அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படும்.
அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். கூடிய விரைவில் மக்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பலூன்கள் இன்று நியூசிலாந்து நாட்டில் உள்ள கிரைஸ்ட்சர்ச் என்ற இடத்திலிருந்து பறக்க விடப்பட்டுள்ளன. இவை ஆகாயவிமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக்கூடியவை. இவை மூலம் 3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் பெறமுடியும்.
தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழு இந்த பலூனையும் தயாரித்துள்ளது. பிராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் இயக்குனர் மைக் காசிடி இதனை ஒரு நிலவு வீச்சு என்று வர்ணித்தார். தான் சொல்லும் திட்டம் விஞ்ஞானக் கதை போலத் தெரியலாம் , ஆயினும் பெரிய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முடிவு இது என்று அவர் கூறினார்.
இதுபோன்ற பலூன்கள், பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாயமார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
Via மைலாஞ்சி ( Mylanchi )