இஸ்ரேல் தைரியம் ! இந்தியாவிற்கு வேண்டும் !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips
Image result for இஸ்ரேல் தைரியம்Image result for இஸ்ரேல் தைரியம்

இஸ்ரேல் எந்த வளமும் இல்லாத பாலைவன நாடு. சுமார் 800 சதுர மைல் உள்ள ஒரு சிறிய தேசம். யூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நாடு. பின்னாட்களில் கிருத்தவர்களாலும், இஸ்லாமியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு யூதர்கள் இஸ்ரேலிலிருந்து விரட்டப்பட்டனர். யூதர்கள் எப்படி தங்கள் தாய் நாட்டை மீட்டெடுத்தனர் என்பது நீண்ட நெடிய வரலாறு.
இஸ்ரேலின் முக்கிய நகரமான ஜெருசலேம் யூதர்கள், கிருத்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் புனித் ஸ்தலம்.
இன்றைய இஸ்ரேலைச் சுற்றிலும் இஸ்லாமிய தேசங்கள்தான் இருக்கின்றன. எகிப்து, பாலஸ்தீனம், ஜோர்டான், சிரியா, லெபனான், அரேபியா, ஈராக்…..
கடந்த காலங்களில் மேற்சொன்ன இஸ்லாமிய தேசங்கள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இஸ்ரேலை அழிக்க பல முறை முயன்றுவிட்டன. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்விதான். 1967 ஆம் ஆண்டு இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பெயரில் இஸ்லாமிய தேசங்கள் அனைத்தும் இஸ்ரேலை ரவுண்டுகட்டினார்கள். விளைவு அவர்களுக்குத்தான் சேதாரம். இஸ்ரேலிடம் இந்த நாடுகள் தங்கள் நாட்டின் சில பகுதிகளை இழந்தன.
நேர்முகமாக இஸ்ரேலை தோற்கடிக்க முடியாது என்று நினைத்த பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலின் மீது மறைமுக தாக்குதல்களில் ஈடுபட்டன. குண்டு வைப்பது, ராக்கெட்டை வைத்து தாக்குவது என அனைத்தையும் கையாண்டன. இஸ்ரேல் எதற்கும் சளைக்கவில்லை. தீவிரவாத தாக்குதல்களை திறம்பட எதிர்கொண்டது. இன்று உலகிலேயே சிறந்த உளவுப்படை எதுவென்றால் அது இஸ்ரேல் நாட்டின் மோசாட்தான்.
உள்நாட்டில் ஒன்றும் செய்யமுடியாத காரணத்தால் வெளி நாடுகளில் இருக்கும் யூதர்களின் மீது தாக்குதல் நடத்தியது பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள். 1972 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முனிச் நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை Black September என்ற பாலஸ்தீனிய தீவிராவாத இயக்கதைச் சேர்ந்தவர்கள் பணயமாக பிடித்து பின்னர் கொலை செய்தனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய உளவு நிறுவனம் ஒலிம்பிக் வீரர்களைக் கொன்ற 11 பாலஸ்தீன தீவிரவாதிகளை உலகம் முழுவதும் சுமார் 20 ஆண்டுகள் தேடி வேட்டையாடிக் கொன்றது. பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தினால், நாங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்று சொல்லும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இங்கு ஒப்பிடுக. முனிச் சம்பவத்தையும் அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகளை இஸ்ரேல் இராணுவம் வேட்டையாடுவதையும் மையமாக வைத்து ஸ்டீபன் ஸ்பீல்பர்க்முனிச்என்ற பெயரில் திரைப்படம் எடுத்து 2005 ஆம் ஆண்டுவெளியிட்டார். சிடி கிடைத்தால் பாருங்கள், அருமையான படம்.
இதையடுத்து 1976 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 27 ஆம் தேதி, இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்விலிருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஏதன்ஸ் நகரில் தரை இறங்கிய போது, பாப்புலர் ஃப்ரண்ட் என்ற பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பும் சேர்ந்து விமானத்தைக் கடத்தினார்கள்.
கடத்தப்பட்ட விமானம் உகாண்டா நாட்டில் உள்ள எண்டபி விமானத் தளத்திற்கு கடத்திச் செல்லப்பட்டது. அப்பொழுது உகாண்டாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் இடி அமின். ஆம்! நரமாமிசம் சாப்பிடும் அதே மாமனிதர் தான். இடி அமின் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்துவந்தார்.
விமானத்தில் 304 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகள் உட்பட 316 பயணம் செய்தனர். தீவிரவாதிகள் இஸ்ரேலிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டனர். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், ஜூலை ஒன்றாம் தேதியன்று பணயக் கைதிகள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர்.
