மூன்றாவது அலை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:41 | Best Blogger Tips

 


அனுபவம் வழி பாடம் கற்றல்

பகுதி - 2

நம் மூதாதையர் கண்டுபிடித்த முதல் தடுப்பூசி

தடுப்பூசி அறிவியல் என்பது

நம் மூதாதையர் அறிந்த அறிவு தான்

அதை நவீன மனிதன் செறிவூட்டி பக்குவப்படுத்தியிருக்கிறான்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

நம் மனித இனத்துக்கு கடந்த 12000 ஆண்டுகளாக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த ஒரு கொள்ளை நோய்

பெரியம்மை” (Small pox)

அனைவரும் பார்த்திருப்பீர்கள்

1950களில் இருந்து 70கள் வரை பிறந்தவர்களுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்ட தழும்பு இடப்பக்க தோளில் இருக்கும்.

அந்த தழும்புகளுக்குப்பின் பெரிய வரலாறு இருக்கிறது.

பெரியம்மை என்பது கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பிருந்தே மனித இனத்தை அச்சுறுத்தும் கொள்ளை நோயாகும்.

கிமு 300 ஆம் ஆண்டு எகிப்த்தை ஆட்சி செய்த பாரோ மன்னனுக்கு இருந்தது என்பதை அவனது பதப்படுத்தப்பட்ட மம்மியில் இருந்த அம்மைத்தழும்புகள் உறுதி செய்தன.

இந்த நோய் ஆரம்ப கால வணிக பயணங்களினூடே ஒவ்வொரு நூற்றாண்டாக பல கண்டங்களையும் பல நாடுகளையும் தாண்டி உலகம் முழுவதும் பரவியது.

இப்போது கோவிட்-19 எப்படி இருமுவதால் தும்முவதால் பரவுகிறதோ அதே போன்று எளிதில் பரவும் நோயாக இருந்தது.

இந்த நோய் தாக்கிய பத்து பேரில் மூன்று பேர் இறந்து வந்தனர். குழத்தைகளைத் தாக்கினால் 80 சதவிகிதம் மரணம் தான்.

தப்பிப்பிழைத்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவு தழும்புகளை பரிசாகத்தந்து விடும் கொடிய நோய் அது.

உலகில் முதன் முதலாக அறியப்பட்ட தடுப்பூசி

வைத்தியம் "பெரியம்மையை" தடுப்பதற்காக செய்யப்பட்ட "வேரியோலேசன்" (Variolation) எனும் முறையாகும்.

இந்த முறையில் பெரியம்மை வந்து குணமடைந்தவரின் உடலில் ஏற்பட்ட புண், காய்ந்த பின் அந்த சருகை (Scabs) எடுத்து மூலிகையுடன் சேர்த்து இடித்து பொடியாக்கி விடுவார்கள்.

அந்த பொடியை தோள்களில் புண் உண்டாக்கி அதில் தேய்ப்பது அல்லது சுவாசக்காற்று மூலம் உள்ளே இழுத்துக்கொள்வது என்ற முறையில் மக்களுக்கு கொடுத்து வந்தனர்.

இதன் மூலம் வேரியோலேசன் செய்யப்பட்ட மக்களுக்கு சிறிது நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், உடல் முழுவதும் படை தோன்றும். ஆனாலும் பெரியம்மை தாக்கி மரணமடையும் மக்களை விட வேரியோலேசன் செய்யப்பட்ட மக்கள் குறைவாகவே இறந்தனர்.

பெரியம்மை வந்து 30% பேர் இறந்தார்கள் என்றால்

வேரியோலேசன் செய்யப்பட்டவர்களில் மரண விகிதம் 2% என்று குறைந்தது.

இவ்வாறு உலகின் முதல் தொற்று நோய்க்கான வேக்சினை தடுப்பு மருந்தை ஆசியாவில் அதிலும் வட கிழக்கு இந்தியாவிலும் நமது சுதந்திரத்திற்கு முந்தைய மெட்ராஸ் மாகாணத்தின் சில பகுதிகளிலும் நமது மூதாதையர்கள் கடைபிடித்து வந்தனர்.

இந்த வேரியோலேசன் முறை கிபி 1000 க்கும் முன்பிருந்தே இந்தியாவில் வழக்கத்தில் இருந்துள்ளது. எனவே தடுப்பூசி தத்துவம் என்பது நமக்கு புதிதன்று.

