(1)நான் யார்?
(2)இப்பிறவியின் நோக்கம் என்ன?
(3)நான் இவ்வுடலை ஏன் எடுத்தேன்?
(4)இவ்வுடல் என்றால் என்ன?
(5)உயிர் என்றால் என்ன?
என்று பல கேள்விகள்
எவர் ஒருவர் தனது பிறப்பின்
நோக்கம் அறிந்தவரே அவரே
வாழ தகுதியுடையவராகிறார்
அவர்களால் மட்டுமே மீண்டும் பிறவாமை என்ற நிலையை அடைய முடியும்......
எவ்வாறு இந்நிலையை அடையமுடியும்
என்றால் அதற்கு
ஒரு குரு இருந்தால் மட்டுமே
முடியும்....
அக்குருவை நான் எவ்வாறு அடையமுடியும் என்றால்??????????
குருவின் அவசியம்
-----------------------------------
குருவுக்கு மரியாதை செய்வோம்!
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே
உரை உணர்வு அற்றதோர் கோவே.
ஒரு வருடம் தவமிருப்பார்
திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம்
முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி
மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச்
செய்தார்கள் திருமூல நாயனார்.
குருவின் அவசியம் பற்றி நாயனார்
வழி நின்று மேலே உள்ள் பாடலைச் சிந்திப்போம்.
கடவுள் , மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும்
பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற
வேண்டும்.குருமார்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள் என்றே கொள்ள வேண்டும்.
சிவபெருமானின் ஆணையை ஏற்று யிவ்வுலகிற்கு நலம் செய்வதற்காகவே பிறப்பெடுக்கும்
புண்ணிய மூர்த்திகளே குருமார்கள். பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது
போல, நம்மைப் போலவே மானிட வடிவம்
தாங்கிக் கடவுளே நம்மை உய்விக்கக் குருவடிவில் வருவதாகக் கொள்ள வேண்டும்.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிவாசகப் பெருமான் போன்றவர்களில்லை என்றால் உலகில்
அன்பு நெறி காணப்படுமா?
கட்டையில் நெருப்புள்ளது. அந்த
நெருப்பினை (ஒளியை) வெளியே கொண்டுவர, வேறு ஒரு கட்டை வேண்டும். வேறு ஒரு கட்டையுடன்
சேர்த்து உரசும் பொழுது, கட்டையினுள்ளிருக்கும் நெருப்பு (ஒளி) வெளியே
வருகிறது. அதைப்போல நம் உள்ளேயிருக்கும் ஆன்ம ஒளியை, வேறு மனித வடிவம் தாங்கி வரும் குருவால்தான்
வெளியே கொண்டுவர முடியும்.
பசுவிடம் பால் பெறுவதற்கு
கன்றுக்குட்டி அவசியமாதல் போல, சிவ பெருமானது திருவருளைப் பெறுவதற்குக் குருவருள்
அவசியமாகும்.
சூரிய காந்தக் கல்லின் மீது
சூரிய ஒளி பட்டவுடன் நெருப்பு எழுவது போல, குருவின் அருட்பார்வை நம்மீது பட்டவுடன் மெய்ஞானம்
தோன்றும். குருவினால் இப்பிறவியில் பெறும் ஞானம் (அறிவு) எடுக்கின்ற பிறவிகள்
தோறும் தொடர்ந்து வருவதாகும்.
குருட்டினை நீக்கும் குருவினைக்
கொள்க
"கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக" என்றும்
திருமூல நாயனார் அறிவுறுத்துகின்றார். போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்பதேயிதன்
உட்பொருள். பிறகு குருடும் குருடும் கூடிவிளையாடி குழியில் விழுந்தாற்
போலாகிவிடும்.
குருட்டினை நீக்கும் குருவினைக்
கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடுங் குருடுங் குருட்டாட்டம்
ஆடிக் குருடுங் குருடும் குழிவிழுமாறே
(குருட்டினை
நீக்குதல்=அறியாமையை நீக்குதல்; குருடு=அறிவிலி; குழிவிழுதல்=துன்பத்திற்குள்ளாதல்)
அறியாமையைப் போகும்
நல்லாசிரியரையே தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் தெளிவு பெற்றவராகயிருத்தல் வேண்டும்.
குரு என்பவர் வாழ்ந்து காட்டுபவர் ஆவார். அவர் வாழும் வாழ்க்கையே பாடமாக அமையும்.
குரு உலகத்தின் மீது பற்றற்றும், சிவத்தின் மீது மாறாத அன்பும் உடையவராகத்
திகழ்வார். அவரால் உலகம் பல நன்மைகளை அடையும். அத்தகைய குருவின் திருமேனியைக்
கண்டாலே புண்ணியம் என்கிறார் திருமூலர்.
