
அதற்கு மாறாக, மதத்தின் ஆரம்பம் இயற்கை வழிபாடுதான் என்பதற்கு ஆதாரங்கள் பழைய ஆரிய இலக்கியங்களில் இருப்பதாகச் சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் முன்னோர் வழிபாடு இருப்பதற்கு ஆதாரங்கள் இருந்த போதிலும் மிகப் பழைய இலக்கியங்களில் இந்தக் கருத்தின் சுவடே இல்லை. ஆரிய இனத்தின் மிகப் பழைய நூலாகிய ரிக்வேத சம்ஹிதையில் முன்னோர் வழிபாடு பற்றிய செய்தியே காணப்படவில்லை. இயற்கை வழிபாடுதான் அதில் காணப்படுவதாகத் தற்கால அறிஞர்கள் கருதுகின்றனர்.
இயற்கையின் திரைக்குப் பின்னால் இருப்பது என்ன என்று அறிவதற்கு மனித மனம் போராடி வருகிறது. சூரிய உதயம், அழகிய மாலை வேளை, கடும் சூறாவளி போன்ற இயற்கையின் மாபெரும் சக்திகளும், இயற்கையின் எழில் வண்ணங்களும் மனித உள்ளத்தை வியப்பில் ஆழ்த்திச் சிந்தனையைத் தூண்டி வந்துள்ளன. இயற்கையின் திரைக்கு அப்பால். இருப்பவற்றைப்பற்றிச் சிறிதாவது தெரிந்து கொள்வதற்கு மனித மனம் விரும்புகிறது. இந்தப் போராட்டத்தில் மனித மனம், இயற்கையின் இந்தச் சக்திகளை உருவாக்கப்படுத்துகிறது. அவற்றிற்கு ஆன்மாவும் உடலும் அளிக்கிறது. சிலசமயம் அவற்றை அழகு மிக்க தாகவும் சிலசமயம் அனைத்தையும் கடந்ததாகவும் பாவனை செய்கிறது. இவற்றை உருவத்துடனோ உருவமில்லாமலோ எப்படி சித்தரித்தாலும் இந்த முயற்சிகளின் முடிவுகள் எல்லாம் விவரிக்க முடியாத கருத்துக்களாகவே அமைகின்றன. புராதன கிரேக்கர்களிடையே இதைக் காண்கிறோம். அவர்களுடைய புராணங்களில் எல்லாம், இயற்கையைத் தத்துவமாக வழிபடும் செய்திகளைக் காண்கிறோம். இவ்வாறே, புராதன ஜெர்மானியர், ஸ்காண்டினேவியர் மற்றும் பிற ஆரிய இனங்களின் புராணங்களிலும் காண்கிறோம். ஆகவே இங்கும் இயற்கையின் சக்திகளை உருவகப்படுத்துவதே மதத்தின் தோற்றத்திற்கு ஆரம்பமாக இருந்தது என்ற கருத்திற்குப் பல வலுவான ஆதாரங்களைக் காண்கிறோம்.
இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு உடையனவாகத் தோன்றுகின்றன. ஆனால் மதத்தின் தோற்றத்திற்கு உண்மையான வித்து என்று நான் கருதும் ஒரு மூன்றாவது கருத்தின்மூலம் இந்த இரு கருத்துக்களையும் இணைக்க முடியும். புலன்களின் வரையறையைக் கடந்து செல்வதற்கான போராட்டமே மதத்திற்கு வித்து என்று நான் கூறுவேன்.
இறந்த முன்னோர்களை இறந்தவர்களின் ஆவியை மனிதன் தேடுகிறான். அதாவது, உடல் மறைந்த பின், அப்பால் என்ன இருக்கிறது என்பதை ஒரு கணமாவது காண அவன் விரும்புகிறான். இயற்கையின் மாபெரும் தோற்றங்களுக்குப் பின்னால் இயங்கும் சக்தியைப் புரிந்து கொள்ள விரும்புகிறான். இந்தக் கருத்துக்களின் எதைப் பின்பற்றினாலும் ஒன்று மட்டும் உறுதி. அதாவது அவன் புலன்களின் வரையறையைக் கடந்து செல்ல விரும்புகிறான்.
