கதவைத் தட்டும் போது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:49 | Best Blogger Tips

 


ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான். எதிரில் ஒரு தட்டு. அதில் சில நாணயங்கள். அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள். அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். இருவரும் நண்பர்கள். அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான்.

ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான். அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான். பாட்டு அரசனை கவர்ந்தது.

நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்!; என்றான் அரசன்.

மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.

அரசே! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை. அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா? என்று கேட்டான்.

இதென்ன பிரமாதம். நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன். மதியம் உணவுடன் சந்திக்கிறேன்;, என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான்.

மதிய உணவை அரசன் கொண்டுவருவான். அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும். அதற்கு வசதியாக, காலையிலிருந்தே எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. அதிக பசியோடு இருந்தால் அதிகமாக சாப்பிடலாம், என்று அவன் மனம் கணக்குப் போட்டது.

அடுத்த நாள் விடிந்தது. அரசனின் வருகைக்காக காத்திருந்தான். வழக்கம் போல் பலர் அவனுக்கு உணவு கொடுக்க முன் வந்தார்கள். அரசன் கொண்டுவரும் உணவு பற்றிய சிந்தனையால் மற்றவர்கள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டான். மதியம் மணி இரண்டானது, மூன்றானது அரசன் வரவேயில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இரவு எட்டு மணியானது. ஆள் நடமாட்டமே இல்லாமல் அந்த இடமே ஓய்ந்து போனது. கோபத்தோடும் பசியோடும் உட்கார்ந்திருந்தான் பார்வையற்றவன். அந்த நேரத்தில் அரசன் அங்கு வந்தான்.

தம்பி! எப்படி இருக்கிறாய்? அரண்மனை சாப்பாடு நன்றாக இருந்ததா? எங்கே பொற்காசு மூட்டை, எங்கே குதிரை?; என்று கேட்டான் அரசன்.

சாப்பாடா? காலையிலிருந்து பசியோடு காத்திருக்கிறேன். இப்போதுதானே நீங்களே வருகிறீர்கள்;, என்றான் சோகமாக.

யோசித்தான் அரசன். பிறகு பேசினான்.

சாப்பாட்டுக் கூடையோடு கிளம்பினேன். திடீரென்று தலை சுற்றியது. வைத்தியர்கள் என்னை சோதித்துவிட்டு ஓய்வெடுக்குமாறு சொன்னார்கள். அதனால், என்னுடைய பாதுகாவலன் மூலமாக உணவை கொடுத்து அனுப்பினேன். அதை நீ சாப்பிடவில்லையா?; என்றவாறு பக்கத்தில் இருந்த பாதுகாவலனை விசாரித்தான்.

அரசே! இவரிடம் உணவை கொடுத்தேன். ஆனால், இவர் வாங்க மறுத்துவிட்டார். அதனால், அதை திரும்ப எடுத்துச் செல்வதைவிட யாரிடமாவது கொடுத்தால் உபயோகமாக இருக்குமே என்று நினைத்து பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் கொடுத்துவிட்டு அரண்மனை திரும்பினேன். உங்களிடம் விஷயத்தை தெரிவிப்பதற்காக வந்தேன். நீங்கள் ஓய்வில் இருந்தீர்கள். அரசியாரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்;, என்றான் பாதுகாவலன்.

தலையில் கைவைத்தபடி அமர்ந்தான் அரசன். அப்போது அங்கிருந்த சாது பேசினார்.

தம்பி! நடந்த விவரங்களை என்னால் யூகிக்க முடிகிறது. அரசன் சாப்பிடும் உணவை கேட்டாய். தானே நேரில் வந்து கொடுக்கிறேன்;, என்று சொன்னது அரசனின் பெருந்தன்மை. ஆனால், அரசன் வந்து நேரில் கொடுத்தால் மட்டுமே அது அரச உணவு என்று நீ நினைத்தாய். அதுதான் இவ்வளவு குழப்பங்களுக்கு காரணம். இதுவரை நடந்தது மட்டுமே உனக்குத் தெரியும். இதற்கு மேலும் பல விஷயங்கள் நடந்துள்ளது;, என்று சொல்லிவிட்டு அமைதியானார் சாது.

அந்த இடமே அமைதியானது. சாது மீண்டும் பேசத்தொடங்கினார்.

உணவை கொடுத்து அனுப்பிய அரசன் இரண்டாவது பாதுகாவலனை அழைத்தான். ஆயிரம் பொற்காசுகளை ஒரு மூட்டையாக கட்டி, மரத்தடியில் அரச உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம் இந்த மூட்டையை ஒப்படைத்துவிட்டு வா;, என்று அனுப்பினார். இரண்டாவது காவலன் சாப்பிட்டுக் கொண்டிருந்த உனது நண்பனிடம் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்துவிட்டு நகர்ந்தான். அந்த பொற்காசு உனக்காக கொடுக்கப்பட்டது. குழப்பம் இதோடு தீரவில்லை. அரசன் மூன்றாவதாக ஒரு காவலனை அழைத்தான். அவனிடம் ஒரு குதிரையை கொடுத்து, மரத்தடியில் பொற்காசு மூட்டையுடன் இருப்பவனிடம் குதிரையை கொடுக்கும் படி அனுப்பினான். பொற்காசு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த உன் நண்பன் குதிரையை பெற்றுக் கொண்டு நாட்டைவிட்டே போய்விட்டான். இப்போது உன்னுடைய நண்பன் செல்வந்தன். உன்னுடைய புரிதலில் ஏற்பட்ட சிறிய தவறால் நீ இன்று பசியோடு இருக்கிறாய். இதை விதி என்பதா? அல்லது வாய்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் கோட்டைவிட்டாய் என்று சொல்வதா? ஒன்று மட்டும் நிச்சயம், உன்னுடைய வரம் உனக்கு சாபமாகவும், உன் நண்பனுக்கு வரமாகவும் மாறிவிட்டது;, என்று சொல்லி முடித்தார் சாது.

அமைதியாக இருந்த அரசன் பேசினான்.

கவலைப்படாதே! நாளை உனக்கு உணவு, பொற்காசு, குதிரை ஆகிய எல்லாவற்றையும் மீண்டும் அனுப்பிவைக்கிறேன்;, என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அரசன்.

அடுத்த நாள், அரசனின் வருகைக்காக காத்திருந்தான் பார்வையற்றவன். அரசன் வரவேயில்லை. முந்தய இரவே உடல் நிலை சரியில்லாத அரசன் இறந்து போன செய்தி இன்னமும் அவனுக்கு எட்டவில்லை.

வாய்ப்பு என்பது எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்து கதவை தட்டுவதில்லை. அப்படியே சொல்லிவிட்டு வந்தாலும் அதை மிகச் சரியாக உபயோகப்படுத்திக்கொள்ளும் புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. வாய்ப்பு; கதவைத் தட்டும் போது காதை பொத்திக்கொண்டால், பலன்கள் க்ஷ எப்படி கிடைக்கும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் மற்றொருவனிடம் சென்று தஞ்சமடையும்...

 


நன்றி இணையம்