தெரியுமா உங்களுக்கு ! தமிழ்நாடு வருவாய்த்துறை அமைப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 1:35 PM | Best Blogger Tips

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியில் இருப்பவரின் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன. இந்த மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் கிராமத்தில் இருந்து மாவட்டம் வரை கீழ்காணும் அமைப்புகள் இருந்து வருகின்றன.
  1. கிராம நிர்வாக அலுவலகம்
  2. வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
  3. வட்டாட்சியர் அலுவலகம்
  4. வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம்
  5. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்.
-இந்த வருவாய்த்துறையின் வழியாகத்தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம்

கிராம நிர்வாக அலுவலகம்
தமிழ்நாட்டிலிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகள், ஊராட்சிகள் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் வருவாய்த்துறையால் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மாநகராட்சிகள், மக்கள்தொகை அதிகமுடைய நகராட்சிகள் போன்றவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் மக்கள்தொகை குறைவான சில ஊராட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டும் வருவாய்க் கிராமம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 16,564 வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் என்பவர் இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
கிராம நிர்வாக அலுவலகத்தின் பணிகள்
  • வருவாய்க் கிராம அளவிலான பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது. பின்பு இதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்டவர்கள் கோரும் போது அதற்கான சான்றிதழ்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படுகின்றன.
  • வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்கான சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவைகளைக் கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்குவதற்காக விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்படுகின்றன.
  • வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு வரி வசூலித்தல் அவற்றிற்கான நில உடமைச்சான்று, நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர் குறித்த விபரங்களுடைய பட்டா மற்றும் அடங்கல் சான்றுகள் வழங்க வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யும் பணிகள் செய்யப்படுகின்றன.
  • வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர், விதவைகள் போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்க விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன.
  • வருவாய்க் கிராம அளவிலான அனைத்து வருவாய்த்துறைப் பணிகளையும் செய்து வருகின்றனர்.
வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
சில வருவாய்க் கிராமங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை பிர்க்கா என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 1127 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் வருவாய் ஆய்வாளர் எனும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு உதவியாக கிராம உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பணிகள்
  • கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான பரிந்துரைகள் குறித்து மேல் விசாரணை செய்து வட்டாட்சியருக்குக் கூடுதல் பரிந்துரை செய்கிறார்.
வட்டாட்சியர் அலுவலகம்
தேனி வட்டாட்சியர் அலுவலகம்
மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 220 வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தாலுகா என்று வேறு பெயராலும் குறிப்பிடுகின்றனர். இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில துணை வட்டாட்சியர்களும், எழுத்தர்களும், அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் என்கின்றனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள்
  • மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வ்ட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
  • வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
  • வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு க்ட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.
  • மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட வளர்ச்சி அதிகாரி ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.
வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம்
மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்டாட்சி அலுவலகங்களை உள்ளடக்கி வருவாய்த்துறைக் கோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 76 வருவாய்க் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இப்பணியிடங்களில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும் மற்றவர்கள் நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்ட அலுவலர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

வருவாய்க் கோட்ட அலுவலகத்தின் பணிகள்
  • வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
  • மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்.
  • மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்
தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்ட ஆட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தின் ஆட்சி அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையில் இயங்குகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பாக மாநில அரசின் வருவாய்த்துறையின் மாவட்டத் தலைமை அதிகாரியாக இருக்கிறார். இருப்பினும் மாவட்டத்திலிருக்கும் அனைத்துத்துறை அலுவல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் இருக்கிறார்.மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார். இவரின் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் கீழான துணை அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த அலுவலகங்களை உள்ளடக்கி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் இயங்குகிறது.
மாவட்ட அலுவலகத்தின் பணிகள்
  • மாவட்டத்திற்குத் தேவையான அனைத்துத் துறைப் பணிகளும் இந்த அலுவலகத்தின் கீழ் இயங்கும் துறை அலுவலர்களால் செயல்படுத்தப்படுகிறது.
  • ( நன்றி  விக்கிப்பீடியா )