சபரிமலை ஸ்ரீஐயப்பன் உன்மையான வரலாறு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:03 | Best Blogger Tips





அவசியம் படிக்கவும்...

 

சபரிமலை ஸ்ரீஐயப்பன் உன்மையானவரலாறு

 

இங்கே உங்களுக்காக சபரிமலை, மாளிகைபுரத்தம்மன், வாவர்சுவாமி பற்றிய கட்டுகதைகள்    விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றை உங்களுக்காக கீழே பதிவிடுகிறேன். இதற்காக நேரம் ஒதுக்கி இதை படித்து தெளிவுபெறுவீராக.

 

சபரிமலை கோவிலின் புராணம்

 

மஹாவிஷ்ணு மோகினியாக உருக்கொண்டு அவதாரம் எடுத்து, சிவ விஷ்ணு சக்திகள் சங்கமமாக  கர்ப்பவாசம் புரியாமல் சங்கல்ப மாத்திரத்தில் அவதரித்தவர் மஹாசாஸ்தா.     இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்  சிவவிஷ்ணு சங்கமம் என்பது சக்திகளின் சேர்க்கையே. உடல் சேர்க்கை அல்ல.


 

சாஸ்தாவின் ஆவிர்பாவம் ஆனதும்  கைலையங்கிரியில் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கி, பூரணை புஷ்கலை எனும் இரு தேவியரை மணந்து அவ்வுலகிலிருந்து அருளாட்சி நடத்தலானார்.

 

மஹிஷி எனும் அரக்கியை அழிக்கும் பொருட்டு, மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்து, ஆகாய கங்கைவழியாக பம்பையாற்றங்கரையில் ஒரு குழந்தையாகத் தோன்றினார். பரமசிவன் கொடுத்த நவரத்தின மணிமாலையைக் கழுத்தில் அணிந்திருந்த காரணத்தால்  மணிகண்டன் என்று அழைக்கப்பட்டார் எல்லோரும் கருதுவது போல் கோவில் மணியல்ல சமஸ்க்ருதத்தில் அதற்கு கண்டா என்று பெயர். மணி என்றால் நவரத்தின மணி என்றே பொருள்

கழுத்தில் நவரத்தினமணிகள் ஜொலித்த காரணத்தால் மணிகண்டன் என்று பெயரிட்டு ராஜசேகர பாண்டியன் வளர்த்து

வந்தார்.             

 

அவதார நோக்கத்துக்காக பால பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த மணிகண்டன் மஹிஷியை சம்ஹாரம் செய்து, கலியுக வரதனாக கோவில் கொள்ளத் தீர்மானித்தான். சாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனை மஹா யோகபீடமாக விளங்கும் ஸ்தலமான சபரிபர்வதத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்.

 

உலக நன்மைக்காக யோகத்திலேயே ஆழ்ந்து தவக்கோலம் பூண்ட மணிகண்டன் வருடத்தில் ஒருநாள் மகரசங்கராந்தி     அன்று கண்விழித்து பக்தர்களை அனுக்ரகிப்பேன் என்று வாக்களித்தார்.

 

பாண்டியர்களின் குருவான அகத்திய மாமுனிவரே சபரிமலைக்கான விரத வழிமுறைகளைக் கொடுத்தவர்.             ஒரு மண்டல பிரம்மச்சர்யாதி விரதங்களை மேற்கொள்ளுவோரே சபரிமலை செல்லத் தகுதிஉடையவர் என்று வகுத்தளித்தார்.

 

சபரிமலைக் கோவிலின் ஸ்தலபுராணம் இதுவே. பிரமாண்ட புராணத்தின் பூதநாதஉபாக்யானம் என்ற கேரளகல்பப் பகுதியில் நமக்குக் கிட்டும் புராணசரிதம்.

 

புராணகாலம் தொட்டே சபரிமலை ஆலயம் உண்டென்றாலும்  வருடம் ஒருநாள் மட்டுமே வழிபாடு என்பதால் வந்து செல்லும் பக்தர்கூட்டம் மிகக்குறைவு. விரத அனுஷ்டானங்கள் பெண்களுக்கு நடைமுறைப்படுத்த முடியாத காரணங்களால் ஆண்கள் மட்டுமே சபரிமலை சென்றார்கள்.

 

வரலாற்று நாயகன் ஐயப்பன்:

 

புராணசரிதம் கடந்து பல நூற்றாண்டுகள் தாண்டி, பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சம் கேரளத்தில் புலம் பெயர்ந்து, பூஞ்சார், பந்தளம் எனக் கிளைகளாகப் பிரிந்தது. சபரிமலைக் கோவிலை பந்தள வம்சம் பராமரித்து வந்தது. அப்போதைய சபரிமலைப் பகுதி காட்டில் எல்லையாக விளங்கிய காரணத்தால், வணிகர்களின் நடமாட்டம் மிகுந்தது. வணிகர்கள் மிகுந்ததால் ஒரு காலகட்டத்தில் அப்பகுதி கொள்ளையர் வசமானது.

