பிரசவத்தின் போதும் சரி, அதற்கு பின்னரும் சரி நிறைய பிரச்சனைகள்
வரக்கூடும். அதிலும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு அளவே
இருக்காது. பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் இத்தகைய
பிரச்சனையால் அதிகமாகவே அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிசேரியன்
பிரசவம் நடந்தவர்களுக்கு உண்டாகும் முதுகு வலி மிகவும் கொடுமையாக
இருக்கும். ஆனால் இத்தகைய முதுகு வலியைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன.
இருப்பினும், அவை அனைத்தும் குணமாகும் என்பதற்கான நிரூபணம் இல்லை.
மேலும் பிரசவத்திற்கு பின்னர் முதுகு வலி வருவதற்கு ஒருசில காரணங்கள்
மற்றும் போக்குவதற்கான வழிகள் சில உள்ளன. அவை என்னவென்று கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
முதுகு வலி வருவதற்கான காரணங்கள்:
* கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தையின் முழு சுமையை முதுகு தான்
தாங்கியுள்ளது. அதிலும் இறுதி மாதத்தில் அதிகப்படியான எடை இருப்பதால்,
நீண்ட நாட்கள் முகுது அந்த சுமையை சுமந்து, பிரசவத்திற்கு பின் கடுமையான
முதுகு வலியை உண்டாக்குகிறது.
* சிலருக்கு குழந்தை பிறப்பதற்கு முன் நீண்ட நாட்களாக இடுப்பு வலியானது
இருக்கும். அந்த நேரம் மருத்துவர் முதுகு தண்டுவடத்தில் ஊசியைப் போட்டு,
வலியை குணப்படுத்துவார்கள். அவ்வாறு போடும் ஊசி, ஒரு தற்காலிக நிவாரணி தானே
தவிர, பிரசவத்திற்கு பின் அந்த ஊசியால் கடுமையான முதுகு வலியானது
ஏற்படும்.
* சிசேரியன் பிரசவம் சிலருக்கு நடப்பதால், அவர்கள் குறைந்தது 3 மாதம்
படுக்கையிலேயே இருக்க நேரிடும். அப்படி இருப்பதால், அது உடலில் பல்வேறு
வலிகளை உண்டாக்கும். மேலும் முதுகிற்கு இந்த மாதிரியான சூழலில் அதிக வேலை
இருக்காததால், திடீரென்று வேலை செய்ய ஆரம்பிக்கும் போது முதுகு வலியை
உண்டாக்கும்.
* பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது சரியான நிலையில்
உட்காரமாட்டார்கள். இதனாலேயே பிரசவத்திற்கு பின் முதுகு வலி ஏற்படுகிறது.
* கர்ப்பத்தின் போது அதிகமான உடல் எடை இருப்பதால், அதனை உடலின் கால்
மற்றும் முதுகு பகுதி தான் அதிகம் சுமக்கிறது. அதிலும் கர்ப்பமாக இருக்கும்
போது 10 கிலோ உடல் எடை அதிகரிக்கும். இதனை சுமப்பதாலேயே பிரசவத்திற்கு
பின் கடுமையான முதுகு வலியானது ஏற்படுகிறது.
முதுகு வலியைப் போக்குவதற்கான வழிகள்:
* பிரசவத்திற்கு பின் செய்யக்கூடிய உடல் மசாஜை மேற்கொண்டால், முதுகு வலியை
குணமாக்கலாம். அதிலும் இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.
* பிரசவம் முடிந்த பின்னர், பெண்கள் மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது சரியான
எடையில் இருக்க வேண்டும். அதற்கு முறையான டயட் மற்றும் உடற்பயிற்சியை
பின்பற்ற வேண்டும். இதனால் உடல் எடை குறைந்து, முதுகிற்கு அதிகப்படியான
சுமையை சுமக்க வேண்டியிருக்காது.
* பிரசவத்திற்கு பின், முதுகு மற்றும் தசைகளை வலுவாக்குவதற்கு சிறந்த வழி
யோகா செய்வது தான். எனவே யோகா வகுப்பில் சேர்ந்து, உடலை சிக்கென்றும்,
முதுகு வலியிலிருந்தும் விடைபெறுங்கள்.
Via Thatstamil.com