பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:42 PM | Best Blogger Tips

Image result for பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி
இந்தியச் சட்டப்படி குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை முதல் பாஸ்போர்ட் வரை அனைத்து ஆவணங்களையும் பெற வயதுச் சான்றாகப் பயன்படுவது பிறப்புச் சான்றிதழ். திருமணத்திற்கே கூட வயதுச் சான்றிதழ் கட்டாயமாகிறது.
எங்கே பதிவு செய்வது:
ஒருவர் பிறப்புச் சான்றிதழ் பெற, பிறந்தத் தேதியைப் பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேன்டும். பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பை பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, அந்தப் பகுதி காவல்துறை மூலம் பிறப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில், 1969-ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் பிறந்த 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கட்டண விவரம் :
மூன்று வாரங்களுக்குள் இலவசமாகவும், அதற்கு மேல் ஒரு மாதம் வரை 5 ரூபாயும், ஓராண்டிற்கு மேல் 10 ரூபாயும் மற்றும் மாவட்ட நீதிபதி அவர்களின் ஆணையும் தேவை.
மருத்துவமனையில் பிறப்பை பதிவு செய்தல் :
மருத்துவமனையில் நடக்கும் பிறப்புகள் அனைத்தும் மாநகராட்சிக்கு தெரிவிக்கப்படும். மருத்துவமனை சான்று கிடைத்தவுடன் ஒரே நாளில் மாநகராட்சியால் பிறப்புச்சான்று வழங்கப்படும். பிறப்புச்சான்றை அந்தந்த மாநகராட்சியின் இணையதளத்தில் இலவசமாகப் பெற முடியும். குழந்தையின் பெயரை ஓராண்டு வரை மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில் மாற்ற முடியுமா?
பிறந்த குழந்தையின் தாய், தந்தையர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால், குழந்தையின் பெயரை மாற்ற முடியாது.
வெளிநாட்டில் குழந்தை பிறந்தால் :
இந்திய பெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தை பிறந்தால், அக்குழந்தையின் பிறப்பை அங்குள்ள தூதரக அலுவலகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும்.
பயணத்தின்போது குழந்தை பிறந்தால் :
ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்குதான் அதன் பிறப்பு பதிவு செய்யப்பட வேண்டும். விமானத்தில் அல்லது கப்பலில் பயணிக்கும்போது குழந்தை பிறந்தால் அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு முடிகிறதோ அங்குதான் அந்தப் பிறப்பு பதிவு செய்யப்படவேண்டும்.

 நன்றி இணையம்