இந்தியாவை முக்கிய ராணுவ கூட்டாளியாக்கும் சட்டம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:59 | Best Blogger Tips

 அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
நேட்டோ நாடுகள், இஸ்ரேல் ஆகியவைகளுக்கு இணையாக இந்தியாவையும் அமெரிக்காவின் முக்கிய ராணுவ கூட்டாளியாக்க வகை செய்யும் சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இதற்கு ஆதரவாக 375 உறுப்பினர்களும், எதிராக 34 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதன்மூலம், இந்தியாவை அமெரிக்காவின் முக்கிய ராணுவ கூட்டாளியாக்க வகை செய்யும் சட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளித்து விட்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒப்புதலுக்கு சட்டம் அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலும் கிடைத்து விட்டால், பாதுகாப்புத் துறை, பேரிடர் மீட்பு, மனிதாபிமான உதவி, கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கை, ஆயுத தளவாட தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் அமெரிக்காவும், இந்தியாவும் நெருங்கிச் செயல்பட முடியும்.
அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நேட்டோ அமைப்பு நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றுடன் தான் அந்நாடு இதுவரை ராணுவ ஒத்துழைப்பை வைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட புதிய சட்டத்துக்கு அமெரிக்க அதிபரின் ஒப்புதல் கிடைத்ததும், அதேபோன்ற ஒத்துழைப்பை இந்தியாவுடன் அமெரிக்கா வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் மிக விரைவில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப்பை அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகள் ஆய்வு மையத்தின் (டிஎஸ்ஐஎஸ்) நிபுணர்கள் கேத்லின் ஹெச். ஹிக்ஸ், டி.சி. ரிச்சார்ட் எம். ரோசவ், ஜான் ஸ்காஸ் ஆகியோர் எழுதியுள்ள நாளிதழ் நடுப்பக்க கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாதுகாப்புத் துறையில் அமெரிக்கா, இந்தியா இடையே தற்போது நிலவும் உறவானது, இரு நாடுகளிலும் ஆட்சியிலிருந்த பல்வேறு அரசுகளால் ஏற்படுத்தப்பட்டவை ஆகும். இந்த உறவில் கடந்த 3 ஆண்டுகளாக வசந்தகாலம் நிலவுகிறது.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்பும், அவரது தேசியப் பாதுகாப்புக் குழுவினரும், இந்தியா- அமெரிக்கா இடையேயான நட்புறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வேகமாக வளர்ச்சியடைந்து வருவதுடன் ஒத்த கருத்தும் கொண்ட நாடான இந்தியாவுடன் கூடிய விரைவில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைக்கும் வெற்றியாகும்.
அமெரிக்க அரசுத் துறைகளில் இருக்கும் அதிகாரிகள், அமெரிக்கா- இந்தியா இடையே மிகவும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தியாவும், அமெரிக்காவும் தங்களிடையே ஆழ்ந்த நட்புறவை ஏற்படுத்திக் கொள்வது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நன்றி இணையம்