திருநெல்வேலி சுண்டக்கறி தெரியுமா ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:10 | Best Blogger Tips

 



#பொங்கச்சோறும்_சுண்டக்கறியும்:

சாப்பாட்டை ரசனையாக உண்ணும் திருநெல்வேலிக்காரர்கள் வரலாற்றில் சுண்டக்கறி முக்கிய இடம்பெறும். திருநவேலிகாரன் தின்னு கெட்டான்னு ஒரு சொல் வழக்கு உண்டு

கறின்னு சொன்னதும் இது அசைவமா இருக்கும் நெனச்சுறாதீங்க. காய்கறி என்பதன் கறி இது சுத்த சைவம்

தைப் பொங்கல் அன்று வாசலில் பொங்கல் வைத்து, இலையில் படைத்த காய்கறிகளை கொண்டு அவியல், பூசணிக்காய் பச்சடி, புடலங்காய் பொரியல், சிறுகிழங்கு பொரியல் ஆகியவற்றுடன் இடி சாம்பார் வைத்து மதியம் சாப்பிடுவது வழக்கம்.

பொங்கல் அன்று மதியம் பொங்கலுக்கென்றே சிறப்பாக கிடைக்கும் சிறுகிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கிழங்கு ஆகியவற்றுடன் கேரட், பீன்ஸ், உருளை, சீனி அவரைக்காய், முருங்கைக்காய், நாட்டு வாழைக்காய், மாங்காய் ஆகியவை சேர்த்து அவியல் செய்வார்கள்.

அது போல பொங்கச்சோறுக்கு என்றே திருநெல்வேலி பகுதியில் பல வித காய்கறிகளை கொண்டு இடி சாம்பார் என்ற குழம்பு வைப்பார்கள்.


இதோடு பூசணிக்காய் பச்சடி அல்லது வெண்டக்காய் பச்சடி , சிறு கிழங்கு பொரியல் வகைகள் என தயார் செய்து பொங்கல் விருந்து தடபுடலாக நடைபெறும்.

பொங்கல் அன்று மதியம் இதனை உண்டு ஒய்வெடுத்த பின்பு

பின்னர் இரவில் மீதமிருக்கும் (கட்டாயம் மீதமிருக்கும் அதற்காகவே அதிகமா வைப்பார்கள் )இடிசாம்பார் அவியல் பச்சடி அனைத்தையும் கொண்டு சுண்டக்கறி வைக்கும் படலம் இனிதே துவங்கும்.

இதில் முட்டைகோஸ் பொரியல் இருந்தால் சேர்க்க மாட்டார்கள் அது ஊசிபோயிடும் (கெட்டுவிடும்)

அதென்ன சுண்டக்கறி?

மதியம் வைத்த இடி சாம்பார், அவியல், பச்சடி, பொரியல் அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து அதனை மீதமான தீயில் சூடேற்ற வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சுண்டி வரும். அதன் வாசனையே ஒரு விதமாக ரம்மியமாக இருக்கும்.

இந்த கலவையோடு தேவைக்கேற்ப சற்று புளிக்கரைசல் மற்றும் மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து மண் சட்டியில் சுண்ட வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

பொங்கச்சோறு:

பொங்கல் விட்ட சாதத்தை முந்தைய நாள் இரவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வைத்து விடுவோம். இந்த சாதம் தான் எங்களுக்கு மறுநாள் மதிய உணவே....

இந்த பொங்கச்சோறில் (பழைய சோறு) தயிர் விட்டு பிசைந்து சாதம்பாதி சுண்டகறி பாதின்னு சுண்டக்கறிய தொட்டு சாப்பிட்டால் பச்சரிசி சாதம் உருண்டை உருண்டையா உள்ள போறதே தெரியாம வயித்தை நிரப்பிடும்.

பொங்கலுக்கு மறுநாளுக்கு மறுநாள் பொங்கல் சோறு தீர்ந்திடும். ஆனா சுண்டக்கறி இருக்கும். கொஞ்சம் சூடா சாதம் வடிச்சு சுண்டக்கறி சேர்த்து அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்....

அதே சுண்டக்கறியை சூடாக தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆகா.... சுவையோ சுவையாக இருக்கும்.

பொங்கல் முடிந்த இரண்டு நாட்களுக்கு சுண்டக்கறி தான் எல்லத்துக்கும்



நன்றி -திருநெல்வேலிக்காரன்.