மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி.
தாவரப்பெயர் -: TINOSPORA CARDIFOLIA.
தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE.
வேறு பெயர்கள்- அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி போன்றவை.(GUDUCHI).
பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர்.
வளரியல்பு - : சீந்தில் கொடி தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. வரட்சியைத் தாங்கக்கூடியது.உயரமான மரங்களில் காடுகளில் அதிகமாகப் படரும் ஏறு கொடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடியில் வளரக் கூடியது. இதய வடிவ இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புறத் தோலையும் உடைய ஏறு கொடி. கொடியின் தரை தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும். இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும்.பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும்.
மருத்துவப்பயன்கள் -: முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.
சீந்தில் உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும். முறை நோய் மஞ்சள் காமாலை, வாதம், கேன்சர், அல்சர், ஈரல் நோய் ஆகியவை தீர்க்கும், உடல் தேற்றும்.
சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.
சீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சிக் காலை, மதியம், மாலையாக 50 மி.லி. யாகக் குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.
முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.
Via-நலம், நலம் அறிய ஆவல்.