முல்லா கதை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 AM | Best Blogger Tips

நம் தென்னாலி இராமன் கதைகள் போல் முல்லா நஸ்ருதின் கதைகள் மிகவும் பிரசித்தம். நகைச்சுவையான ஆனால் ஆழமான தத்துவங்களையும் விளக்கும் சுஃபி இஸ்லாமிய‌ கதைகள் அவை.
ஒரு முறை முல்லாவின் கிராமத்தை நோக்கி "திமுர்" என்கிற கொடுங்கோல்அரச‌ன் படையெடுத்து வருகிறான் என்ற செய்தி வந்தது.
இதை கேட்ட முல்லா, உடனே கூட்டத்தை கூட்டி தன் போதனையை அறிவித்தார், "நாம் எல்லோரும் சேர்ந்து, திமுரின் சாவிற்காக பிரார்த்தனை செய்வோம்" என்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் "நீங்கள் திமுரை பார்த்திருக்கிறீர்களா ?" என்று கேட்டார்.

"பார்த்ததில்லை, ஏன் உன்னை கூட இதற்கு முன் பார்த்ததில்லை" என்றார் முல்லா

அந்த மனிதர் சொன்னார், "உண்மைதான், நான் தான் அந்த திமுர்" என்று.

முல்லாவும் கிராமத்தவரும் திகைத்து போயினர். முல்லா கிராமத்தவரை பார்த்து அமைதியாக தன் போதனையை தொடர்ந்தார் "நாம் நம் கூட்டுப் பிரார்த்தனையை தொடர்வோம், இம்முறை நம் ஜணசாவுக்காக (மரண பிரார்த்தனை) என்றார்.

"மூடனே, உன் ஜணசாவிற்கு நீ எப்படி பிரார்த்திப்பாய் ? இறந்தவர்களுக்கு, உயிரோடு இருப்பவர்தானே பிரார்த்திக்க வேண்டும் " என்று கேட்டான் திமுர்.

முல்லா சொன்னார். "ஐயா, நாங்கள் எல்லோரும் இறப்பது உறுதியாகிவிட்டது. ஆகையால் எங்களுக்காக பிரார்த்திக்க யாரும் இருக்க போவதில்லை, ஆகையால் எங்களுக்கு நாங்களே பிரார்த்தித்து கொள்கிறோம்" என்றார்.

திமுர் இதை கேட்டு மனம் விட்டு சிரித்து, அவர் நகைச்சுவை உணர்வை பாராட்டி, ஒரு யானையை பரிசளித்தான்.

கூடிய விரைவில், வளர்ந்த அந்த யானை தங்கள் விவசாய நிலங்களை நாசம் செய்ய தொடங்கியதை அறிந்த கிராமத்து மக்கள், முல்லாவிடம் வந்து முறையிட்டார்கள். இந்த யானை திமுர் பரிசாக கொடுத்தது, இதை ஒன்றும் செய்யவும் முடியாது, ஆகையால் நீங்கள் அவரிடமே இதை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று மன்றாடினர்.

தயக்கத்துடன், முல்லா திமுரிடம் செல்வதற்கு ஒப்புக்கொண்டார், ஆனால் ஒரு விதியோடு. அனைவரும் அவரோடு கூட வரவேண்டும் என்று. அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

முல்லா திமுர் தங்கியிருந்த கூடாரத்திற்கு சென்றார். உள்ளே நுழைந்த முல்லாவை என்ன வேண்டும் என்று கேட்டான் திமுர். முல்லா சொன்னார், "உங்கள் யானையை குறித்து......:

"என்னவாயிற்று" என்றான் திமுர் கோபத்துடன். "என்ன குறை என் பரிசில் கண்டீர்" என்றான். முல்லா திரும்பி பார்த்தார், கிராமத்து மக்கள் ஒருவர் கூட இல்லை. தன்னை ஏமாற்றி இக்கட்டான நிலையில் விட்டுவிட்டது புரிந்தது.

சுதாரித்துக் கொண்டு, முல்லா சொன்னார், "ஐயா நீங்கள் அருமையான ஆண் யானையை கொடுத்தீர்கள், அது ஜோடியில்லாமல் இருக்கிறது. அதற்கு ஒரு ஜோடியும் தந்தருளுங்கள்".
 
Via FB Enlightened Master