ஆரோக்கியமுடன் வாழ வேண்டுமா? இந்த வழிகளைக் கடைபிடியுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:04 PM | Best Blogger Tips

அனைவருக்குமே நூறாண்டு காலம் வாழ ஆசைதான். ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. அவர்களது உணவுமுறை, நடவடிக்கைகள், தவறான வாழ்க்கை முறை போன்றவையே இதற்கு காரணம். போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் மக்கள் அனைத்து இடங்களுக்கும் நடந்தே சென்றனர். ஆனால் தற்போது வசதி வாய்ப்புகள் கூடிவிட்டதால், நடப்பதை ஒரு குற்றமாகவே கருதுகின்றனர். இல்லையென்றால் உடலுக்கு ஏதாவது நோய் வந்தபின், மருத்துவரின் அறிவுரைப்படி காலையில் கடற்கரையிலோ, பூங்காக்களிலோ நடைப்பயணத்தை மேற்கொள்கின்றனர். உழைப்பு என்பது இப்பொழுது இல்லாத விஷயமாகிவிட்டது. பாஸ்ட் ஃபுட் உணவு முறையே மேலோங்கி நிற்கிறது. எதிலும் அவசர நிலை, டென்ஷன், நல்ல உணவுகளை தவிர்த்தல், முறையற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஆரோக்கியம் கெடத் தான் செய்யும். இதிலிருந்து தப்பிக்க வழிகள் பல இருந்தாலும், சோம்பேறித்தனத்தால் அதை கடைபிடிக்காமல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம். ஆரோக்கியமாக வாழ இங்கே சில வழிமுறைகளை பார்க்கலாம். அவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.



சரிவிகித உணவுகள்
உணவில் சத்தானவற்றை சாப்பிடவும். சரிவிகித உணவு எவை என்பதைக் கண்டறிந்து உண்ணவும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கீரை வகைகள் போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளவும். இறைச்சி வகைகளை குறைத்துக் கொள்ளவும்.



நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள்
உடலில் சாதாரண நோய்களான காய்ச்சல், சளித் தொல்லை, கைக்கால் அசதி போன்றவற்றிற்கெல்லாம் மருத்துவரிடம் ஓடுவதை நிறுத்தி விட்டு எதிர்ப்பு சக்தியை தூண்டும் உணவுகளை உண்ண வேண்டும்.



தண்ணீர்
காலையில் எழுந்தவுடன் குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் எதையும் உண்ணக்கூடாது. இந்த தண்ணீர் சிகிச்சை பல வித நோய்களை போக்கும்.


மூலிகை ஜூஸ்
அக்கால சித்தர்கள் கூற்றுப்படி, காலையில் இஞ்சி, அருகம்புல் ஜூஸ், மாலையில் கடுக்காய் உண்ண வேண்டும். ஏனெனில் இவை உடலின் வாதம், கபம், பித்தம் ஆகியவற்றை சமன்படுத்தும்.


சிட்ரஸ் பழங்கள்
பழங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் கால்சியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், அவற்றை உண்ண இயற்கையிலேயே நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் நோய் வருவது தடுக்கப்படும்.


நல்ல தூக்கம்
மன அழுத்தத்தை குறைக்க, இரவு நன்கு ஓய்வெடுக்க வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் உறங்க வேண்டும். நல்ல உறக்கம், தேவையான ஒய்வு உடலை புத்துணர்ச்சியாக்கும். இரவில் நல்ல தூக்கம் வர கசகசாவை பாலில் போட்டு காய்ச்சி அருந்தலாம்.


காலை கடன்கள்
தவறாமல் காலைக் கடன்களை முடிக்கவும். மலம் மற்றும் சிறுநீரை எக்காரணம் கொண்டும் அடக்கக்கூடாது. வெளியே செல்லும் போது கூச்சத்தின் காரணமாக இவற்றை அடக்கினால் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும்.


துணி துவைத்தல்
தற்போது பலர் துணிகளை வேலைக்காரர்கள் மூலமோ அல்லது வாஷிங் மிசின் மூலமோ துவைக்கின்றனர். மாவரைக்க கிரைண்டர் வந்துவிட்டது. பெண்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது அறவே போய்விட்டது. இதற்காக பழைய நிலைமைக்கு மாறச் சொல்ல வில்லை. முடிந்த போது இவ்வேலைகளை நீங்களே செய்யவும்.


ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
கார்போனேட்டட் பானம் குடித்தல், புகைபிடித்தல், மது அருந்துதல், பாக்கு உபயோகித்தல் போன்றவற்றை அறவே நீக்க வேண்டும்.


இயற்கை உணவுகள்
வெள்ளை விஷங்கள் எனப்படும் பால், சர்க்கரை, மைதா போன்றவற்றை நீக்க வேண்டும். இவற்றுக்கு பதில் வெல்லம், பனங்கற்கண்டு, கோதுமை, தேன் போன்றவற்றை பயன்படுத்தலாம். எனினும் குழந்தைகளுக்கு பால் தேவை என்பதால் அவர்கள் மட்டும் குறிப்பிட்ட அளவுடன் அருந்தலாம்.


மெதுவாக சாப்பிடுதல்
உணவை உண்ணும் போது பொறுமையுடனும், விருப்பமுடனும், நன்கு மென்றும் உண்ண வேண்டும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். அவசர அவசரமாக உண்ணும் போது உணவு தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் ஜீரணமாக நேரமெடுக்கும்.


விரதம்
மாதம் இருமுறை பட்டினி சிகிச்சை, அதாவது விரதம் மேற்கொள்ளலாம். இதனால் ஜீரண உறுப்புகளுக்கு ஒய்வு கிடைக்கும். ஆனால் இச்சிகிச்சை முடித்த பிறகு கடினமான, ஜீரணமாகாத உணவை உண்ணக் கூடாது. விரதம் இருக்க முடியாதவர்கள், அன்றைய தினம் பழங்களை மட்டுமே உண்ணலாம்.


புன்னகை
எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கவும். எல்லோரையும் இன்முகத்துடன் பார்க்க வேண்டும். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் மற்றவர்களை விட இளமையாகத் தெரிவர். ஆகவே எப்போதும் சிரித்துக் கொண்டு இருக்க வேண்டும்.


Via FB  Aatika Ashreen