'பிரதீகம்', 'பிரதிமா ' என்று இரண்டு சமஸ்கிரதச் சொற்கள் உள்ளன. பிரதீகம் என்றால் நோக்கி வருவது, நெருங்கி வருவது. எல்லா மதங்களிலுமே வழிபாட்டில் பல படிகளைப் பார்க்கிரீகள். இந்த நாட்டிலும் சிலர் மகான்களின் திருவுருவங்களை வழிபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட உருவங்களையும் சின்னங்களையும் வழிபடுகிறார்கள். வேறு சிலர் மனிதர்களைவிட உயர்ந்த ஆவிகளை வழிபடுகிறார்கள். ஆவிவழிபாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வேகமாக பெருகி வருகிறது. அத்தகையோர் இங்கே சுமார் என்பது லட்சம்(அப்போதைய கணக்கு) இருப்பதாக நான் படித்தேன். இன்னும் சற்று உயர்ந்த நிலையில் உள்ள தேவதைகளையும் தெய்வங்களையும் வழிபடுபவர்களும் உண்டு ......
இவையெல்லாம் பிரதீக வழிபாடு. இவர்கள் இறைவனை வழிபடவில்லை.ஆனால் இறைநிலைக்கு அருகில் உள்ளதான பிரதீகத்தை வழிபடுகிறார்கள். இவற்றின் வழியாக இறைவனை அடைய முயல்கிறார்கள்.
இந்த பிரதீக வழிபாடு நமக்கு முக்தி தந்து, நம்மைச் சுதந்திரர்கள் ஆக்காது. எந்தப் பொருட்களுக்காக அவற்றை வழிபடுகிறோமோ, அவற்றை மட்டுமே தரமுடியும். எடுத்துகாட்டாக, இறந்துபோன தன் முன்னோர்களையோ, நண்பர்களையோ ஒருவன் வழிபட்டால் ஒருவேளை சில சக்திகளோ, சில செய்திகளோ அவர்களிடமிருந்து கிடைக்ககூடும். வழிபடப்படுகின்ற அவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பளிப்பே வித்தை அதாவது விசேஷ ஞானம். ஆனால் நமது மிக உயர்ந்த லட்சியமான முக்தி என்பது ஆண்டவனை வழிபடுவதன்மூலம் மட்டுமே கிடைக்க முடியும்.
வேதங்களை விளக்கும்போது சில கீழைநாட்டு அறிஞர்கள் சகுணக் கடவுளைக்கூட ஒரு பிரதீகமாக கருதுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. சகுணக் கடவுளைப் பிரதீகம் என்று கருத இடமுண்டு; ஆனால் பிரதீகம் என்பது சகுணக் கடவுளும் அல்ல, நிர்க்குணக் கடவுளும் அல்ல. அதை இறைவனாக வழிபடமுடியாது. எனவே தெய்வங்கள், முன்னோர்கள், மகான்கள், ஆவிகள் என்று பல்வேறு பிரதீகங்களை வழிபடுவதால் முக்தி பெறாலம் என்று நினைத்தால் அது பெரும் தவறாகும். மிஞ்சிப்போனால் அவர்களுடைய உதவியால் சில சக்திகளை பெறலாம். ஆனால் இறைவனால்தான் முக்தி தர முடியும். முக்தி தர இயலாதவை என்பதற்காக அவற்றை நாம் கண்டிக்க வேண்டியதில்லை. அந்த வழிபாடும் சில பலன்களைக் கொடுக்கவே செய்கிறது. இவற்றைவிட உயர்ந்த எதையும் அறிந்துகொள்ள இயலாத மனிதன் இந்த பிரதீக வழிபாட்டின்மூலம் சிறிது சக்தியைப் பெறலாம். சிறிது மகிழ்ச்சியை எய்தலாம். ஆனால் நீண்டநாள் அனுபவித்த பிறகு, முக்தி பெரும் தகுதி அவனுக்கு வரும்போது, அவன் தானாகவே இந்த பிரதீகங்களை விட்டுவிடுவான்.
---சுவாமி விவேகானந்தர் .......