இந்த முறை பிறகு அருகில் இருக்கும் கண்டங்களுக்கும் பரவியது.

ஐரோப்பாவிற்கு 18ஆம் நூற்றாண்டு இந்த முறை சென்றடைந்தது.

இதன் மூலம் அங்கு பல கோடி மக்கள் இறப்பில் இருந்து காக்கப்பட்டனர்.

இவ்வாறாக இங்கிலாந்தின் அரச குடும்பத்தின் அங்கீகாரத்துடன் ஐரோப்பா முழுவதும் பரவலாக இந்த வேரியோலேசன் முறை கடைபிடிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் இந்த முறை பலருக்கு ஒரே நேரத்தில் செய்யப்பட்ட போது தீவிரமான பெரியம்மை கொள்ளைநோயை

உருவாக்கி பலர் இறந்தனர்.

இதனால் அதுவரை இந்த முறையை ஆதரித்து வந்த இங்கிலாந்து 1772ஆம் ஆண்டு வேரியோலேசன் முறையை மனிதத்தன்மையற்றது என்று முடிவு செய்து தடை செய்தது.

இதற்கடுத்தக்கட்ட முயற்சியாக 1796 ஆம் ஆண்டு இங்கிலாந்து மருத்துவரான எட்வர்ட் ஜென்னர்(1749-1823) அவர்கள் பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் ஆயத்தப்பணிகளில் இறங்கினார்.

அவரை பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உந்திய நிகழ்வு யாதெனில்

" தனது பண்ணையில் பால் பீய்ச்சும் பெண்களுள் பசுக்களுக்கு வரும் அம்மை நோயால் (Cow Pox) பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் வேரியோலேசன் செய்தாலும் காய்ச்சல்/படைகள் உருவாகவில்லை"

இந்த சிந்தனையை முதலாக வைத்து தனது ஆராய்ச்சியை தொடக்கினார்.

பால் பீய்ச்சும் பெண்ணான சாரா நெல்ம்ஸ் மற்றும் தனது தோட்டப்பணியாளரின் ஒன்பது வயது மகனான ஜேம்ஸ் ஃபிப்ஸ் இருவரையும் தனது ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்தார்.

நெல்ம்ஸ்க்கு வந்திருந்த பசு அம்மை நோயினால் ஏற்பட்டு புண்ணில் இருந்து சலத்தை எடுத்து

சிறுவனான ஃபிப்ஸின் தோள்களில் செலுத்தினார்.

சிறிது நாட்களுக்கு பிறகு

ஃபிப்ஸை பெரியம்மை நோய் வந்தவர்களுடன் பலமுறை நெருங்கி இருக்கச்செய்தார்.

அத்தனை முறையிலும் ஃபிப்ஸ்க்கு பெரியம்மை நோய் தாக்கவில்லை.

இந்த ஆராய்ச்சியை முறைப்படுத்தி 1801ஆம் ஆண்டு தனது அறிவியல் ஆய்வை வெளியிட்டார்.

உலகின் முதல் தடுப்பூசி கண்டறியப்பட்டு விட்டது.

கண்டறியப்பட்ட தடுப்பூசி முறை பழைய வேரியோலேசன் முறையை பின்னுக்குத் தள்ளி உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுமார் 12000 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பெரியம்மை

1952 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் முறையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒழிக்கப்பட்டது. என்னதான் வளர்ந்த நாடுகளில் ஒழிக்கப்பட்டாலும் வளரும் நாடுகள் இருக்கும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் தொடர்ந்து பெரியம்மை நிலைத்து வந்தது.

வளர்ந்த நாடுகளில் கிடைத்த நம்பிக்கையான முடிவுகளை ஒட்டி

பெரியம்மை நோயை உலகை விட்டு ஒழிக்க முடியும் என்று சபதம் எடுத்து உலக சுகாதார நிறுவனம் (World health organisation)

1959ஆம் ஆண்டு பெரியம்மை ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்தது.

தொடக்கத்தில் பெரிய அளவில் ஆதரவும் இல்லை. நிதி ஒதுக்கீடும் இல்லாமல் தோல்வி முகத்தில் இருந்த இந்த இயக்கமானது, 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் பிஹார், ஒரிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஏற்பட்ட பெரிய்மமை கொள்ளை நோய்க்கு பிறகு வீரியமடைந்தது.

