கர்மயோகம் கடமை என்பது என்ன ! பாகம் 1 ----சுவாமி விவேகானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:03 PM | Best Blogger Tips

கர்மயோகத்தைப்பற்றி ஆராயும்போது கடமை என்றால் என்ன என்பதுபற்றி அறிய வேண்டியது அவசியமாகும். நான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் அது என் கடமை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், அப்போது அதை என்னால் செய்ய முடியும். கடமை என்ற கருத்து பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உள்ளது. தன் நூலாகிய குரானில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதுதான் என் டமை என்று முகமதியன் கூறுகிறான். வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதுதான் தன் கடமை என்று சொல்கிறான் இந்து. கிறிஸ்தவனோ பைபிளில் கூறப்பட்டது தான் தன் கடமை என்கிறான், எனவே பல்வேறு வாழ்க்கை நிலைகளுக்கும், பல்வேறு வரலாற்று காலகட்டங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்ப கடமை என்ற கருத்தும் பல்வேறு விதமாக மாறுபடுவதை நாம் காண்கிறோம். உலகம் தழுவியதான் சில நுண் கருத்துக்களை விளக்குகின்ற மற்ற சொற்களைப் போலவே கடமை என்னும் சொல்லின் பொருளையும் முழுமையாக விளக்க முடியாது. அதன் செயல்பாட்டு முறைகளையும் விளைவுகளையும் வைத்து ஓரளவுக்கு அதைப் புரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான்.

சில குறிப்பிட்ட காரியங்கள் நம் முன் நிகழும்போது, இயல்பாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ ஒரு குறிப்பிட்ட வகையில் நடந்துகொள்ளும் உள்ளுந்தல் நம்மிடம் தோன்றுகிறது. இத்தகைய உள்ளுந்தல் எழுந்ததும் மனம் அந்தச் சூழ்நிலையைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறது. அந்தச் சூழ்நிலையில் இன்ன வகையில் நடந்துகொள்வது நல்லது என்று சிலவேளைகளில் நினைக்கிறது. வேறு சிலவேளைகளிலோ, அதே சூழ்நிலையில் அப்படி நடப்பது தவறு என்று நினைக்கிறது. எல்லா இடங்களிலும் கடமையைப் பற்றிய பொதுவான கருத்து என்னவென்றால் நல்லவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள். என்பதே.

ஒரு செயலைக் கடமையாக்குவது எது? ஒரு கிறிஸ்தவன் தனக்கு முன் சிறிது மாட்டிறைச்சியைக் காண்கிறான்; ஒன்று அவன் அதைச் சாப்பிட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது இன்னொருவனுக்குக் கொடுத்து, அவன் உயிரைக் காக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை என்றால் கடமையிலிருந்து தான் தவறியாதகவே கட்டாயமாக அவன் எண்ணுவான். ஆனால் ஓர் இந்து அதைச் சாப்பிடத் துணிந்தாலோ அவனும் தன் கடமையிலிருந்து வழுவிவிட்டதாகவே நினைப்பான். பயிற்சியும் படிப்பும் ஓர் இந்துவை அப்படி நினைக்கச் செய்கின்றன. கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் தக் எனப்படும் பயங்கரமான ஒரு கொள்ளைக் கூட்டத்தினர் இருந்தனர். யாரை வேண்டுமானாலும் கொல்வதும், அவர்களுடைய பொருட்களைக் கொள்கையடிப்பதும் தங்கள் கடமை என்று அவர்கள் எண்ணினர். எவ்வளவு அதிகம் பேரைக் கொல்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் தங்களைச் சிறந்தவர்களாகக் கருதினார்கள். சாதாரணமாக ஒருவன் தெருவில் சென்று மற்றொருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டால், தான் தவறு செய்துவிட்டதற்காக அவன் வருந்த வேண்டும், அது தான் சரி, அதே மனிதன் போர்வீரனாகப் படையில் சேர்ந்து ஒருவனை அல்ல, இருபது பேரைக் கொன்றாலும் தன் கடமையைச் சிறப்பாகச் செய்ததாகவே நிச்சயமாக மகிழ்வான். எனவே செயலைக் கொண்டு கடமை வரையறுக்கப் படுவதில்லை.