தீவிரவாதிகளின் கோரிக்கை - இஸ்ரேலில் உள்ள 40 தீவிரவாதிகளையும், கென்யா நாட்டில் உள்ள 13 தீவிரவாதிகளையும் விடுதலை செய்யவேண்டும். இடி அமினும் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேசினார். பார்த்துக்கோங்கப்பா, இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை; தீவிரவாதிகள் பொல்லாதவர்களாகத் தெரிகிறார்கள்; அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டு பயணிகளை மீட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
ஜூலை ஒன்றாம் தேதிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன. இஸ்ரேலிலிருந்து எண்டபி சுமார் 4000 கி.மீ தொலைவில் இருந்தது. இஸ்ரேல், இந்திய அரசாங்கம் போல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கவில்லை. காரியத்தில் இறங்கியது இஸ்ரேல் அரசாங்கம். பாக்கிஸ்தானிய தீவிரவாதிகளால் இந்திய விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது, இந்திய அரசாங்கம் மூன்று பயங்கர இஸ்லாமியத் தீவிரவாதிகளை விடுதலை செய்து பணயக் கைதிகளை மீட்டது. ஆனால் இஸ்ரேல் அரசாங்கம் என்ன செய்தது என்று பார்ப்போம்.
இதற்கிடையில் எண்டபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்களுடன் கூடுதலாக சில தீவிராவதிகளும் சேர்ந்துகொண்டனர். இடி அமின் அரசாங்கம், தீவிரவாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு மற்றும் இன்ன பிற உதவிகளை புரிந்தது. கடத்தல்காரர்கள் பயணிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தனர். யூதர்கள், யூதர்கள் அல்லாதோர். 106 யூதப் பயணிகளை மட்டும் தனியாக ஒரு இடத்தில் தங்க வைத்தனர். ஏனையப் பயணிகளை விடுதலை செய்துவிட்டனர். ஏர் பிரான்ஸ் விமான ஓட்டுனர்கள் மற்றும் சிப்பந்திகளை கடத்தல்காரர்கள் விடுவித்த பின்பும் அவர்கள் போக மறுத்துவிட்டனர்.
இஸ்ரேல் அரசாங்கம் கடத்தல்காரர்களிடம் தங்களுக்கு விடுக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்கும்படி கேட்டுக்கொண்டது. அதற்கிணங்கிய கடத்தல்காரர்கள், காலக்கெடுவை ஜூலை 4 ஆம் தேதி வரை நீட்டித்தனர்.
மறுபக்கம் இஸ்ரேலில் ஆபரேஷன் தண்டர்போல்ட்க்கு (Operation Thunderbolt) ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஜுலை 3 ஆம் தேதி இரவு, நான்கு கனரக விமானங்கள் (ஹெர்குளிஸ் சி 130) தயாராகின. அவைகளுக்கு ஹிப்போ என்ற பெயரும் உண்டு. ஹிப்போபொட்டாமஸ் (நீர்யானை) போன்று உருவில் பெரியதாக இருக்கக்கூடிய விமானங்கள். 100 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் ஹிப்போவில் ஏறிக்கொண்டனர். இராணுவத் தளவாடங்களும், ஆயுதங்களும் ஏற்றப்பட்டன. மருத்தவர்களும், செவிலியர்களும் ஏற்றப்பட்டனர். ஹிப்போக்கள் தன்னுடைய எண்டபிக்கான 4000 கி.மீ பயணத்தை தொடங்கின. கடல் மார்க்கமாகவே ஹிப்போ விமானங்கள் ஓட்டிச் செல்லப்பட்டன. ஆப்பிரிக்கா கண்டத்தில் மற்ற நாடுகளின் அருகாமையில் பறக்கும்போது, அவர்களின் ரேடார்களின் பார்வையில் ஹிப்போக்கள் பட்டுவிட்டால் விபரீதம்தான். அதனால் ரேடார்களின் பார்வையில் படாமால் இருப்பதற்காக 100 அடி உயரத்திற்குக் குறைவான உயரத்தில்தான் ஹிப்போக்கள் பறந்தன.
இந்த நீண்ட பயணத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது ஹிப்போ விமானங்களுக்கு எரிவாயு தேவைப்படும். போகும் வழியில் ஹிப்போ விமானங்களுக்கு எரிவாயு நிரப்பப்படவேண்டும். இல்லையென்றால் இந்த மீட்பு முயற்சி தோல்வியில் முடியும். இஸ்ரேல் அரசாங்கம், கென்யா அரசாங்கத்தின் உதவியை நாடியது. கென்யா அரசாங்கம் ஹிப்போக்களுக்கு எரிவாயு நிரப்ப ஒப்புக்கொண்டது (இதற்காக கென்யா அரசாங்கம் பின்னாளில் பல பின்விளைவுகளை சந்தித்தது என்று நான் சொல்லவேண்டியதில்லை).