புலன்களின் நுகர்ச்சியால் மட்டும் மனிதனுக்கு மன நிறைவு ஏற்படுவதில்லை. அவன் அவற்றைக் கடந்து போக விரும்புகிறான். இதன் விளக்கம் ஏதோ மர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கனவுகள் மூலமாகவே மதத்தைப் பற்றிய எண்ணம் முதன்முதலாகக் கிடைக்கிறது என்ற கருத்து இயல்பாக இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. மரணமிலாப் பெருநிலையைப் பற்றிய எண்ணம் கனவுகள் மூலம்தான் மனிதனுக்கு முதலில் ஏற்பட்டிருக்கும். என்னவோர் அற்புதமான நிலை அது, அல்லவா? குழந்தைகளும் மன வளர்ச்சி அடையாதவர்களும் கனவிற்கும் நனவிற்கும் இடையில் பெரிய வேறுபாடு காண்பதில்லை என்பது நமக்குத் தெரியும். உடம்பு வெளிப்படையாக இயங்காத தூக்க நிலையிலு<ம் மனம் சிக்கலான பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. எனவே உடம்பு மறைந்தபின்னும் மனம் தொடர்ந்து தன் வேலைகளைச் செய்துகொண்டேயிருக்கும் என்ற முடிவுக்கு மனிதன் வருவதில் என்ன வியப்பு இருக்க முடியும்? அது இயல்பான முடிவே அல்லவா! இந்தக் கனவு கருத்திலிருந்துதான் மனித மனம் மேலும்மே<லும் உயர்ந்த கருத்துக்களுக்குச் செல்கிறது என்பதுதான் என்னைப் பொறுத்தவரை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப்பற்றிய இயல்பான விளக்கம். காலம் செல்லச் செல்ல, பலர் தங்கள் கனவுகள், நினவுநிலையோடு ஒத்திருக்கவில்லை. கனவுநிலையில் மனிதனுக்குப் புதியதொரு வாழ்க்கை எதுவும் அமைவதில்லை. நனவுநிலையின் அனுபவங்களே கனவில் பிரதிபலிக்கின்றன என்று கண்டார்கள்.
ஆனால் இதற்குள் தேடல் தொடங்கிவிட்டது. இந்தத் தேடல் அகவுலகிலாக இருந்தது. மனத்தின் பல்வேறு நிலைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் மனிதன் ஆழ்ந்தான். இந்த ஆராய்ச்சியின் பயனாக, கனவு மற்றும் நனவு நிலைகளைவிட உயர்ந்த நிலைகள் இருப்பதைக் கண்டுபிடித்தான், உலகின் முக்கிய மதங்களெல்லாம் இந்த நிலைகளை ஆனந்தப் பரவச நிலை அல்லது அக விழிப்புணர்வுநிலை என்று கூறுகின்றன.
சிறந்த மதங்களை நிறுவியவர்களும் சரி, அதன் தீர்க்கதரிசிகளும் மத ஆச்சாரியர்களும் சரி, நனவுநிலை, தூக்கநிலை இவை இரண்டுமற்ற மன நிலைகளை அடைந்ததாக எல்லா மதங்களிலும் சொல்லப்படுகிறது. அந்த நிலைகளில் ஆன்மீக உலகம் என்று கூறப்படுகின்ற உலகைப் பற்றிய புதயவற்றை அவர்கள் நேருக்குநேர் கண்டதாகவும் சொல்லப்படுகிறது. நம்மைச் சுற்றியுள்ள உண்மைகளை நனவுநிலையில் நாம் உணர்வதைவிட மிக மிக ஆழமாக, ஆன்மீக உண்மைகளை அவர்கள் அந்த நிலைகளில் உணர்ந்தார்கள்.
உதாரணமாக இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். வேதங்களை ரிஷிகள் எழுதியதாகச் சொல்கிறார்கள். இந்த ரிஷிகள் சில உண்மைகளை உணர்ந்த முனிவர்கள் மந்திரங்களைக் காண்பவர் அதாவது வேத மந்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை உணர்ந்தவர்கள் என்பதுதான் ரிஷி என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள். இவர்கள் தாங்கள் சில உண்மைகளை உணர்ந்திருப்பதாக அறிவித்தார்கள். அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்ட தத்துவங்களை அறிந்து அந்த உண்மைகளை எழுதியும் வைத்தார்கள். யூதர்கள் கிறிஸ்தவர்கள் இவர்களுடைய மதங்களும் இவ்வாறே சொல்வதை நாம் காண்கிறோம்.
