மதன்லால் திங்ரா!🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips

 


🔥🔥🔥  கண்டிப்பாக படியுங்கள் 🔥🔥🔥
மதன்லால் திங்ரா!

பிரிட்டிஷ் சிறையில் அந்தக் ‘கொலைகாரனை’ப் பார்க்க ஒரு ஒல்லியான இளைஞர் வந்திருந்தார். “நான் தூக்குத் தண்டனைக் கைதியைப் பார்க்க அனுமதியுடன் வந்திருக்கிறேன்.” கைதியிடம் அழைத்துச் செல்லப்பட்டார் அந்த மனிதர்.

சிறைக் கம்பிகளுக்கு இரு புறங்களிலும் நின்ற அந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவர் முகத்தில் புன்னகை; மற்றவர் கண்களில் கண்ணீர் அரும்பியது. “தங்கள் தரிசனத்தை யாசித்து வந்திருக்கிறேன்… நான் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?” என்றார் பார்க்க வந்தவர். சிறைக்குள் இருந்தவரோ, “தயவு செய்து ஒரு சீப்பு தரமுடியுமா? நாளை என் மணப்பெண்ணை முத்தமிடும் போது கலைந்த தலையுடன் இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார். சீப்பும் சில தாள்களும் கைமாறின.

சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் விடைபெற்ற அந்த மனிதர் வீர சாவர்க்கர்...

மதன்லால் திங்ரா!

1909 ஜூன் 20ல் நடந்த கூட்டத்தில் கணேக்ஷ் சாவர்க்கருக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காகவும், வங்காளத்தை பிரித்த இந்திய மந்திரியின் ஆலோசகரான சர் கர்சன் வில்லியை தீர்த்துக் கட்டி பழி முடிக்கிறேன் என்று மதன்லால் திங்ரா என்ற இளைஞன் வீர முழக்கமிட்டார்.

திங்ராவின் தந்தை பியாரிலால் திங்ரா கர்சன் வில்லியின் குடும்பநண்பர். குடும்பமே ஆங்கில அரசுக்கு விசுவாசமானவர்கள்.

பின்னர் கர்சன் வில்லியை லண்டன் மாநகரிலேயே தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டது. அதில் சாவர்க்கர், வ.வே.சு. ஐயரும் கலந்து கொண்டனர்.

1909 ஜூலை முதல் தேதியில் லண்டன் இம்பீரியல் இன்ஸ்டிடியூட்டின் வருடாந்திர கூட்டம் ஜஹாங்கீர் மாளிகையில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் நடைபெறும் என்ற தகவல் கிடைத்தது.

அந்த நாளும் வந்தது. இசை நிகழ்ச்சி முடிந்ததும் பிரதான விருந்தாளியான கர்சன் வில்லி அரங்கில் உள்ளவர்களை நலம் விசாரித்துக் கொண்டே மேடைக்கு சென்று கொண்டிருந்தார். மதன்லால் திங்ராவின் அருகில் வந்ததும் “ஓ! … மை டியர் ஜூனியர் திங்ரா! யூ ஆர் ஹியர்?” என்று வியப்புடன் மகிழ்ச்சியுற்ற கர்சன் வில்லி மதன்லால் திங்ராவுடன் கைகுலுக்க தன் கையை நீட்டினார்.

திங்ராவோ தன் கோட்டுப் பையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து கர்சன் வில்லியை ஐந்து முறை சுட்டார் அதே இடத்தில் பிணமானார். ஐந்து குண்டுகளும் கர்சன் வில்லியின் முகத்தில் பாய்ந்து அடையாளம் தெரியாத வகைக்கு சிதைத்தன. கூட்டம் சிதறி ஓடியது. பம்பாயை சேர்ந்த பார்சி வழக்கறிஞரான கவாஸ்லால் காகா என்பவர் மதன்லால் திங்ராவை தடுக்க முயன்று ஆறாவது குண்டுக்கு பலியானார்.

பல பேர் ஒரே நேரத்தில் திங்ராவை அமுக்க “ம். கொஞ்சம் பொறுங்கள்! என் மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொள்கிறேன். அப்புறம் பிடியுங்கள்” என்றார். திங்ரா நிதானமாக.

ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் தலைநகரிலேயே இந்திய மந்திரியின் நேரடி ஆலோசகரை குருவி சுடுவது போல இந்திய இளைஞன் ஒருவன் நேருக்கு நேராக சுட்டுக் கொன்றது ஆங்கிலேய அரசை ஆட்டியது.

