விருந்தோம்பல் என்பது

மணக்கால் அய்யம்பேட்டை | 3:31 PM | Best Blogger Tips
Image result for விருந்தோம்பல் என்பது"

ஐயா, சாப்பிட வாங்க...என மாணவர்கள் ஆசிரியரை அழைத்தனர். என்னடா , இன்னிக்கு விசேஷம்? என்றவாறே தனது அறைக்குள் மதிய உணவு உண்பதற்கு உள்ளே நுழைந்தார் ஆசிரியர்.

அப்பொழுது ஓர் மாணவன் இலையை மாத்திப் போடவே அதனைக் கண்ட ஆசிரியர், இலையை இப்படி போடக்கூடாது என வசதியாக இலையை போட்டு கொண்டார்.

ஏன் சார் , நான் போட்ட வசம் தப்பா ? எப்படி போட்டால் என்ன சார்... இலையில் தானே சாப்பாடு போடப் போறேன் என்றான் மாணவன். இதற்கு ஏதாவது சடங்கு, சம்பிரதாயம் இருக்கா ஐயா?..

சடங்கெல்லாம் ஒன்றும் கிடையாது..ஆனால், ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது என்று கூறியவாறே வாழையிலையில் நீர் தெளித்து இலையை நன்கு சுத்தப்படுத்தினார்.
Image result for விருந்தோம்பல் என்பது"
ஐயா தண்ணீரில் கழுவியது தான் என்றான் மாணவன்.
நாம் இலையில் தண்ணீர் விட்டாலே கழுவியதாகட எண்ணக்கூடாது...அதில் படிந்திருக்கும் தூசும் சரி , பறவைகளின் எச்சமும் சரி எளிதில் நீங்காது. எப்பொழுது இலையை போட்டாலும் தண்ணீர் வைத்த பிறகு விருந்தினர் அமர்ந்து இலையை கழுவிய பிறகுதான் உணவு பரிமாற வேண்டும். இதனால் விருந்தினர் திருப்தியாக உண்பார்கள் உணவு வீணாகாது,. சரியா.. ?

அது சரி ஐயா , இலை ஏன் மாத்திப் போட்டுக்கிட்டிங்க ?
சொல்றேன். நுனி இலை இடது பக்கமும் , வலது பக்கம் அடி இலை இருக்க வேண்டும். சாப்பிடும் பகுதி இலை அகலமாக இருப்பது மட்டுமல்லாமல் முற்றி இருப்பதால் சூடாக சோறு வைத்தாலும் வெந்து போகாது. நம் எதிர் பகுதியில் பதார்த்தஙகளை வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு வலது கை உபயோகிப்பதால் எளிதில் சாப்பிட ஏதுவாக இருக்கும் என்றார். கொழுந்து இலையில் சூடாக சாப்பாடு வைத்தால் இலையானது வெந்து உணவோடு சாப்பிட நேரும் என்றார் ஆசிரியர்.

சரி ஐயா , சாப்பாடு வைக்கட்டுங்களா..

இனிப்பை முதலில் வை என்றார் ஆசிரியர்.

ஏன் ஐயா..? விருந்தின் போது முதலில் இனிப்பை சாப்பிடுவதால் நம் வாயிலிருந்து உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் தான் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாக உதவும். சாப்பிடுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் நீர் அருந்த வேண்டும். சாப்பிட்டு முடித்து சுமார்15 நிமிடத்திற்கு பிறகு தான் நீர் அருந்த வேண்டும். இடையில் நீர் அருந்தக்கூடாது. அவ்வாறு அருந்தினால் உமிழ்நீர் சுரப்பது நின்று வயிற்று கோளாறு ஏற்படும்.

சரிங்க ஐயா ரசம் போடட்டுமா ? என்றான் மாணவன்.
பொறு..முதலில் சாம்பார் ,அடுத்து குழம்பு, ரசம் போட்டு , பாயாசம் பரிமாறிய பிறகு மோர் போட்டு சாப்பிட வேண்டும்.

'
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் '

முன் உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ணும் பழக்கமுடையோருக்கு வாழ்நாளில் மருந்து உண்ண வேண்டிய அலசியம் இராது என வள்ளுவப் பெருமான் கூறுகிறார்.

