சுகி. சுவம் - "பெரியபுராணத்தில் பெண்மை'

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:40 | Best Blogger Tips
Image result for "பெரியபுராணத்தில் பெண்மை'Image result for "பெரியபுராணத்தில் பெண்மை'
சுகி. சுவம் அவர்கள் "பெரியபுராணத்தில் பெண்மை' என்ற தலைப்பில் அற்புதமான உரை நிகழ்த்தினார். அதன் தொகுப்பு இங்கே...
முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பிறந்தால் பெரும்பாலும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். ஏனென்றால், பெண் பிள்ளைகள் அடுத்த வீட்டுக்கு சென்றுவிடு வார்கள். பெற்றவர்களுக்கு அவர்களால் பயனில்லை. ஆண் பிள்ளைகள்தான் வயதான காலத்தில் காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம். இப்போது சற்று நிலைமை மாறியிருக்கிறது.
எனக்கு இரண்மே பெண்கள்தான். அதை நான் மகிழ்வோடும் பெருமையோடும் சொல்கிறேன். எனது இரண்டாவது பெண் குழந்தை கருவுற்றிருந்தபோது நான் கோயம்புத்தூரில் குடியிருந்தேன். பிரசவ நேரம். அப்போது என்னிடம் கார் போன்ற வசதியில்லை. பரபரப்பாக ஓடிப்போய் டாக்ஸி பிடித்து, அதில் என் மனைவியை அழைத்துச்சென்றேன். டிரைவரிடம் "வாடகை எவ்வளவு?' என்று கேட்டேன். "என்ன சார்... பிரசவத்துக்கு கூட்டிட்டுப் போறீங்க. இப்ப போய் கணக்கு பாக்கமுடியுமா? நல்ல சேதி வரட்டும். பிறகு வாங்கிக்கறேன்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஒரு வாரமாக அந்த டிரைவரை பார்க்கமுடியவில்லை. அதன்பின் கண்ணில் பட்டார். அவரிடம் "தம்பி, நீங்க இன்னும் பணம் வாங்கலியே.
எவ்வளவு?' என்று கேட்டேன். "அதெல்லாம் இருக்கட்டும் சார். என்ன குழந்தை?' என்றார். "பெண் குழந்தை' என்றேன். அதைக்கேட்டு அவர் முகபாவம் மாறிவிட்டது. "பொண்ணா...' என்று இழுத்தவர், "நீங்களே வருத்தத்தில இருப்பீங்க. குடுக்கறத குடுங்க' என்றார். "நான் ஒன்றும் வருத்தத்துல இல்லியே. சொல்லப்போனா இது எனக்கு இரண்டாவது பொண்ணுப்பா' என்றேன். உடனே அவர் சொன்னார்.
"அப்ப நான்தான் சார் உங்களுக்கு ஏதாவது கொடுக்கணும்.'
அப்படியென்றால் இந்த நாட்டில் என்ன நினைக்கிறார்கள்? இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுவிட்டால் கஷ்டத்துக்கு ஆளாகிவிடுவார் என்று நினைக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், பெண்பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள்; ஆண்பிள்ளைகள்தான் காப்பாற்றுவார்கள் என்பதே. இப்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்கிறேன்.
இரண்டு பேருமே காப்பாற்ற மாட்டார்கள். கடைசிவரை நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
இப்போது நான் பெண்மையைப் பற்றி பேசவேண்டும். ஒரு ஆச்சரியமான தகவலைச் சொல்கிறேன். நெடுங்காலமாக, ஆணைவிட தாழ்ந்தவள் பெண் என்னும் எண்ணம் உலகம் முழுவதும் இருந்தது. எல்லா மதங்களுமே ஆணை உயர்த்தி வைத்து பெண்ணைத் தாழ்த்தி வைத்தன. உதாரணமாகச் சொல்லப்போனால், ஒரு மடத்தின் தலைமைப் பதவியை ஆணுக்கு கொடுப்பார்களே தவிர பெண்ணுக்குத் தரமாட்டார்கள். ஒரு பெண் எவ்வளவு படித்து முன்னேறினாலும் சங்கராச்சாரியார் பதவியைப் பெறமுடியுமா? போப் ஆண்டவர் பதவிகிட்டுமா? மதகுரு ஆகமுடியுமா? எல்லா மதங்களுமே பெண்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கின்றன. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் மதங்களின் ஆதரவாளர்களே பெண்கள்தான். இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. இங்கே பெண்களுக்கு மடாதிபதி பதவி கொடுக்கவில்லை. ஆனால் அன்புடைய பெண்களை தெய்வத்துக்கும் மேலே வைத்தார்கள். அன்பினால் ஒரு பெண் கடவுளுக்கும் மேலாக மாறுகிறாள் என்னும் ஒரு கருத்தை வைத்தார்கள்.