திங்ரா நீதிமன்றத்தில், “வில்லியை நானே சுட்டேன். அது என் கடமை. ஆனால் வழக்கறிஞர் கவாஸ்லால் காகாவை நான் வேண்டுமென்றே சுடவில்லை. அவராக வலிய வந்து என்மேல் பாய்ந்ததால் தற்காப்புக்காக சுடநேர்ந்தது..” என்றார்...

வழக்கின் முடிவில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட ஆகஸ்ட் 17, 1909 காலை 9:00 மணி இலண்டனின் பெண்டோன்வில்லி சிறையில் மதன்லால் திங்க்ரா அவரது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். ஹட்ஸன் எனும் ஒரு கிறிஸ்தவ பாதிரி வழக்கம்போல அவருக்காக பிரார்த்தனை செய்ய முன்வந்தார். “நான் ஒரு ஹிந்து; உங்கள் பிரார்த்தனை எனக்குத் தேவையில்லை” எனப் புன்னகையுடன் மறுத்துவிட்டார் திங்க்ரா.

திங்ரா தூக்கிலிடப்படும் திங்ராவின் அறிக்கை ‘டெய்லி நியூஸ்’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அந்த அறிக்கையின் சாரம் கீழே.

எனது சவால்!

”கர்சன் வில்லி என்ற ஆங்கிலேயரை சுட்டுக் கொன்று ஆங்கில மண்ணில் ஆங்கிலேய ரத்தத்தை சொட்ட வைத்தேன்.”

”என் தாய் நாட்டு தேச பக்தர்களையும், இளம் சிங்கங்களையும் மிருகங்களைப் போல வேட்டையாடி, மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைப் படுத்தி வரும் ஆங்கிலேயப் பேராட்சியின் அடக்கு முறைக்கு எனது எளிய பழிவாங்கும் பதிலடியே இது.”

”நான்காண்டுகளுக்கு முன் எங்கள் தங்க வங்க மாநிலத்தை (அமார் சோனார் பங்களா) இரண்டாகப் பிரித்த சண்டாளன் கர்சன் வில்லி. அவனுக்கு பாடம் கற்பிக்க இப்போதுதான் வாய்ப்புக் கிட்டியது.”

”என் தேசத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்,
கடவுளுக்கே இழைக்கப்பட்ட அவமானமாக கருதுகிறேன்.”

”என் தேச காரியம் ராமபிரானின் காரியம்!; என் தேச சேவை கிருக்ஷ்னனுக்கு செய்யும் சேவை. அறிவிலும் செல்வத்திலும் வறியவனான என் போன்ற ஏழை மகன் என் தேசத் தாய்க்கு கொடுக்க என்ன இருக்கிறது? ஏதும் இல்லாத போது என் சொந்த ரத்தத்தையே அவளது சன்னிதானத்தில் காணிக்கையாகப் படைப்பதுதானே சிறந்த சமர்ப்பணம்? நானும் அதைத் தான் செய்தேன்!”

”எமது நாடு விடுதலை பெறும்வரை கிருக்ஷ்ண பகவான் ஆயத்தத்துடனே நிற்பார். வென்றால் நமது பூமி நமக்கு திரும்பக் கிடைக்கும்.”

”கடவுளுடன் நான் இறைஞ்சிக் கேட்கும் பிரார்த்தனை இதுதான். நான் மீண்டும் பிறந்தால் என் பாரத அன்னைக்கே மகனாகப் பிறக்க வேண்டும். அப்போதும் அவள் அடிமையாகவே இருந்தால் நான் மீண்டும் இதே புனித காரணத்திற்காகவே போரிட்டு மடிய வேண்டும்! மனிதகுல நன்மைக்காகவும் என் தாயகம் சுதந்திரம் பெற்றே தீர வேண்டும்!”..

வந்தே மாதரம்....

மதன்லால் திங்கரா பலிதான நாள் இன்று..

சிலிர்ப்பூட்டும் தியாகம் மதன்லால் திங்க்ராவுடையது.
அந்த மாவீரரின் இந்த தியாக நினைவு நம் அடுத்த தலைமுறையினரிடமும் தேச பக்தியை வளர்க்கட்டும்

🔥🔥🔥 வந்தே மாதரம் 🔥🔥🔥🔥 

 

நன்றி இணையம்