இதற்கு காரணம் அந்த கொள்ளை நோயில் மட்டும் இந்தியாவில் 15,000 பேர் மரணமடைந்தனர்.

இந்த கொள்ளை நோயை ஒட்டி அது பரவாமல் தடுக்க

உலக சுகாதார நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து

ஜனவரி 1975ஆம் ஆண்டில் " இலக்கு பூஜ்யம்" (TARGET ZERO) என்ற இயக்கத்தை ஆரம்பித்து இந்திய மக்கள் அனைவருக்கும் பெரியம்மை தடுப்பூசியை கொடுக்க ஆரம்பித்தார்கள்.

கொள்ளை நோயினால் ஏற்பட்ட பீதியில் இந்திய மக்கள் அனைவரும் பெரியம்மை தடுப்பூசிகளை தேடித்தேடி போட்டுக்கொண்டனர் என்கிறது வரலாறு.

இதன் விளைவாக 1975 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி பெரியம்மை நோய் இந்தியாவில் இருந்து ஒழிக்கப்பட்டது.

ஆசியாவின் கடைசி பெரியம்மை நோயாளியாக 1975ஆம் ஆண்டில் பங்களாதேஷைச் சேர்ந்த ரஹிமா பானு என்ற மூன்று வயது குழந்தை அமைந்தாள்.

1977 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து பெரியம்மை விடை பெற்றது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகில் வேறெங்கும் பெரியம்மை நோயாளிகள் தோன்றவில்லை.

எனவே, உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சியான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் 1980ஆம் ஆண்டு பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை அச்சுறுத்தி சேதப்படுத்தி வந்த பெரியம்மை நோய் உலகை விட்டு ஒழிக்கப்பட்டு விட்டது என்று

அறிவித்து மகிழ்ந்தது.

பெரியம்மை நோய்க்கு எதிரான மனித சமுதாயத்தின் போராட்டத்தில் நினைவு கூறத்தக்க சாதனையாளர் டாக்டர். எட்வர்ட் ஜென்னர்.

அவரது அந்த ஆராய்ச்சிக்கு பிறகு தான் தடுப்பூசி குறித்த விஞ்ஞானம் வளர்ந்தது.

பெரியம்மையை உருவாக்கும் காரணியான வேரியோலா வைரஸை பார்க்கும் வசதிகள் இல்லாத பதினெட்டாம் நூற்றாண்டிலேயே அதற்கு தடுப்பூசியை கண்டறிந்த சாதனையை எவ்வளவு மெச்சினாலும் தகும்.

20ஆம் நூற்றாண்டில் மட்டும் ஐம்பது கோடி மக்களின் உயிரைக் கொன்றொழித்த பெரியம்மை எனும் பேரரக்கனுக்கு அதே நூற்றாண்டின் இறுதியில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்ட வெற்றிக் கதைகள் அடங்கியது நம் முன்னோர்கள் வரலாறு.

இப்போதே உங்களின் வீட்டில் இருக்கும் 1980க்கு முன்பு பிறந்தவர்களின் இடது தோள்களில் இருக்கும் பெரியம்மை தடுப்பூசி தழும்பை ஒருமுறை தொட்டுப்பாருங்கள்.

அறிவியல் பாதையில் பயணித்தால் எத்தனை பெரிய சுகாதார அச்சுறுத்தலில் இருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

இன்றே உங்களுக்கான கோவிட் தடுப்பூசியைப் பெறுங்கள்

தடுப்பூசி குறித்து பரப்பிவிடப்படும் பொய் புரட்டுகளை நம்பி கோவிட் நோய்க்கு இரையாகி விடாதீர்கள்

மூன்றாவது அலையில் மரணங்களைக் குறைக்க உதவுங்கள்

அனாதைகள் உருவாவதைத் தடுங்கள்

இளம் விதவைகள் உருவாவதைத் தடுங்கள்

வாருங்கள் அறிவியலை நோக்கி வாருங்கள்

கீழே உள்ள படத்தில்

பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டவரும்

போடப்படாதவரும்

 



நன்றி இணையம்