இன்றைய வாழ்க்கை முறை

மணக்கால் அய்யம்பேட்டை | 4:13 PM | Best Blogger Tips

 



என்னுடைய சிறு வயது முதல் இளமைக் காலம் வரை நம் ஊரில் பெரும்பாலும் தனி வீடுகள்தான் இருந்தன.

பிரிட்ஜ், டி.வி., வாஷிங் மெஷின், போன்றவை 90% வீடுகளில் கிடையாது.

கிரைண்டர், மிக்ஸி, டூ வீலர் போன்றவையே ஆடம்பரம்தான்.

ஏ.சி.யா? அப்படீன்னா..என்ன?

சூப்பர் மார்க்கெட் என்னும் கான்செப்ட் பெரிதாக வளரவில்லை. எல்லோரும் பக்கத்தில் இருக்கும் நாடார் கடையிலோ, செட்டியார் கடையிலோதான் மாதாந்திர கணக்கில் சாமான்கள் வாங்குவார்கள்.

அதற்கென்று ஒரு குட்டி நோட்டு உண்டு. அந்த கடைகளில் பிளாஸ்டிக் பை தர மாட்டார்கள்.

நாம்தான் சாமான்கள் வாங்க துணிப் பையும், எண்ணெய் வாங்க தூக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

எனவே அப்போதெல்லாம் தெருக்களில் நிறைய சாமான்கள் விற்றுக் கொண்டு வருவார்கள்.

விதம் விதமான குரல்களிலும், தொனி- களிலும் தங்கள் பொருள்களை விற்றுக் கொண்டு போவார்கள்.

வீடுகளில் அம்மியும், ஆட்டுக்கல்லும் மட்டுமே இருந்ததால் ஆட்டுக்கல் குத்தலையோ, அம்மிக்கல் குத்தலையோ” (ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் பொள்ளுவதை குத்தலையோ?” என்பார்கள்). என்றபடி தலையில் ஒரு சிறிய சாக்கு பையை வைத்துக் கொண்டு ஒருவர் கூவிக் கொண்டே செல்வார்.


ஒவ்வொரு ஞாயிறென்றும் பகல் மூன்று மணி அளவில் கடிகாரம், பேனா ரிப்பேர் செய்வதாக ஒருவர் ஒரு பெரிய மரப்பெட்டியை சுமந்து கொண்டு வருவார். அதில் வித விதமான பேனாக்கள் வைத்திருப்பார்.

கடிகாரத்தை சர்வீஸ் செய்யக் கொடுத்தால் கண்களில் ஒரு லென்ஸை மாட்டிக் கொண்டு, “பார் எத்தனை அழுக்குஎன்று நம்மிடம் காட்டுவார்.

ஸ்ப்ரிங் சரியில்லை, முள் சரியில்லைஎன்று ஏதோ கூறி, என்னவோ செய்து ஓடவிட்டு செல்லுவார்.

அந்த கடிகாரம் கொஞ்ச நேரம் ஓடும் பிறகு நின்று விடும். சரி செய்தவரிடம் கேட்கலாம் என்றால் கொஞ்ச நாள் தலையை காட்ட மாட்டார்.

இவரைத் தவிர, “பூட்ரிப்பேர்(பூட்டு ரிப்பேர்), கொடை ரிப்பேர் என்று கூவியபடி ஒரு ஆள் அடிக்கடி வருவார்.

மழைக் காலங்களில் சிலர் அவரிடம் தங்கள் வீட்டு குடைகளை ரிப்பேர் செய்து கொள்வார்கள்.

வெள்ளிக் கிழமை என்றால் காலையில்,” உப்பு, உப்பு..என்று கை வண்டியில் உப்பை தள்ளிக் கொண்டு விற்க வருபவரிடம் பெரும்பாலும் எல்லோரும் உப்பு வாங்குவார்கள்.

வெள்ளிக் கிழமை உப்பு வாங்க வேண்டும் என்பது ஐதீகம் அல்லவா?

வாரத்தில் இரண்டு முறை கெரசின் ஆயில் விற்றுக் கொண்டு வருபவர் அந்த வண்டியில் உள்ள மணியால் ஒலி எழுப்பும் பொழுது தாய்மார்கள் தெரிந்து கொள்வார்கள் கெரசின் என்று.

