நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? ஈஸியா சரிசெய்யலாம்...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:31 PM | Best Blogger Tips

பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே நரை முடி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும். இவ்வாறு மெலனின் அளவு குறைந்தால், கூந்தலும் நரைக்க ஆரம்பிக்கும். பொதுவாக இத்தகைய நரைமுடியானது 30 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது.

இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. உடனே எந்த கடையில் கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாம். அவை அனைத்துமே வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடியவை தான். மேலும் இந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், முடிக்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, முடி நன்கு அடர்த்தியாக, நீளமாக மற்றும் ஆரோக்கியமாக வளரும். இப்போது நரைமுடியை தடுக்கக்கூடிய இயற்கை சிகிச்சை முறைகள் என்னவென்று கொடுத்துள்ளோம். குறிப்பாக இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவானவையே.

ஹென்னா ஹேர் பேக்

ஹென்னா மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்கை முடிக்கு போட்டால், நரைமுடி பிரச்சனையை நிச்சயம் தவிர்க்க முடியும். அதற்கு ஹென்னா பொடியில், 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் தடவி ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால் முடியின் நிறம் மாறுதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ப்ளாக் டீ

நரைமுடியைப் போக்குவதற்கு ப்ளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.

கறிவேப்பிலை

அனைவருக்குமே கறிவேப்பிலை நரைமுடியைப் போக்கவல்லது என்பது நன்கு தெரியும். இருப்பினும் சிலர் நம்பிக்கையின்றி, அதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். எனவே நரைமுடி போகவேண்டுமெனில், கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடியானது கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

முளைக்கீரை சாறு (Amaranth Juice)

கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு முளைக்கீரை சாற்றினை முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளர்வதோடு, கருமையோடும், பட்டுப் போன்றும், மென்மையாகவும் வளரும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் முடியை கருமையாக்குவதில் மிகவும் சிறந்த ஒரு பொருள். எனவே நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தலானது இழந்த கருமையை மீண்டும் பெறும்.

 

Via FB ஆரோக்கியமான வாழ்வு