அதனால் கடமை என்பதற்குப் புறச்சார்பான விளக்கம் தருவது என்பது இயலாத ஒன்று. ஆனால் அகச்சார்பான விளக்கம் இருக்கிறது. எந்தச் செயல் நம்மைக் கடவுளை நோக்கிச் செலுத்துகின்றதோ அது நற்செயல், நமது கடமை. எது நம்மைக் கீழ் நிலைக்கு இழுத்துச் செல்கிறதோ அது தீயது. நமது கடமை அல்ல. அகச்சார்பான இந்தக் கோணத்தில் நாம் பார்த்தால் சில செயல்களில் நம்மை உயர்த்தவும் உன்னதமாக்குவதற்குமான போக்கு இருப்பதையும், மற்றும் சிலவற்றில் நம்மைச் சீரழித்து தீயவர்கள் ஆக்குகின்ற போக்கு இப்பதையும் காணலாம். பல்வேறு நிலைகளிலும் சூழ்நிலைகளிலும் செயல்படுபவர்களான மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் இன்ன செயல் இன்ன போக்குக் கொண்டதாக இருக்கும் என்று ஆணித்தரமாக ஒருபோதும் வரையறுக்க முடியாது. ஆனால் எல்லா காலங்களிலும் எல்லா நெறியினருக்கும் எல்லா நாட்டினருக்குமான கடமையென்று மனிதகுலம் முழுவதுமே ஒருமனதாக ஏற்றுக்கொண்ட கருத்து ஒன்று உள்ளது ஒரு சம்ஸ்கிருத சுலோகம். அதை இப்படிச் சுருக்கமாகக் கூறுகிறது. எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது. எந்த உயிருக்கும் துன்பம் தராமல் இருப்பது புண்ணியம் எதையும் துன்புறுத்துவதுபாவம்.

பிறப்பையும் வாழ்க்கை நிலையையும் அடிப்படையாகக் கொண்ட கடமைகளைப்பற்றி பகவத்கீதை பல இடங்களில் கூறுகிறது. பிறப்பும் வாழ்க்கையும் மற்றும் சமுதாயத்தில் ஒருவன் பெறுகின்ற இடமுமே அவனது வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் மீது அவன் கொள்கின்ற மனநிலையையும் தார்மீக நிலையையும் பெருமளவிற்கு நிர்ணயிக்கின்றன. எனவே நாம் எந்தச் சமூகத்தில் பிறந்துள்ளோமோ, அந்தச் சமுதாயத்தின் லட்சியங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப நம்மை உயர்த்தவும் உன்னதப்படுத்தவும் உதவுகின்ற செயலே நமது கடமை ஆகிறது.

ஆனால் லட்சியங்களும் பழக்க வழக்கங்களும் எல்லா சமூகங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒரே போல் இருப்பதில்லை என்பதை நாம் கட்டாயம் நினைவில்கொள்ள வேண்டும். இதனை அறியாதது தான் நாடுகளுக்கு இடையேயுள்ள வெறுப்புணர்ச்சிக்கு முக்கியக் காரணம். தன் நாட்டின் நடைமுறையை ஒட்டிதான் என்ன செய்தாலும் அவையே செய்த்தக்கவற்றுள் சிறந்தவை. அதைக் கடைப்பிடிக்காதவர்கள் தீயவர்கள் என்று அமெரிக்கன் கருதுகிறான். இந்துவோ தன் பழக்க வழக்கங்கள் மட்டுமே சரியானவை, உலகத்திலேயே உயர்ந்தவை. அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொடியவர்கள் என்று நினைக்கிறான். இது நாம் எல்லோருமே செய்யக்கூடிய சர்வ சாதாரணமான தவறு. இது தீங்கு விளைவிப்பது. உலகத்தில் தரும சிந்தனைக் குறைவிற்கு அரைவாசி இதுதான் காரணம்.

நான் இந்த நாட்டிற்கு வந்து சிகாகோ பொருட்காட்சி சாலையைச் சுற்றிப் பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து ஒருவன் என் தலைப்பாகையைப் பிடித்து இழுத்தான். நான் திரும்பிப் பார்த்தேன். அவன் நன்றாக உடை உடுத்தி, நல்ல மனிதன் போலவே இருந்தான். அவனிடம் பேசத் தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று கண்டபோது அவன் குறுகிப் போனான் மற்றொருமுறை அதே பொருட்காட்சிச் சாலையில் வேறொருவன் என்னைப் பிடித்துத் தள்ளினான். ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று நான் கேட்டேன். நான் கேட்டவுடனே அவனும் வெட்கிப்போய் சற்று தடுமாற்றத்துடன், ஏன் நீ இப்படி விசித்தரமாக உடை உடுத்தி இருக்கிறாய்? என்று மன்னிப்புக் கேட்கும் தொனியில் கேட்டான். இவர்களின் கனிவெல்லாம் சொந்த மொழி, சொந்த உடை என்ற எல்லைக்குள் நின்றுவிடுகின்றன. வல்லரசுகள் சாதாரண நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இத்தகைய எண்ணமே முக்கியக் காரணம். இந்த எண்ணம் அவர்களிடம் மனிதாபிமானத்தையே வற்றச் செய்துவிடுகிறது. தன்னைப்போல் நான் ஏன் உடை உடுத்தவில்லை என்று கேட்டுவிட்டு, என் உடை காரணமாக என்னைக் கேவலப்படுத்த முயன்றானே ஒருவன் அவன் ஒரு நல்ல மனிதனாக, நல்ல தந்தையாக, நல்ல குடிமகனாக இருக்கலாம். ஆனால் மாறுபட்ட உடையில் ஒருவனைக் கண்டதும் அவனது இயல்பிலுள்ள கனிவு மறைந்து விடுகிறது.

தொடரும் .....


நன்றி தினமலர் ....



Via மக்கள் சேவையே மகேசன் சேவை