அப்போ- தெல்லாம் எல்லா வீடுகளிலும் கேஸ் அடுப்பு கிடையாது.

கேஸுக்கு புக் பண்ணிவிட்டு கனெக்ஷனுக்காக காத்திருக்க வேண்டும்.

சிலிண்டர் தீர்ந்து விட்டாலும் புது சிலிண்டர் அத்தனை சீக்கிரம் வந்து விடாது. எனவே எல்லோர் வீட்டிலும் மண்ணெண்ணெய் அடுப்பும், அதற்கு தேவையும் இருக்கும்.


மண்ணெண்ணெயை ட்ரம்மில் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதிலிருந்து ஒரு பாட்டிலுக்கு இறைத்து வைத்துக் கொள்வார்கள். அப்படி இறைக்க ஒரு பம்பும் எல்லார் வீடுகளிலும் இருக்கும்.

1974-75 கால கட்டங்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்தது. விற்பவர் ஒரு வீட்டுக்கு இரண்டு லிட்டருக்கு மேல் விற்க மாட்டார்.

எனவே மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அந்த வண்டியின் மணி சத்தம் இன்பத் தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருக்கும்

இதைத் தவிர அந்தந்த ஸீசன்களுக்கு ஏற்றாற்போல கோல மாவு, வடு மாங்காய் எல்லாம் தெருவில் வரும்.

மல்லி, ஜாதி, கனகாம்பரம் போன்ற பூ விற்கும் பெண்கள், மாலையில்தான் வருவார்கள்.

மல்லிகைப் பூ சீசனில் மதியம் இரண்டு மணிக்கே உதிரிப் பூவை சைக்கிளில் விற்றுக் கொண்டு வருவார்கள்.

பால்காரர்கள் சைக்கிளில்தான் வருவார்கள்.

சைக்கிள் பாரில் சற்று பெரிய மணியை கட்டி வைத்து, அதை அசைத்துதான் ஒலி எழுப்புவார்கள்.

ஒவ்வொரு பால்காரரின் மணியும் வித்தியாசமாக ஒலிக்கும்.

காலை,மாலை என இரு வேளை மட்டுமே பால் கிடைக்கும். பாக்கெட் பாலும் கிடையாது, அதை வைத்துக் கொள்ள குளிர்சாதன பெட்டியும் கிடையாது.

நடுவில் யாராவது விருந்தாளிகள் வீட்டுக்கு வந்து விட்டால், அக்கம் பக்கத்தில் யார் வீட்டிலாவது பால் இருக்குமா என்று கேட்க வேண்டும்.

பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் கூட சிறிய மணியை ஒலி எழுப்பியபடிதான் வருவார்கள்.

இரவில் எட்டு மணிக்கு மேல் கடலை வருத்தபடி செல்லும் வண்டிக் காரர் அந்த இரும்பு சட்டியில் தட்டி டங் டங்என்று ஒலி எழுப்புவார்.

பத்து பைசாவுக்கு ஒரு பொட்டலம் கடலையில் அடியில் ஒரு சிறு வெல்லத் துண்டும் போட்டு கொடுப்பார்.

தலை நரைத்து, வெள்ளை புடவை கட்டிக்கொண்டு வெண்ணை,நெய் கொண்டு வரும் கவுண்டர் பெண்மணியின் அருகில் சென்றாலே வெண்ணை வாசம் அடிக்கும்.

வெண்ணை அளந்து போட்ட பிறகு, கையை நீட்டினால் ஒரு உருண்டை வெண்ணை கையில் போடுவார்.

பெரும்பாலும் மதியத்தில்தான் பழைய சேலைகளுக்கு பாத்திரம், பிளாஸ்டிக் பக்கெட்என்று குரல் எழுப்பியபடி எவர்சிவர், அலுமினிய பாத்திர வியாபாரிகள் வருவார்கள்.

விடுமுறை நாட்களில் வண்டியில் ஐஸ் க்ரீம் விற்பவர்கள் மற்றும் பலூன்காரர்கள் சிறு குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நகராமல் பாம் பாம்என்று ஹாரன் ஒலி எழுப்புவார்கள்.