தெளிவு குருவின் திருமேனி
காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தைக்
கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
மாதா, பிதாவால் நம் ஜனனம் நிகழ்கிறது. இந்த பிறப்பை
அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே! குருவருளால் தான் திருவருள் – இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, “அ’வில்
துவங்கி, உயர்கல்வி வரை கற்றுத் தந்து
அவர்களை சீர்திருத்தும் சிற்பிகள் ஆசிரியர்களே! ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு எந்த
ஒரு மாணவன் தன்னை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் நிம்மதியாக இருப்பான்.
பகவான் கிருஷ்ணரும், குசேலரும் பள்ளிக்கூட நண்பர்கள். அக்காலத்தில்
குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள், அங்கேயே தங்கிப் படிக்க வேண்டும்; பள்ளி நேரம் தவிர, மற்ற சமயங்களில் குரு இடும் கட்டளைகளைச் செய்ய
வேண்டும். ஒருநாள், இவர்களது குரு சாந்தீபனி முனிவரின் மனைவி, கிருஷ்ணரையும், குசேலரையும் சமைப்பதற்கு விறகு பொறுக்கி
வரச்சொல்லி விட்டாள்.
குருவின் மனைவியின் கட்டளையை
ஏற்ற அந்தக் குழந்தைகள், காட்டில் சென்று விறகு பொறுக்கினர். மழை
வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க, ஒரு மரப்பொந்தில் அதை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது.
குழந்தைகளைக் காணாத குரு, மனைவியைக் கடிந்து கொண்டு குழந்தைகளைத்
தேடிச்சென்றார்.
குரு பத்தினியின் கட்டளையை
நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர்
வடித்தார். “நீங்கள்
மிக நன்றாக இருப்பீர்கள்… என ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் பலித்தது.
துவாரகையின் மன்னரானார் கிருஷ்ணர்; ஏழையான குசேலர், தன் நண்பனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.
குருவின் சொல்லை இளமையில்
கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.
நம்மில் குரு அருள் நிரம்புவதை
எப்படி கண்டறிந்து கொள்வது?
நினைத்த மாத்திரம் நம்மில்
பொங்கும் பிரபஞ்ச ஒர்மை உணர்வு,
எண்ணங்களில் சீர்மை, அகத்தாய்ந்த எண்ணங்களே சொல்லாய் செயலாய்
வெளிப்படல்,
புலனின்ப உணர்வுகளில் அளவு முறை, தவறாது அனைத்திடமும் பொங்கும் அன்பு,
நிறை மனம், உள்ளுணர்வு, விளைவை ஆராய்ந்த செயல் முறை, சினமின்மை, கவலையின்மை,
இன்ன பிற பண்புகளால் அறியப்
படுவார் குரு வழி நின்ற ஒரு நற்பண்பாளர்.
"சத்குருவின் அருளால் மனதைச் சும்மா இருக்க
செய்தாலன்றி எல்லாரும் விரும்பும் அமைதியை எவராலும், எவ்வழியிலும், எவ்வேளையிலும், எவ்விடத்திலும் எவராலும் அடைய முடியாது"
என்பார் ரமணர்.
தகப்பனுக்கே உபதேசம் செய்து
குருசுவாமியாகியவர் முருகன். ஆகவே குருவுக்கு வயது என்பது இல்லை. குருவானவர் எந்த
வயதினராகவும் இருக்கலாம். எந்தப் பாலினத்தவராகவும் இருக்கலாம்.
போலிக் குருவை அடையாளம் கண்டு
கொண்டால் உண்மைக் குருவை யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை
கொள்ளுவார்
குருடும் குருடும்
குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழு
மாறே"
- திருமந்திரம் -
"ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன்
அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும்
குரவனே"
- திருமந்திரம் -
"வீணான நினைவுகளை விடாமல் எண்ணுபவர் செய்யும்
உபதேசத்தில் சிவத்தியானம் சிறந்து வெளிப்படாது தீமைகளே வெளிப்படும். அவுபதேசத்தைக்
கேட்பவர் அறிவு கெடும். அக்குருவால் வாழும் நாட்டுக்கும் அரசுக்கும் தீங்கு
வரும்" என்கிறார் போலிக் குரு பற்றி திருமூலர்.
குரு ஒளியாயிருக்கிறார், சீடனுக்கு ஒளியை வழங்குகிறார், சீடனின் மனதில் இருக்கும் இருளை போக்குகிறார், சீடனை ஒளிமயமாக்குகிறார். ஆகவே எவர் சிந்தனைகள், சொற்கள் உன்னை தெளிய வைக்கிறதோ அவரே உனது குரு
ஆவார் என்கிறார் சட்டைமுனி.