தெரியுமா உங்களுக்கு ! மாவட்ட ஆட்சி அமைப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:38 | Best Blogger Tips

  
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியான ஆட்சி அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த ஆட்சி அமைப்பின் கீழ் பல்வேறு துறை அலுவல்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியில் இருப்பவரின் கீழ் இயங்குகின்றன.
பொருளடக்கம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சி அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையில் இயங்குகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பாக மாநில அரசின் வருவாய்த்துறையின் மாவட்டத் தலைமை அதிகாரியாக இருக்கிறார். இருப்பினும் மாவட்டத்திலிருக்கும் அனைத்துத்துறை அலுவல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் இருக்கிறார்.மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட வருவாய் அதிகாரி
மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பணி மாவட்ட வருவாய் அதிகாரி பணியாகும். இவர் வருவாய்த்துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறையில் இருக்கும் போது இவர் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியைக் கூடுதலாகக் கவனிப்பார்.மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பிற்கு வருவாய்த்துறையில் பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்
மாவட்ட அளவில் மாவட்ட சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் செயல்படுகிறார். மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பிற்கு இந்தியக் காவல் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட முதன்மை நீதிபதி
மாவட்ட அளவில் நீதித்துறை சார்ந்த பணிகளைக் கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட முதன்மை நீதிபதி செயல்படுகிறார். மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பிற்கு சட்டம் பயின்றவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட வன அலுவலர்
மாவட்ட அளவில் வனங்கள் மற்றும் காடுகளில் உள்ள மரங்கள், விலங்கினங்கள் போன்றவைகளின் பாதுகாப்பிற்கான அதிகாரியாக மாவட்ட வன அலுவலர் செயல்படுகிறார். மாவட்ட வன அலுவலர் பொறுப்பிற்கு இந்தியக் வனப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
திட்ட அதிகாரி
மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர் மாவட்ட அளவிலான கிராம வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துகிறார். இவர் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.
மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக அதிகாரிகள்
மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவருக்குப் பல்வேறு துறையின் கீழ் உதவுவதற்காக குறிப்பிட்ட துறைகளின் நேர்முக அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
  • நேர்முக அதிகாரி (பொது)
  • நேர்முக அதிகாரி (பொது வினியோகம்)
  • நேர்முக அதிகாரி (சிறுசேமிப்பு)
  • நேர்முக அதிகாரி (சத்துணவு)
  • நேர்முக அதிகாரி (கணக்குகள்)
என்று சில அதிகாரிகள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவர்கள் துறைகள் சார்பாக உதவுகிறார்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்
மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உதவ மேலும் பல துறைகளின் சார்பில் சில மாவட்ட அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்கிறது.
  • மாவட்ட வழங்கல் அதிகாரி
  • மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி
  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி
  • மாவட்ட சமூகநல அதிகாரி
  • மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வு நல அதிகாரி
  • மாவட்டத் திட்ட அதிகாரி (மகளிர் மேம்பாட்டுத் திட்டம்)
  • மாவட்டத் திட்ட அதிகாரி (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்)
  • மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி
  • உதவி இயக்குனர்( கிராமப் பஞ்சாயத்துக்கள்)
  • உதவி இயக்குனர்( நகரப் பஞ்சாயத்துக்கள்)
  • உதவி இயக்குனர்( தணிக்கைத்துறை)
  • உதவி இயக்குனர்( புள்ளியியல்)
  • உதவி இயக்குனர்( மீன்வளம்)
  • உதவி இயக்குனர்( கனிம வளம்)
  • உதவி இயக்குனர்( தமிழ் வளர்ச்சி)
துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்ட அலுவலர்
மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்ட அலுவலகங்களை உள்ளடக்கி வருவாய்த்துறைக் கோட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இப்பணியிடங்களில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும் மற்றவர்கள் நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்ட அலுவலர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
பிற மாவட்ட அதிகாரிகள்
இதுபோல் ஒவ்வொரு துறையிலும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் அரசால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட துறையின் தலைமை அதிகாரிகளாகப் பதவி வகிப்பதுடன் அந்தத்துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்கள்

( நன்றி  விக்கிப்பீடியா )