திட உணவு அரை வயிறும் , திரவ உணவான நீர் , பால் , மோர் கால வயிறும் , மீதம் கால் வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். காலை வேளையில் வீரன் போலவும், மதியம் இராஜாவை போலவும் , இரவில் ராணி போல அளவோடு உண்ண வேண்டும் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர் என்றார் ஆசிரியர்.
விருந்தோம்பலில் இவ்வளவு விஷயமிருக்கா ஐயா என்றான் மாணவன்.

இன்னும் இருக்கு. சரியாக உணவு உண்ணாமல் போனால் குடற்புண் ஏற்பட வாய்ப்புண்டு. உணவு சாப்பிடவிட்டால் வயிற்றில் ஹைடரோ குளோரிக் அமிலம் உற்பத்தியாகி உடலை விட்டு வெளியேறாமல் தொந்தி விழ காரணமாகிறது. நமக்கு ஆரோக்கியம் குன்ற இதுவும் ஒரு காரணமாகும். விருந்தின் போது ஆறு சுவையான வகையில் பரிமாறப்பட வேண்டும். விருந்தில் பரிமாறப்படும் உணவில் இருக்கிற கறிவேப்பிலை ,

கொத்தமல்லித் தழை என ஒதுக்காமல சாப்பிட வேண்டும். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் , பூண்டு எதையும் ஒதுக்காமல் உணவோடு சேர்த்து நொறுங்க தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். விருந்து முடிந்த பின் இலையை நல் விருந்து என்றால் நம் பக்கமாக மூட வேண்டும். கெட்ட காரிய விருந்து என்றால்

வேண்டாமென்பது போல எதிர்புறமாக மூட வேண்டும். இது குறிப்பால் உணர்த்தும் முறை. நம் முன்னோர்கள் வகுத்த வழி.

அருமை ஐயா...இதுதானா இன்னும் இருக்கா ஐயா . .

அவசரப்படாதே..விருந்தை தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்ண வேண்டும். பூமியின் ஈர்ப்பு சக்தியால் காலை மடக்கி சம்மணமிட்டு சுக ஆசனத்தில் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். விருந்துக்கு பிறகு , தாம்பூலம் தரிப்பார்கள்.
தாம்பூலம்னா என்ன ஐயா?

அதுவா வெற்றிலை , பாக்கு , சுண்ணாம்பு சேர்ந்தது தான் தாம்பூலம். இது 

ஜீரணமாவதற்கு அருமையான மருத்துவம். பாக்கில் கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தையும் , வெற்றிலையில் உள்ள காம்பை நீக்கிட அதிலுள்ள உரைப்பு கபத்தையும் , சண்ணாம்பிலுள்ள காரம் வாதத்தையும் போக்கும் தன்மையுடையது. அதனால தான் வெற்றிலைச் செல்வம் என கூறுகின்றனர். புகையிலையை எக்காரணத்தை கொண்டும் சேர்க்க கூடாது , போதுமா?
அருமை ஐயா.. நீங்கள் சாப்பிடாமலே விவரமாக சொல்லி விட்டீர்கள்.. இனி நீங்கள் சாப்பிடுங்கள் ஐயா, என்றான் மாணவன். அது சரி ஐயா...வயதானவர்கள் மட்டுமே தாம்பூலம் தரிக்கிறார்கள்...பல பேர் போடுவதில்லை ஐயா...என் போன்றோர் வெற்றிலை பாக்கு போடுவதில்லை ஐயா...

நல்ல கேள்வி ! இளையோர் ஓடியாடி விளையாடுவதால் எளிதில் செரிக்கும். முதியோர்களால் இயலாத காரணத்தால் தான் தாம்பூலம் தரிக்கிறார்கள்...புரிந்ததா ?

அருமையோ அருமை ஐயா. பள்ளியில் படிக்கும் பாடத்தை எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் , இது போன்ற சமூக அனுபவங்களின் பாடத்தை உங்களை தவிர வேறு யாரும் சொல்ல முடியாது ஐயா... நன்றி ஐயா..

விருந்தோம்பல் என்பது மிகப்பெரிய கலை. அதை எவரும் முறையாக பின் பற்றுவதில்லை எனகூறியவாறு பேசாமல் உணவருந்தினார் ஆசிரியர். வாழ்க வளமுடன்




நன்றி இணையம்