தனி மனித விமர்சனங்கள் என்பது, அவரவர் கண்ணோட்டம் மட்டுமே என்பதை உணர்த்தும் சம்பவம்.
அந்த ஊரில் புகழ்பெற்ற ஞானி ஒருவர் இருந்தார்.
அவரிடம் பலரும் வந்து, பலவற்றையும் பேசி தெரிந்து கொண்டு செல்வார்கள்.
அவரது கருத்துக்களைக் கேட்டு பல காரியங்களைச் செய்வார்கள்.
அதே ஊரில் ஒரு இசைக் கலைஞனும் இருந்தான்.
அவனிடம் நல்ல இசைத் திறமை இருந்தது.
அது தவிர சில தீய பழக்க வழக்கங்களும் இருந்தன.
தீய பழக்கங்களின் காரணமாக அவன் பலரையும் ஏமாற்றி இருந்தான்.
இந்த நிலையில் ஞானியைத் தேடி வந்த ஒருவர், அந்த இசைக் கலைஞனின் தீய பழக்க வழக்கங்களைப் பற்றி ஞானியிடம் விவரித்தார்.
அவன் ஒரு மோசடிக்காரன்;
ஏமாற்றுப் பேர்வழி;
கொடியவன் என்று பலவாறாக வசைபாடினார்.
அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஞானி இறுதியில், அவன் ஓர் அற்புதமான இசைக் கலைஞன் என்று கேள்விப்பட்டேனே.
அவன் இசையை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று கூறுகிறார்களே என்றார்.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த மற்றொரு நபர்,
ஆமாம்!
தாங்கள் சொல்வது மிகவும் சரி.
அவன் விரல்கள் காட்டும் வித்தைக்கு மயங்காதவர்களே கிடையாது.
சங்கீதமே அவனிடம் கைகட்டி சேவகம் செய்யும் என்றார்.
அதைக் கேட்ட குரு, இல்லை.. இல்லை. அவன் ஒரு மோசமான ஏமாற்றுக்காரன் என்று கேள்விப்பட்டேனே..? என்று கூறினார்.
இசைக் கலைஞனை குறை சொன்னவர், புகழ்ந்தவர் இருவரும் இப்போது திகைத்து போய் நின்றனர்.
இந்த ஞானி என்ன, இப்படி குழப்புகிறார்..?
இப்படி பேசினால்.. அப்படி கூறுகிறார்.
அப்படிச் சொன்னால்... இப்படி என்கிறார் என்று விழித்தனர்.
அவர்களில் ஒருவர் இதை ஞானியிடம் கேட்டும் விட்டார்.
அவனை புகழ்கிறீர்களா..? இகழ்கிறீர்களா..?
இரண்டு பக்கமும் பேசுகிறீர்கள்..? என்றார்.
நான் இரண்டுமே செய்யவில்லை.
சமநிலை செய்கிறேன்.
எந்த ஒரு மனிதனையும் எடை போட நாம் யார்..?
ஒருவனை நல்லவன்..
கெட்டவன் என்று சொல்ல உங்களிடம் என்ன அளவுகோல் இருக்கிறது..?
எதையும் ஒப்புக்கொள்வதோ, எதிர்ப்பதோ என்னுடைய வேலை இல்லை.
அதற்கான உரிமையும் என்னிடம் இல்லை.
அவன் தீயவனும் அல்ல.
நல்லவனும் அல்ல.
அவன் அவனாக இருக்கிறான்.
அவன் செயலை அவன் செய்கிறான்.
உங்கள் செயல் எதுவோ..
அதை நீங்கள் செய்யுங்கள்.
காலம் தான் எதையும் தீர்மானிக்கும்.
தனி மனித விமர்சனங்கள் என்பது, அவரவர் கண்ணோட்டம் மட்டுமே.
என்றார் ஞானி.
இருவரும் உண்மையை உணர்ந்து வந்தவழியே திரும்பிச் சென்றனர்...
நன்றி இணையம்