இந்த உலகமெல்லாம் சிவபெருமானை கடவுள் என்று சொன்னபோது, சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை "அம்மா' என்று அழைத்தார் என்று சொல்லி, பெண்ணை கடவுளைவிட மேலாக வைத்த பெருமை நமது தெய்வ சேக்கிழாருக்கும் பெரியபுராணத்துக்கும் உண்டு. ஒரு விஷயத்தில் அளவு கடந்த அன்பைச் செலுத்தும் இயல்பு பெண்ணுக்கு உண்டே தவிர ஆணுக்கு இல்லை.
நாம் பெரியபுராணத்தில் நிறைய சிவனடியார்களைப் பார்க்கிறோம். ஆனால் பெண்ணுக்கு வாய்த்த பெருமை எனும் உச்சத்தை ஆணடியார்களால்கூட எட்டமுடியவில்லை. சிவன் கோவிலில் இருக்கும் 63 நாயன்மார் களின் சிலைகளைப் பாருங்கள். எல்லாருமே கைகூப்பியபடி நின்றுகொண்டிருப்பார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் அமர்ந்திருப் பார். அவர்தான் காரைக்கால் அம்மையார். அனைவரும் நிற்க, கரைக்கால் அம்மையார் அமர்ந்திருப்பது ஏன்? பிள்ளைக்கு முன்னால் தாய் நிற்கவேண்டிய அவசியமில்லை. அவள் அமர்ந்துதான் இருப்பாள்.
எவ்வளவு பெரிய பெருமை காரைக்கால் அம்மையாருக்கு! "வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்' என்று சிவ பெருமான் கூறுவதாக சேக்கிழார் எழுதுகிறார்.
ஒரு பெண்ணுக்கு மனைவி என்றொரு ஸ்தானமுண்டு. மகள் என்றொரு ஸ்தானமுண்டு. அக்காள், தங்கை, அத்தை என்றெல் லாம் உண்டு. அவளே தனித்தியங்கும் தலைமைப்பதவியும் உண்டு. ஆனால் எத்தனை ஸ்தானங்கள் இருந்தாலும், உலகத்தில் உயர்ந்த நிலை பெண்ணுக்கு எதுவென்றால், அது தாயாக இருக்கும் நிலைதான்.
ஆண்களுக்கெல்லாம் ஒரு ரகசியத்தை இங்கே வெளிப்படுத்துகிறேன். ஒரு பிள்ளை பிறந்துவிட்டால் கணவனுக்கு மரியாதை போய்விடும். பிள்ளை பிறக்கும் வரைதான் கணவனுக்கு முதலிடம். பிறந்துவிட்டால் அவன் இரண்டாம்பட்சம்தான். கணவன் மனைவியிடம், "பசிக்குது. தோசை சுட்டுக்கொடு' என்பான். "என்ன அவசரம்... பிள்ளை அழுகுதில்ல' என்று பிள்ளையை கவனிப்பதில் ஈடுபடுவாள் மனைவி. சில கணவர்கள், "இது இல்லாமலேயே இருந்திருக்கலாமோ' என்று யோசிப்பார்கள்.
ஒரு பெண் தாய்மை என்னும் சுகத்தை அனுபவித்தபிறகு, மனைவியாக இருப்பதில் அதிக ஆர்வமிருக்காது; ஆசையிருக்காது. இந்த உலகத்தில் மனைவி என்னும் பதவி இருக்கிறதே, அது கவுன்சிலர் பதவி போன்றது.
தாய் என்பது முதலமைச்சர் பதவி போன்றது. முதல்வரான ஒருவர் கவுன்சிலராக எப்போதும் விரும்பமாட்டார். தாயான ஒருத்தி மனைவியாக இருக்க ஒருபோதும் விரும்பமாட்டாள். ஒரு மனைவி தாயானபின்பு மீண்டும் மனைவியாவதில்லை என்பார்கள். அப்படியென்றால் தாய்மை என்பது எவ்வளவு உயர்ந்த ஸ்தானம்! சிவபெருமா னுக்கே தாயாக விளங்கி அந்த உயர்ந்த ஸ்தானத்தை நிரூபித்தார் காரைக்கால் அம்மையார். இதை வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாது. கடவுளுக்குத் தாய் என்னும் அந்தஸ்தை சேக்கிழார் கொடுத்ததுபோல்- பெரியபுராணம் கொடுத்ததுபோல் வேறு யாராலும் கொடுக்கமுடியாது. பெண்களின் ஆற்றல், அறிவு போன்ற பல நுட்பமான விஷயங்களை சேக்கிழார் பேசுகிறார்.

 நன்றி இணையம்