இதய நாள நோய்கள்(கரோனரி ஆர்டரி டீசீஸ்) பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:05 PM | Best Blogger Tips

பிறவியில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதய தசைகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் இதயத்தின் கீழ் அறையில் இடது புறத்தில் இருந்து புறப்படும் பிரதான நாளங்கள் மற்றும் அதன் கிளை நாளங்களில் உள்ள நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்துக்கு இரத்தம் வழங்கும் நாளங்களில் ஏற்படும் நோய்களாலும் இதய நோய்கள் ஏற்படுவதுண்டு.
பொதுமக்கள் பெரிதும் அஞ்சுகிற பரவலான நோய் இதய நாள நோயாகும் (கரோனரி ஆர்டரி டீசீஸ்). இந்த நாளங்கள் தான் இதயத்துக்கு இரத்தம் வழங்குகின்றன.

பொதுவாக இந்த இரத்த நாளங்களின் உள் பகுதியில் கொழுப்பு படிவங்கள் உருவாகிற காரணத்தால் இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டத்தை தடை செய்வதால் இந்த நோய் ஏற்படுகிறது. இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்ததால் போதுமான அளவு இரத்தம் ஓட்டம் ஏற்படாமல் போய்விடுகிறது.

அடுத்து ஆஞ்சினா பெக்டோரிஸ் அதாவது மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படுதல், இத்தகைய வலி சற்று ஓய்வு எடுத்தவுடன் போய்விடும். சில நேரங்களில் தாடை எலும்பு, கைகளுக்கும் பரவும். ஆஞ்சினா பெக்டோரிஸ் என்ற இந்த நோய், இரத்த நாளங்கள் மூலம் வழங்கப்படும் இரத்தத்தின் அளவு குறையும் நேரத்தில் ஏற்படும்.

அடுத்து நிலையற்ற ஆஞ்சினா என்ற மூச்சுத் திணறல் உணர்வு அல்லது மூச்சுத் திணறல் வலி, 4 வதாக மாரடைப்பு, 5 வதாக திடீரென ஏற்படும் மாரடைப்பால் ஏற்படும் இதய ஓட்டம் தடைபடுதல் மற்றும் மரணம்.

இந்த நோய்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் புகை பிடித்தல், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, பரம்பரையாக இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, மன அழுத்தம், மனக் கவலை சோர்வு, உடற் பயிற்சி இல்லாத நிலை, உடல் பருமன், வயது போன்ற சிலவற்றை கூறலாம்.

ஈ. சி. ஜி. யில் காணப்படும் மாற்றங்கள், ஸ்டிரெஸ் டெஸ்ட், ஹோல்டர் (24 மணி நேர ஈ. சி. ஜி) எக்கோ கார்டியோகிராபி, சி. டி. ஆஞ்சியோ (64 சிலைஸ்) போன்ற சோதனைகள் மூலம் இந்த நோய்களை கண்டறியலாம்.



அஞ்சினா பெக்டோரிஸ்

பொதுவாக இந்தப் பாதிப்பு மார்பின் நடுப்பகுதி, வயிற்றின் மேல் பகுதி, கழுத்து, முதுகு, தாடை எலும்பு மற்றும் கைகளில் வலியை ஏற்படுத்தும். மார்பின் கீழ் பகுதி மற்றும் வயிற்றின் மேல்பகுதியில் சற்று அசெளகரியம் ஏற்பட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாலோ அல்லது தண்ணீர் குடித்தவுடனோ போய் விட்டால் இது வாய்வு உபத்திரவம் என்று தவறாக முடிவு எடுத்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள்.

சில நேரங்களில் இந்த அறிகுறிகளோடு வியர்வை, சோர்வு, தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்றவையும் ஏற்படக் கூடும். சிலருக்கு எந்த வலியோ, அசெளகரியமோ ஏற்படாமல் மூச்சுவிட சங்கடமோ அல்லது எரிச்சலோ மட்டும் ஏறபடக்கூடும்.

இத்தகைய அசெளகரியம், எரிச்சல், பாரமான உணர்வு, வலி, அதிக வியர்வை, தலைசுற்றல் போன்றவற்றால் மூச்சுவிட சங்கடம் போன்றவை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டு சற்று ஓய்வுக்குப் பிறகு, அல்லது உணவுக்குப் பிறகு போய்விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய, சிகிச்சை பெறவேண்டிய அவசர அவசிய நிலையாகும்.


