உங்கள் வீட்டில் நோயுற்றவர்கள் இருக்கிறார்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:49 | Best Blogger Tips

 
 
அமாவாசை-பௌர்ணமியின் விஞ்ஞானம் தெரியுமா உங்களுக்கு?ஒரு நோயாளியை பார்க்கும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று குழப்பம் வந்துள்ளதா?ஆன்மீகம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளதா?இந்த கேள்விகளுக்கு சத்குரு தரும் சுவாரஸ்யமான பதில்கள் இங்கே!

கேள்வி
மற்ற நாட்களைவிட அமாவாசை, பௌர்ணமி நாட்களுக்கு மட்டும் ஏன் இத்தனை மகத்துவம்?
சத்குரு:
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் எல்லாவற்றையும் மேல் நோக்கி இழுக்கும் சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமியின்மீது கூடுதலாக இருக்கும். மனநிலையில் சமநிலையற்றவர்கள் இந்தச் சக்தியைச் சமாளிக்க முடியாமல் அதிகப்படியாகத் தடுமாறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். துக்கமாக இருப்பவர்கள் கூடுதலாக வேதனை கொள்கிறார்கள். அமைதியாக இருப்பவர்கள் மேலும் அமைதியாகிறார்கள்.
இந்த ஈர்ப்பு சக்தியால் கடல் பொங்கி மேலே எழுவதைக் கண்கூடாகக் காணலாம். உங்கள் உடலில் உள்ள ரத்தம்கூட மேல்நோக்கிச் சுண்டி இழுக்கப்படுகிறது.
தங்கள் சக்தியை மேல்நோக்கிச் செலுத்தப் பலவித முயற்சிகளில் ஈடுபடும் சாதகர்களுக்கு இந்த இரண்டு நாட்களும் இயற்கை அருளும் வரப்பிரசாதம்!
கேள்வி
நோயாளிகளைப் பார்க்கும்போது, எனக்குள் ஒரு குழப்பம் உண்டாகிறது. முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள வேண்டுமா? அல்லது இயல்பாக உற்சாகமாக இருக்கலாமா?
pournami, isha, yoga, meditation, sadhguru, spiritual, disease, death
சத்குரு:
வேதனையில் இருப்பவர்களுக்கு உற்சாகமூட்டுவதுதானே நியாயம்? நீங்களும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவர் வேதனையை அடிக்கோடிட்டுக் காட்டுவதில் என்ன அர்த்தம்?உடல்நலமின்றி இருப்பவர்களைச் சந்திக்கப் போகும் பெரும்பாலானவர்கள் இந்தத் தவறைத்தான் செய்கிறார்கள். நோய் முகம் நோயுற்று இருப்பவருக்கு, அவரைச் சுற்றி ஆரோக்கியமற்ற சோகமான சூழல் இருந்தால், அது எப்படி உதவி புரிய முடியும்?உற்சாகமான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தித் தருவதுதானே புத்திசாலித்தனம்? அதுதானே அவர் விரைவில் நலம்பெற துணைபுரியும்?
நோயுற்று இருக்கும்போது, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷங்களைப் புதைத்துவிட்டு தன்னைப் போல் வேதனைகளோடு வளைய வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவருக்கு நோய் உடலில் மட்டுமல்ல, மனதிலும் இருக்கிறது.
கேள்வி
ஆன்மீகம், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதா?
சத்குரு:
ஆன்மீகம் என்பதை யாருக்கோ என்னவோ நடப்பதாக ஏன் நினைக்கிறீர்கள்? ஆன்மீகம் என்பது உங்களைப்பற்றியது. நீங்கள் என்பது ஓர் உண்மை நிலை!குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு, உங்களுடைய பகுத்தறிவால் விளக்கம் கொடுக்கமுடியாமல் போகும்போது, அவற்றைப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை என்று தீர்மானித்துவிட்டீர்கள்.
உங்கள் குடும்பம், உங்கள் செல்வம், உங்கள் கல்வி, உங்கள் மனம், உங்கள் உடல் இவையெல்லாம் நீங்கள் இந்த பூமியில் வந்து சேகரித்தவை. நீங்கள் என்று நான் குறிப்பிடுவது, நீங்கள் இப்படிச் சேகரித்தவற்றை அல்ல. அதற்கும் உள்ளே, உங்கள் அடிப்படையாக விளங்குவதை நீங்கள் என்று உணரும் அனுபவமே ஆன்மீகம்!
சுருக்கமாகச் சொன்னால், உங்களைப் பற்றியது ஆன்மீகம். உங்கள் அனுபவத்தில், நீங்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை ஆன்மீகமும்!

Via http://tamilblog.ishafoundation.org/