பாத்திரங்கள் துலக்க அரப்புத்தூள் கொண்டு வரும் பெண்மணி பசலைப் பொடி என்று பச்சை நிறத்தில் ஒரு பொடி கொண்டு வருவார், கொஞ்சம் கொழகொழப்பாக இருக்கும் அதை சிகைக்காயோடு சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிப்போம்.

இதைத் தவிர காவடி போல நீண்ட கழியின் இரு புறங்களிலும் தொங்க விடப்பட்டிருக்கும் பானைகளை சுமந்தபடி பதநி , பதநிஎன்று விற்றுக் கொண்டு செல்லும் பதநீர் வியாபாரிகள்.

காலை வேளைகளில் கீரை, காய் கறி இவைகளைக்கொண்டு வருபவர்களின் அழைப்பு.

ஒரு கைப்பிடி அரிசிக்கு ஒரு கட்டு கொத்தமல்லி தரும் பாட்டி. இதே ஒரு கைப்பிடி அரிசிக்கு இலந்தை பழம்,க்ளாக்காய் எல்லாம் வாங்கி சாப்பிட்டிருக்கிறோம்.

இதில் விளக்குமாறு விற்பவர்களும், ஒட்டடை கம்பு விற்பவர்களும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

எல்லோரையும் போல அவர்களும் தங்கள் பொருளின் பெயரை குறிப்பிட்டுதான் கூவுவார்கள்.

நாமும் அவர்களை கவலையேப் படாமல் ஏ! விளக்குமாறு! ஏ! ஒட்டடை கம்பு! என்று அழைப்போம், கொஞ்சம் கூட பாதிப்படையாமல் அவர்கள் வருவார்கள்.

சாதாரணமாக யாரையாவது இப்படி அழைத்து விட முடியுமா?

எண்பதுகளின் இறுதியிலிருந்து நிலைமை மாற ஆரம்பித்தது.

மிக்ஸியும், கிரைண்டரும் ஆடம்பரம் என்பதிலிருந்து அத்தியாவசியம் என்னும் நிலைமைக்கு மாறத் துவங்கின.

தொன்னூறுகளின் இறுதியில் ஐ.டி. பூம் ஏற்பட்ட பிறகு, குளிர்சாதன

பெட்டியும், வாஷிங் மிஷினும் அத்தியாவசியமாகி விட்டன.

கடன் அட்டைகள் புழங்க ஆரம்பித்த பிறகு நாடார் கடைகளின் இடத்தை சூப்பர் மார்கெட்டுகள் பிடித்துக் கொண்டன.

தனி வீடுகள் குறைந்து கேட்டட் கம்யூனிட்டிகள் பெருகிய பிறகு வீதியில் சாமான்கள் விற்றுக் கொண்டு வருபவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் ஆன் லைனில் ஆர்டர் கொடுத்தால் சாமான்கள் அட்டை பெட்டியில் அழகாக வந்து விடுகின்றன.

மாறுதல்தானே வாழ்க்கை!

இந்த மாறுதலின் விளைவு உலகின் ஒரு ஒப்பற்ற உன்னத கலாச்சாரம் சிதைந்து சின்னாபின்னமானது என்பதை தவிர வேறு எந்த ஒரு நன்மையையும் விளைவிக்கவில்லை என்பதே இன்றைய வாழ்க்கை முறையில் நாம் காணும் நிதர்சனம்.

விடுபட்டவர்கள்:

பாம்பாட்டி

குடுகுடுப்பை

ராப்பிச்சை

மாட்டுப்பொங்கல்

கோவிந்தோ

வேர்க்கடலையில் பொரி

தென்னமரம் ஏறி

கீழ்கண்ட

இவர்கள் நிழலில் வளர்ந்த

என் நினைவில் நின்றவர்கள்

வீட்டு வேலை ராஜம்

பால் காரி நாகம்மா

காய்கறி கோவிந்தன்

மேஸ்த்திரி ஆனந்தன்

சைக்கிள் சாப்பாடு கேரியர் கந்தசாமி

வெத்திலை மீசை

பூம் பூம் பும் மாட்டுக்காரன்

கிணறு தூர் வாருதல்

ரீட்டா வெண்ணிலா குச்சி ஐஸ் ...

முக்கியமாக மனதில் ஒரு அமைதி இருந்தது அப்போது! !

 


 

நன்றி இணையம்