கணக்கதிகாரமும் பலாப்பழமும்:
என் தந்தையின் அப்பா, குமாரசாமி அவர்களும் அவரது சகோதரர்களும் சில கணிக்கும் திறமைகள் இருந்ததாகச் சொல்வார்கள். அதாவது நிலக்கடலை விளைந்த காட்டில் மூலை மூலைக்கு ஒரு செடியை பறித்து அதில் உள்ள காய்களின் எண்ணிக்கை மற்றும் பருப்பின் திரட்சியை கணக்கிட்டு, அந்த நிலத்தில் இருந்து எத்தனை மூடை கடலை கிடைக்கும் என்பதை துள்ளியமாக சொல்வாராம். அது போலவே அவரது சகோதரர் சங்கரலிங்கம் அவர்கள், அன்றைய அணாக்களை (ஓட்டைகாசு) கைப்பிடி எடுத்து அது இரண்டு /மூன்று / ஐந்து ரூபாய் எனச் சரியாக சொல்வாராம். இப்படி நம் முன்னோர்கள் நேரத்தை, தண்ணீரை, ஆடு/ மாடுகளின் எண்ணிக்கையை சரியாக கணக்கிடும் திறமைகளை வைத்திருந்தார்கள்.
இதற்கு பின் அவர்களின் தனித்திறமை இருந்தாலும், இதுபோன்ற கணிப்புகளுக்கு பல சூத்திரங்களும் உண்டு. அதைப்பற்றி விளக்குவதே 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த "காரி" என்ற புலவர் எழுதிவைத்த "கணக்கதிகாரம்" என்ற நூல்.
இன்று எங்கள் வீட்டில் அந்த பழங்கால கணிப்பு விளையாட்டு ஒன்றை பரிசோதனை செய்தோம். அது, பலா பழம் ஒன்றை வெட்டாமல் உள்ளே இருக்கும் சுளைகளின் எண்ணிகையை கணக்கிடும் கணிப்பு முறை.
என் மனைவி மீனா, காலையில் ஒரு சிறிய பலா பழம் ஒன்றை உள்ளூர் விவசாயிடம் வாங்கினார்.
உடனே எங்கள் கணிப்பு விளையாட்டு தொடங்கியது. நாங்கள் பழத்தை வெட்டாமல், சொல்லப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில், 57 சுளைகள் இருக்கும் என கணித்தோம். பிறகு நானும் மகன்களும் ஊர்சுற்ற பக்கத்தில் உள்ள அணைக்கட்டு வரை சென்றுவிட்டோம். (அங்கே கற்றது தனி பதிவில் வரும்). நாங்கள் திரும்பி வருவதற்குள் எங்களுக்கு காலைச் சிற்றுண்டி தயார் செய்து விட்டு, பலா பழத்தை வெட்டி வைத்த மனைவி, வந்ததும் எங்களை எண்ணிப்பார்க்க கட்டளையிட்டார்.
அட ஆமாங்க, நாங்கள் கணிய்தது போலவே சரியாக 57 சுளைகள் இருந்தன.
இது சாத்தியம், அந்த சூத்திரம் இதோ...
பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி –வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை
- கணக்கதிகாரம், காரி நாயனார்
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கியபின், அதை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.
காம்பு அருகில் உள்ள முட்களின் எண்ணிக்கை 47
அதை 6 ஆல் பெருக்கிய எண் 47×6 = 282
வந்த எண்ணை 5 ஆல் வகுத்தால் 282/5 = 56.4
ஆக 56 அல்லது 57 சுளைகள் இருக்க வேண்டும்.
எங்களுக்கு கிடைத்த சுளைகள் 57.
*
இது பலா பழம் கிடைக்கும் பருவம், நீங்களும் ஒரு சிறிய பழம் வாங்கி (காம்பு அருகில் உள்ள முட்களை எண்ண ஏதுவாக இருக்கும் பழம்) பரிசோதித்து, நம் முன்னோர்கள் கணக்கியல் திறமையை உணர்ந்து மகிழுங்கள்.
பதிவு- யாதும் முத்து