 

கொள்ளையர் தலைவன் உதயணன் என்பவன் சபரிமலை ஆலயத்தைத் தீக்கிரையாக்கி அழித்தான். பாண்டிய வம்சமான பந்தளராஜ குடும்பத்தில், ராஜகுமாரிக்கு தெய்வாம்சத்துடன் ஆர்ய கேரளவர்மன் என்றஓர் மகன்பிறந்து, சபரிமலைக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்து மீண்டும் அங்கே சாஸ்தாவின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்கிறான்.         

 

ஆர்ய கேரளவர்மன் என்ற அந்த ராஜகுமாரனின் செல்லப்பெயரும் ஐயப்பன்தான் சபரிமலையின் தேவதையான மணிகண்ட சாஸ்தாவின் பெயரே கேரள வர்மனுக்கும் இருந்ததால் பின்னாளில் சில குழப்பங்கள் உண்டாயின.

 

இஸ்லாமியரான வாவர் என்ற கதாபாத்திரம் கதைக்குள் நுழைந்தது இந்தக் காலகட்டத்தில்தான். அது புராணக்கதை அல்ல.

 

யாத்திரையின் நடைமுறை:

 

இது இப்படி இருக்க, கேரள மக்கள் சபரிமலை தர்மசாஸ்தாவை தங்கள் ரட்சக தேவதையாக ஆராதித்து சபரிமலை யாத்திரை செல்வது தொடர்ந்தது. ஆண்கள் மட்டுமே யாத்திரை மேற்கொண்டார்கள். சபரிமலை யாத்திரைக் கிராமங்களில் பண்டைய கால நடைமுறை இருமுடி கட்டி அவரவர் வீட்டிலிருந்தே நடந்தே செல்வது. பகவான் மணிகண்டன் கட்டிக்கொண்டு போன இருமுடி போல, யோகத்தில் இருக்கும் பகவானுக்காக காராம்பசுவின் நெய்யை இருமுடியில் அடைத்து அவனுக்காக ஆத்ம சமர்ப்பணமாகக் கொண்டுசென்றார்கள்

 

நடைபாதையாக வரும் பக்தர்கள் சென்றடையும் முதல் கேந்திரம் எருமேலி. பண்டைய கால நடைமுறை பற்றிக் கேட்டால் வியப்பு உண்டாகிறது. காளார்க்காடு அப்பு ஐயர் என்றபக்தர் 1850களில் சபரிமலை வெளிச்சப்பாடு ஸ்தானம் வகித்து வந்தார்.                 அவரே எருமேலிவரும் பக்தர்களின் விரதத்தை அங்கீகரித்து பெரியபாதைக்குள் செல்ல அனுமதிப்பார். அனுமதி இல்லாதோர் மீண்டும் வீடுதிரும்ப வேண்டும். இதுவே அப்போதைய நடைமுறை.

 

பகவான் மணிகண்டன் பயணப்பட்ட வழியே பெரிய பாதை எனப்படும் பாரம்பரியப் பாதை. இதனையே பகவானின் பூங்காவனம் என்பார்கள். எருமேலி துவங்கி கரிமலை கடந்து சன்னிதானம் அடையும் கிட்டத்தட்ட 41 மைல் கொண்டபாதை. பண்டைய காலத்தில் சபரிமலைப் பயணம் என்பது எருமேலியில் வணங்கி, பெரியபாதை வழியே வந்து, பதினெட்டாம் படி ஏறி சாஸ்தாவை வணங்கி, மீண்டும் பெரியபாதை வழியே நடந்து திரும்புவது. அல்லது பெரியபாதை வழியே வந்து, புல்மேட்டுப் பாதை வழியே எறி, வண்டிப்பெரியர் குமுளி வழி திரும்புவது. சபரிமலை யாத்திரை என்பது பெரிய பாதையில் மட்டும் 7-8 நாட்கள் இருக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும் ஐயப்பன்மார்கள் வீடு திரும்ப குறைந்தது 15-20 நாட்கள் ஆகும்.

 

இந்தியாசுதந்திரம் அடையும்முன்பு ஒன்றிணைந்த தமிழக-கேரளத்தில், கேரள மக்களும், நெல்லை, குமரி பகுதி மக்களும், கோவை பாலக்காட்டு மக்களும் சபரிமலை யாத்திரையை சகஜமாக மேற்கொண்டவர்களே. 1920-30களிலேயே சபரிமலை யாத்திரை மேற்கொண்டவர்கள்   அரிவாளுடன் பாதையை செப்பனிட்டுக்கொண்டு சென்ற சபரிமலைப் பயணம்  என்பதுபுதிய ஒன்றாகவே இருந்தது.