பவுத்தர்களை இதற்கு ஒரு விதிவிலக்கு எனலாம். உதாரணமாக புத்தமதத்தின் தென் பிரிவினர். இப்போது ஒரு கேள்வி எழலாம் கடவுள், ஆன்மா இவற்றை புத்த மதத்தினர் ஒப்புக் கொள்வதில்லை என்றால், அவர்களின் மதம் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்து எப்படித் தோன்றியிருக்க முடியும்?
ஆனால் புத்த மதத்தினரும் நிலையான அறநியதிக் கோட்பாடு ஒன்றை ஒப்புக்கொள்கின்றனர். இந்தக் கோட்பாடு நாம் கருதுகின்ற பகுத்தறிவால் உணரப்பட்டதல்ல. புத்தர் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தபோதுதான் இந்தக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். புத்தரின் வாழ்க்கையைப் படித்தவர்களுக்கு, சுருக்கமாக, ஆசிய ஜோதி என்னும் அந்த அழகிய கவிதையிலாவது படித்தவர்களுக்கு புலன்களுக்கு அப்பாற்பட்ட அந்த நிலையை அடையும்வரை புத்தர் போதிமரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது நினைவிருக்கலாம். புத்தரின் உபதேசங்கள் அனைத்தும் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் பிறந்தவைதாம். அறிவால் ஆராய்ந்து தெளிந்தவை அல்ல.
இவ்வாறு மிக உன்னதமானதொரு கருத்தை எல்லா மதங்களும் வெளியிடுகின்றன. மனித மனம் சிலவேளைகளில் புலன்களின் எல்லைகளை மட்டுமல்லாமல், பகுத்தறிவின் ஆதிக்கத்தையும் கடந்து செல்கிறது என்பதுதான் அந்தக் கருத்து, அந்த நேரங்களில், புலன்களின் மூலமாகவோ ஆராய்ச்சி மூலமாகவோ உணர முடியாத பல பேருண்மைகளை மனித மனம் நேருக்குநேர் காண்கிறது. இந்த உண்மைகளே உலகின் எல்லா மதங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.
இந்த உண்மைகளை மறுத்துக் கூறவும், இவற்றைப் பகுத்தறிவின் மூலம் சோதிக்கவும் நமக்கு உரிமை உண்டு. மனித மனத்திற்குப் புலன்களையும் அறிவின் எல்லைகளையும் கடந்து செல்லும் விசித்திரமான இந்த ஆற்றல் உண்டு என்று உலகிலுள்ள எல்லா மதங்களும் உறுதியாகச் சொல்கின்றன இந்த ஆற்றலை அவர் ஓர் உண்மை வாக்குமூலமாகவே வெளியிடுகின்றன.
மதங்கள் கூறும் இந்தக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பது இருக்க, எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு பண்பு இருப்பதை நாம் காண்கிறோம். உதாரணமாக, இயற்பியல் கண்டுபிடித்துள்ள உண்மைகளெல்லாம் தூலமானவை. மதங்களின் இந்தக் கருத்துக்களோ எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. மிகவும் மேம்பாடடைந்துள்ள மதங்களில் இந்தக் கருத்துக்களைக் கலப்பற்ற ஒரு தனிநிலைத் தத்துவமாகவே சொல்லியிருக்கிறார்கள். சிலர் சூட்சுமத் தத்துவமாக இதைக் கூறுகிறார்கள். சிலர் எங்கும் நிறைந்த ஒரு சக்தியாக இதைக் கருதுகிறார்கள். கடவுள் என்னும் சூட்சும உருவமாகச் சிலர் கூறுகிறார்கள். சிலர் அறநெறிக் கோட்பாடாகக் கருதுகிறார்கள். எல்லா பொருட்களின் உள்ளும் ஊடுருவி நிற்கும் சாரமாக வேறு சிலர் கூறுகிறார்கள்.
தற்காலத்திலும்கூட, புலன்களுக்கு அப்பாற்பட்ட மனநிலையோடு தொடர்பு கொள்ளாமலேயே செய்யப்படும் மதப் பிரச்சாரத்தின் பலவித முயற்சிகளும், பழங்காலத்தினரின் தத்துவங்களையே வேறு பெயர்களில் சொல்வதாக அமைகிறது. அதாவது ஒழுக்கக் கோட்பாடு லட்சிய ஒருமை என்று பலவாறாகக் கூற வேண்டியிருக்கிறது. இந்தத் தத்துவங்கள் புலன்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை இவர்களின் இந்தச் செயல்கள் எல்லாம் காட்டுகின்றன.
----சுவாமி விவேகானந்தர்....
தொடரும் ........
நன்றி:- dinamalar.com ......