திட்டமிட்டபடி எண்டபிக்கு போகும் வழியில் ஹிப்போக்கள் கென்யாவில் எரிவாயுவை நிரப்பிக்கொண்டன. இரவு சுமார் 11 மணிக்கு, நான்கு ஹிப்போக்களும் எண்டபி விமான நிலையத்தில் சத்தமில்லாமல் தரை இறங்கின. விமானத்திலிருந்து இராணுவ பீரங்கிகள் மற்றும் ஜீப்புகளுடன் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் இறங்கினர். சந்தடி சத்தமில்லாமல் பணயக்கைதிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். நாங்கள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள், உங்களைக் காப்பற்ற வந்திருக்கிறோம். அனைவரும் தரையில் படுங்கள் என்று ஹிப்ரு மொழியில் ஒலிப் பெருக்கியில் அறிவிப்பு கொடுத்தனர். பணயக் கைதிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் தரையில் படுத்தனர். இஸ்ரேலிய வீரர்கள் தங்களுடைய கட்டளையை ஏற்க மறுத்த அந்த ஒரு பணயக் கைதியை தீவிரவாதி என்று நினைத்து சுட்டுவிட்டனர்.
ஏனைய பணயக் கைதிகளை பத்திரமாக இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஹிப்போவுக்கு கூட்டிச் செல்லும் வழியில், தீவிரவாதிகள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுடன் உகாண்டா இராணுவமும் சேர்ந்துகொண்டது. மீட்புக் குழுவினருக்கும், தீவிரவாதிகளுக்கும்/உகாண்டா இராணுவ வீரர்களுக்கும் நடந்த இந்தச் சண்டையில் மேலும் இரண்டு பணயக் கைதிகளும் ஒரு இஸ்ரேலிய தளபதியான யோனாதன் நேத்தன்யாஹூம் கொல்லப்பட்டனர். இவர் வேறுயாறும் அல்ல பின்னாளில் இஸ்ரேலின் பிரதம மந்திரியாகப் போகும் பெஞ்சமின் நேத்தன்யாஹூவின் தமையனார். கடத்தல்காரர்கள் தரப்பில் அனைத்து கடத்தல்காரர்களும் உயிரிழந்தனர். உகாண்டா இராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்களும் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். மீட்பு முயற்சி சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது.
ஏனைய பணயக் கைதிகளும், இஸ்ரேலிய இராணுவ வீரர்களும் பத்திரமாக இஸ்ரேல் திரும்பினர். ஆபரேஷன் தண்டர்போல்ட் வெற்றிகரமாக முடிந்தது.
முந்தைய நாள் இரவு நடந்த விவகாரம் தெரியாமல் , மறு நாள் காலையில் இடி அமின் தன் தொலைபேசியில் இஸ்ரேலிய அரசைத் தொடர்பு கொண்டார். என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள். இன்றோடு உங்களுக்கு கொடுத்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. பணயக் கைதிகள் ஒவ்வொருவராக கொல்லப்பட போகிறார்கள். பின்னால் வருத்தப்படாதீர்கள் என்று தெரிவித்தார். பதிலுக்கு இஸ்ரேல் அரசாங்கம், முடிந்தால் தீவிரவாதிகள் பணயக் கைதிகளை தாராளமாக கொன்று கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தனர்.
ஒன்றும் புரியாத இடி அமின், பின்னர் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து ஆடிப்போய் விட்டார். இடி அமின் மட்டுமல்ல, வெற்றிகரமான இந்த மீட்பு முயற்சியைக் கேட்டறிந்த உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருமே மூக்கில் விரலை வைத்தனர்.
தீவிரவாதிகளுக்கு அவர்களுடைய பாஷையில்தான் பேசவேண்டும். இஸ்ரேல் என்ற சிறிய நாடுசதா பிரச்சனைகளுக்கு நடுவில் இருக்கிறது. ஒரு யுத்த பூமி. அதைச் சுற்றிலும் முஸ்லீம் நாடுகள்தான். 24 X 7 அதற்கு பிரச்சனைதான். ஆனால் அந்நாட்டுக்கு வரும் பிரச்சனைகளை, சவால்களை வெற்றிகரமாக கையாளுகிறது. காரணம் இஸ்ரேல் தன்னுடைய எதிரிகளையும், அவர்களின் செய்லபாடுகளையும் நன்கு தெரிந்துவைத்திருக்கிறது. உடனுக்குடன் பதிலடி கொடுக்கிறது.
ஆபரேஷன் தண்டர்போல்ட் எவ்வளவு சுவாரஸ்யமோ, அவ்வளவு சுவாரஸ்யம் அதற்கு பின் நடந்த சம்பவங்கள். உகாண்டா அரசாங்கம், இஸ்ரேல் அரசாங்கத்தின் மேல் தன்னுடைய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக . . பாதுகாப்பு சபையில் புகார் கொடுத்தது. இந்தப் புகாருக்கு, இஸ்ரேல் பிரமாதமான பதிலளித்தது. முடிந்தால் . பாதுகாப்பு சபையில் நடைபெற்ற வாத விவாதங்களையும் தமிழில் மொழிப் பெயர்த்து பதிவிடுகிறேன்.
மேற்சொன்ன விஷயங்கள் யாவும் 90 Minutes at Entebee என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்தச் சம்பவங்களை வைத்து ஹாலிவுட்டில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது The Delta Force. இவைகளைப் படித்துப்/ பாருங்கள். நம்மால் இப்போதைக்கு அவ்வளவு தான் செய்யமுடியும்.
படித்ததில் பிடித்த பதிவு பகிர்ந்து உள்ளேன்

 நன்றி இணையம்