 

ஸ்வாமி ஐயப்பன் நாடகம்

 

முதன்முதலில் தமிழகத்தில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் ஸ்வாமி ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடகம் மக்கள்மனதை ஈர்த்து தமிழகம் எங்கும் மக்கள் சபரிமலையை நாட ஆரம்பித்தார்கள். நாடகம் போட்ட நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, தான்கேட்ட கதைகள் பலதையும் திரைக்கதையில் இணைத்து விட்டார். அதன் நம்பகத்தன்மையை முழுமையாக அவர் ஆராயவில்லை. முடிவாக : புராண காலத்து ஐயப்பனும் வரலாற்று ஐயப்பனும் குழப்பப்பட்டு விட்டார்கள். நாடகத்தில் இடைவேளைக் காட்சியில் மேடையில் கடல், கடலில்கப்பல், கப்பலில் வாவர்என ஜனங்கள் வாய்பிளந்து பார்த்தார்கள். அதுவே மனதில் நின்றுவிட்டது. இன்றுஏதோ வாவர் பள்ளிக்குப் போனால்தான் சபரிமலைக்குப் போன பலன்கிடைக்கும் என்று நம்பும் அளவுக்கு அது வளர்ந்து விட்டது. பின்னாளில் வந்த புத்தகங்களும் இதே கதைகளையே சொல்ல ஆரம்பித்துவிட்டன.

 

இதுபோன்றே அடுத்த குழப்பம்  மாளிகைப்புறத்தம்மன் ஐயப்பனை திருமணம் செய்யக் காத்திருப்பதாகக் கூறப்படும் வரலாறு. இதெல்லாம் நாடகத்தில் சுவைக்காகச் சேர்க்கப்பட்ட சம்பவங்கள். புராண ஆதாரம் ஏதும் கிடையாது. மாளிகைப்புறத்தம்மனுக்கு உருவம்கிடையாது. பல கேரளஆலய பகவதி ஸங்கல்பம் போலவே கண்ணாடி பிம்பமாகவே இன்றும் பூஜிக்கப்படுகிறாள். மேலே கவசமே சார்த்தப்படுகிறது. அவள் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ஸ்வரூபமாகவே பூஜிக்கப்படுகிறாள். பாண்டிய குல தேவதையான மீனாக்ஷி ஸங்கல்பம் என்பதே பந்தள அரண்மனையின் நம்பிக்கை. அவள் ஐயப்பனுக்கு தாய் ஸ்தானமே அல்லாது, இணையாக புராணத்தில் எங்குமே சொல்லப்படவில்லை. மகரவிளக்கு உற்சவத்தில் யானை மீது சரங்குத்திக்கு பவனிவருவது மாளிகைப்புறத்து அம்மன் என்றேபலரும் கருதுகிறார்கள். உண்மையில் பவனி வருவது ஐயப்பனே அந்த பிம்பத்தில் தெள்ளத் தெளிவாக மீசை உள்ளதைக் காணலாம்.

 

சபரிமலையும் திருவிதாங்கூர் அரசும்

 

1780களில் தர்மராஜா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்தில் திப்புவின் கேரள ஆக்ரமிப்பு துவங்கியபோது, போர்ச் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தளஅரசு, தனது மொத்த சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசரிடம் அடைமானம் வைத்தது. அடைமானத்தை மீட்க முடியாத நிலை உருவாகி, சபரிமலைக் கோவில் உட்பட மொத்தமும் திருவிதாங்கூர் அரசர் வசமானது. சபரிமலை ஆலயம் திருவிதாங்கூர் ஆளுகைக்குச் சென்றது இப்படித்தான்.

 

வழக்கமாக ஆலயத்தைக் கையகப்படுத்தும்போது அதன் நகைகளையும் எடுத்துக்கொள்ளும் அரசு, சபரிமலை விஷயத்தில் திருவாபரணத்தை பந்தள அரசரிடமே இருக்கும்படியும், அவரே மகரசங்கராந்திக்கு கொண்டு வரும் சம்பிரதாயத்தைத் தொடரும்படியும் சொல்லியது.

