மன குறை...................

மணக்கால் அய்யம்பேட்டை | 1:23 PM | Best Blogger Tips

மன்னிக்கத் தெரிந்த மனிதனின்
மனது கவலைகளை சுமப்பதில்லை.
தண்டிக்கத் துடிக்கும் மனிதனின்
மனது நிம்மதியை உணர்வதில்லை.
குறை கூறித் திரியும் மனிதனின்
மனது நிறைகளை காண்பதில்லை.
நிறை தேடி புகழும் மனிதனின்
மனது மகிழ்வினை மறப்பதில்லை.
மகிழ்வூட்ட நினைக்கும் மனிதனின்
மனது இன்பத்தை இழப்பதில்லை.
புறம் பேசி அலையும் மனிதனின்
மனது இருளினை களைவதில்லை.
துன்பத்தை பொறுத்த மனிதனின்
மனது துயரினில் மடிவதில்லை.
இன்பத்தை வேண்டும் மனிதனின்
மனது சந்தோஷத்தில் திளைப்பதில்லை.
சந்தேகம் நிறைந்த மனிதனின்
மனது சந்தோஷத்தை சுவைப்பதில்லை.
சஞ்சலம் அற்ற மனிதனின்
மனது சங்கடத்தை சந்திப்பதில்லை.
ஆசையை அடக்கும் மனிதனின்
மனது மோசம் போவதில்லை.
நேசம் கொண்ட மனிதனின்
மனது பாசத்தை துறப்பதில்லை.
உதவிட நாடும் மனிதனின்
மனது சிரிப்பினை தொலைத்ததில்லை.
கொடுத்திட நினைக்கும் மனிதனின்
மனது கெடுதியில் வீழ்வதில்லை.
துஷ்டத்தை நாடும் மனிதனின்
மனது கஷ்டத்தை களைவதில்லை.
ஆறுதல் சொல்லும் மனிதனின்
மனது அவதியில் அழுவதில்லை.
பெருமையை தவிர்த்த மனிதனின்
மனது சிறுமையில் வீழ்வதில்லை.
பொறுமையாய் இருக்கும் மனிதனின்
மனது வெறுமையை காண்பதில்லை.
மறுமையை நினைக்கும் மனிதனின்
மனது அமல்களை விடுவதில்லை.
சிந்திக்கத் தவறிய மனிதனின்
மனது அமைதியில் நிலைத்ததில்லை.
நல்லெண்ணம் கொண்ட மனிதனின்
மனது மரணித்து விடுவதில்லை.
இறையச்சம் உள்ள மனிதனின்
மனது பிற அச்சம் கொள்வதில்லை.
இதை உணர்ந்து கொண்ட மனிதனின்
மனது என்றும் அழிவதில்லை.

 நன்றி இணையம்