மையோ கார்டியல் இன்பங்க்ஷன்

(மாரடைப்பு)
இதுவரையில் கூறப்பட்ட அறிகுறிகள் அரைமணி நேரத்துக்கு மேல் நீடித்தால் அது மாரடைப்பாக இருக்கக்கூடும். 30 சதவீத இத்தகைய நோயாளிகளுக்கு குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள 50 சதவீதம் பேருக்கு இதுபோன்ற அறிகுறிகளே இல்லாமல் சில நேரங்களில் பலவீனம், அதிக வியர்வை மட்டும் கொண்டு மாரடைப்பு ஏற்படக்கூடும்.

எவ்வளவு விரைவாக ஆஸ்பத்திரிக்கு சென்று, எவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ரத்த நாளங்களில் அடைப்புகள் அதிகமாக இருந்து இதய ஓட்டம் நின்றுவிட்டால் திடீர் மரணம் ஏற்படக் கூடும்.

ஏற்கனவே கூறப்பட்ட பரிசோதனைக ளோடு ‘கரோனரி ஆஞ்சியோகிராபி டிஜிட்டல்’ என்ற சோதனை தங்க தர சோதனை என்று அழைக்கப்படும் ஆஞ்சியோ சோதனையாகும். இது மிகவும் பாதுகாப்பான சோதனையாகும்.


இதய நோயை முற்றிலுமாக குணமாக்கிவிட முடியாது. பிரதானமான மற்றும் முக்கியமான சிகிச்சை என்னவென்றால் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது தான்.

இத்தகைய நோய்களுக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. பெரும் பான்மையான நோயாளிகளுக்கு மருந்துகளே நீண்ட காலத்துக்கு நல்ல பலனை தரும்.

இந்த நாளங்களில் ஒன்று அல்லது 2 கடுமையான அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அதை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ரத்த குழாய்கள் சுருங்காமல் இருக்க ஸ்டென்ட் என்று சொல்லப்படும் சிறிய டியூப்பை டாக்டர்கள் பொருத்தி விடுவார்கள்.

இது நல்ல பலனை தருகிறது. இதுதவிர இருதய ஆபரேஷன் அதாவது சிஏபிஜி ஆபரேஷன் செய்து கொள்ளாம். இது நீண்ட காலத்துக்கு மிக சிறப்பான பலனை தரும். இதன் மூலம் மரண அபாயம் மற்றும் பல சிக்கல்கள் நீக்கப்படுகின்றன.

தடுக்கும் வழிகள் :

இந்த நோய் வராமல் தடுப்பது நமது கையில்தான் இருக்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதய நோய்க்கான மருந்துகள் சாப்பிடுபவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டு ஸ்டென்ட் பொருத்தி இருப்பவர்கள், இதய ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள ‘ரிqனிu.

இந்த நோய் இல்லாதவர்கள், நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களும் இந்த நோய் தங்களுக்கு வந்துவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள முடியும். புகை பிடிக்காமல் இருப்பது, உடல் பருமன் இல்லாமல் பார்த்து கொள்வது இரத்தக் கொதிப்பு, நீரிழிவு அதிக கொழுப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி யால் மட்டுமே முடியும். சிலருக்கு இந்த நோய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது வருவதற்கான அறிகுறிகள் இருக்கலாம். இத்தகையவர்கள் உடனடியாக புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும்.

உணவு முறை

நமது உணவு வகைகள் நிச்சயமாக இதய நோய்களைத் தடுக்க பெரும் உதவிகரமாக இருக்கும். குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள், அதிக அளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் இதய சிகிச்சை டாக்டர், உணவு வகை நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ப நமது உணவு வகைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான வழிமுறை என்னவென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு எண்ணையை அது எந்த எண்ணையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். எண்ணையை பயன்படுத்தி சமைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ரிபைன்டு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். பழ வகைகள், காய்கறிகள் சாப்பிடும் அளவை அதிகரிக்க வேண்டும்.

உடற் பயிற்சி

நடைப் பயிற்சி தான் உடற் பயிற்சியில் மிக சிறந்ததாகும். சைக்கிள் ஓட்டுவதும் சிறந்தது. தினமும் காலையிலோ, மதியமோ, மாலையிலோ வெறும் வயிற்றில் இடைவிடாமல் 30 முதல் 45 நிமிடங்கள் வாரத்துக்கு குறைந்தது 5 நாட்களாவது நடக்க வேண்டும்.

இதய நோயாளிகள் தங்கள் உடற் பயிற்சி முறையை டாக்டரின் ஆலோசனை பெற்று வகுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும், டாக்டர் பரிந்துரை செய்தால் இதய நாள நோயாளிகள் யோகா செய்வதும் பலன் அளிக்கும்.


Via FB Karthikeyan Mathan