் வேலைக்குச் செல்கிற போது அந்த நிறுவனம் வங்கியைத் தொடர்பு கொண்டு கல்விக் கடன் வாங்கியிருக்கும் மாணவன்/மாணவியோ கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாம்.

கல்விக் கடன்: எப்படி திரும்பக் கட்டுவது?

கல்விக் கடனுக்கான அசலையோ அல்லது வட்டியையோ படிக்கிற காலத்திலேயே கட்ட வேண்டும் என எந்த வங்கியும் சொல்வதில்லை. படித்து முடித்து ஓராண்டு ஆனதும் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதம் கழித்தே வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த ஆரம்பித்தால் போதும். முழுக் கடனையும் திருப்பிச் செலுத்த குறைந்தது ஐந்து ஆண்டுகள் அவகாசம் தரப்படும். படித்து முடித்த பிறகு வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு, வாங்கும் சம்பளம் அடிப்படையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை அவகாசம் தரப்படும். இந்த முடிவு வங்கிக்கு வங்கி மாறுபடும்.

படிக்கும்போது வட்டி கட்ட தேவையில்லை!

கல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அவர்களின் வருமான சான்றிதழை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருமான சான்றிதழை ஆரம்பத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. ஆண்டுக்கொருமுறை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் படிக்கும் காலத்தில் வாங்கும் கடனுக்கான வட்டியை பெற்றோர்கள் கட்ட வேண்டிய அவசியம் கிடையாது.

அந்த கடனுக்கான வட்டியை மத்திய அரசாங்கம் வங்கிகளுக்கு செலுத்திவிடும். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்ட ஆரம்பிக்க வேண்டும். இந்த சலுகை வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடையாது.

கடனை சீராக கட்டினால் சலுகை!

இடைவிடாமல் சரியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சதவிகித வட்டி சலுகை தரப்படும். பொதுவாகவே கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாணவிகளுக்கு 0.5 சதவிகிதம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் கல்விக் கடனை மாதத் தவணை யாகத்தான் கட்டி வருகி றார்கள். விரைவில் கடனை அடைக்க நினைப்பவர்கள் வேலையின் மூலம் எப்போதெல்லாம் பணம் கைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடனை அடைக்கலாம்.

வரிச் சலுகை என்ன?

திரும்பச் செலுத்தும் கல்விக் கடனுக்கு வட்டிக்கு மட்டும் 80-இ பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு கிடையாது. யாருக் காக கல்விக் கடன் பெறப்பட் டுள்ளதோ, அவருக்குத்தான் வரிச் சலுகை கிடைக்கும். கடனை திரும்பச் செலுத்த ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் வரை கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை பெறலாம்.

கல்விக் கடன்: கட்டாமல் போனால்..?!

மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ, அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். காவல் துறை நடவடிக்கை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன், கடன் திருப்பிக் கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தைகூட வங்கி அணுகி, கடனை கட்டச் சொல்லலாம்.

வேலை கிடைக்காவிட்டால்..!

கல்விக் கடன் வாங்கி படித்த மாணவர், படித்து முடித்தபின் வேலை கிடைக்காவிட்டால், அது தொடர்பான விவரத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படும். எனவே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கடனை கட்டாமல் விடலாம் என்று நினைக்க வேண்டாம்.

முதுகலைக்கும் கடன்!

இளநிலை படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முதுநிலைப் படிப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா எனில், நிச்சயம் கிடைக்கும். இது அனைத்து கல்விக்கும் பொருந்தும்.

இன்ஷூரன்ஸ் அவசியம்!

கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருந்தால், வங்கி முதலில் அவர்களை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி அறிவுறுத்தும்.

ஏனெனில், மாணவருக்கு திடீரென்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவர்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையை இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையிலிருந்து வங்கி எடுத்துக் கொள்ளும்.

கல்விக் கடன்: மறுக்க என்ன காரணம்?

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கியில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம். மேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்கப்படலாம்.

எல்லா சான்றிதழ்களையும் தந்த பிறகும் கல்விக் கடன் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அந்த காரணம் நியாயமானதாக இல்லை எனில், உங்களுக்கு கல்விக் கடன் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு.

யாரிடம் புகார் செய்வது?

''அதிக மார்க்குகளை எடுத்திருக்கிறேன். வங்கிகள் கேட்கும் எல்லா சான்றிதழையும் தந்துவிட்டேன். ஆனாலும், கல்விக் கடன் தர மறுக்கிறார்கள்'' என்கிறவர்கள், முதலில் அந்த வங்கியின் மண்டல மேலாளரை அணுகி பிரச்னையை எடுத்துச் சொல்லலாம். உங்கள் பிரச்னைக்கு உரிய பதிலை அவர் சொல்லவில்லை எனில், வங்கித் தலைமைக்கு மின்னஞ்சல், இ-மெயில் அல்லது தபால் மூலம் உங்கள் பிரச்னையை தெரியப்படுத்தலாம். அப்போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம்.

எளிதில் கடன் கிடைக்க..!

கல்விக் கடன் கேட்டு தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கிகளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் கிடைக்கலாம். அதேபோல் தாங்கள் வரவு- செலவு கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் சீக்கிரம் கல்விக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கல்விக் கடன் அடைபடுவதற்கு உத்தரவாதம் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் தனியார் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கல்விக் கடன் என்பது நம்முடைய பிறப்புரிமை! அந்த உரிமையை பறிக்கவோ, பறிகொடுக்கவோ வேண்டாம்!


நன்றி :
கல்வி வழிகாட்டி
  Via தமிழ் -கருத்துக்களம்-