 

 சபரிமலையில் புனர் பிரதிஷ்டை

 

சபரிமலையில் பகவானின் யோகாக்னி காரணமாக ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்திக்கும் என்பது பெரியோர் நம்பிக்கை. அதேபோல ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்தித்துள்ளது. பல முறை விக்ரஹமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்ரஹம், பஞ்சலோகம் எனப் பலமுறை மாற்றப்பட்டது. 1800களில் பல வருடங்கள் தாருசிலை என்று சொல்லப்படும் மரவிக்ரஹம் கூட இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான், மர விக்ரஹத்தில் நெய் அபிஷேகம் நேரடியாகச் செய்ய முடியாமல் இருமுடி நெய்யை நெய்த்தோணியில் கொட்டிவிடும் பழக்கம் உண்டானது. அன்று பெரும்பாலும் வந்தவர்கள் கேரளத்தவர்களே. இன்றும் அந்தக் குறிப்பிட்ட சில ஊர்க்காரர்கள், இருமுடி நெய்யைக் கருவறையில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. நெய்த்தோணியிலேயே நெய்யைக் கொட்டி அதிலிருந்து சிறிதளவு பிரசாதம் எடுத்துச் செல்கிறார்கள்.

 

சபரிமலையின் புகழ் நாளுக்கு நாள் அதிகமானது அங்கிருந்த சில ஆசாமிகளுக்குப் பொறுக்கவில்லை. கோவிலின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சி அப்போதே நடந்தது. 1950ல் சதியின் காரணமாக சபரிமலையில் பெரு நெருப்பு உண்டாக்கப்பட்டு திருக்கோவில் சாம்பலானது. ஐயப்பனின் விக்ரஹமும் மூன்றாக உடைந்து சேதமடைந்தது. ஆனால் ஐயனின் திருவுள்ளம் வேறுவகையில் இருந்தது. எந்தக் காரணத்துக்காக இந்தச் சதிச்செயல் அரங்கேறியதோ அதற்கு நேர்எதிராக, மிகச்சிலர் மட்டுமே அறிந்திருந்த சபரிமலைக் கோவில் பார்முழுவதும் அறிய இந்தநெருப்பு காரணமாகி விட்டது. இதன் பின்னர் சில மாதங்கள் பின்னப்பட்ட விக்ரஹமே பூஜையை ஏற்றது.

 

இன்றைய ஐயப்ப பிரதிஷ்டை

 

1950பின் ஐயனின் புதிய விக்ரஹம் உருவானது

பின்னம் அடைந்த பழைய ஐயப்ப விக்ரஹம் மணியாக்கப்பட்டு சந்நிதிக்கு எதிரே கட்டிவைக்கப்பட்டது. மணிரூபத்தில் காட்சி தரும் மணிகண்டசுவாமி ஒலி ரூபமாகவும் அதாவது சப்தமாகவும் இருந்து அருள்பாலிக்கிறார். இதன் பிறகுதான் சபரிமலையின் ஒலி, உலகெங்கும் இன்னும் பிரவாகமெடுத்துப் பரவியது.

 

சின்னப்பாதை

 

இந்த சம்பவங்களுக்குப் பிறகு கொஞ்ச கொஞ்சமாக சபரிமலைக்கு பக்தர் கூட்டம் வரத்துவங்கியது. 1960களில் திரு விவி.கிரி கேரள மாநில கவர்னராகப் பணியாற்றினார். கவர்னருக்கு சபரிமலை செல்லும் ஆசை உண்டானது. ஆனால் பெரிய பாதையில் செல்ல அவரால் முடியாது. கவர்னர் விவி.கிரிக்காக சாலக்காயம் பாதை உருவானது. அதிலிருந்துதான் சின்னப்பாதை என்று சொல்லப்படும் பம்பை பாதை பிரபலமானது. இன்று நாம்காணும் பம்பாகணபதி ஆலயம், ராமர்சன்னிதி போன்றவையெல்லாம் இதன்பின்னர் உருவானதே. பழமலைக்காரர்களைப் பொருத்தவரை பகவான் குழந்தையாக வந்திறங்கிய பம்பை என்பது பெரியானவட்டம் பகுதியில் ஓடும் பம்பைக்கரையே.

 

சபரிமலை ஆலயம் தனித்தன்மை கொண்டபகவான் சாஸ்தா மனிதனாக பூமியில் தோன்றி, நமக்காக தவக்கோலம் பூண்டு நைஷ்டீக பிரம்மச்சரியத்தில் தனியோகம் புரியும் மஹா யோகபீடம். இன்னும் அங்கே மணிகண்டன் ஜீவனோடுதான் இருக்கிறான். அதனாலேயே எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு விரத நியமம் இல்லை; எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி பதினெட்டுப் படியும் அதற்கான பூஜையும் இல்லை; எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஆத்மசமர்ப்பண தத்துவமான இருமுடியும் நெய் அபிஷேகமும் இல்லை.

 

குருநாதனின் துணையோடு சபரிமலை பயணம் தொடரும்.....

 

ஸ்வாமியே சரணம் ஐயப்பா.



நன்றி இணையம்