வழிப்போக்கர்களின் கட்டுச்சோறு!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips
கோயில்களில் சுவாமி தரிசனம் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் பிரசாதம். பிரசாதம் என்றால் விபூதி அல்லவே; கட்டுச்சோறாக்கும்!
புளி, எலுமிச்சை, தயிர்... இன்னும் என்னவெல்லாம் கூடுமோ எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு பின்னால் சாதத்தையும் சேர்த்துக்கொள்ளும். கட்டுச்சோறாகிவிடும். மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்புமுன் ஒரு கதை உண்டு. கட்டுச்சோறு கதை. கேட்கலாமா?

இப்போதுபோல் சோறு என்ற பதம் நெல்சோற்றை மட்டுமே அக்காலத்தில் குறிக்காது. கம்பு, கேழ்வரகு, தினை என்று நிலத்துக்கேற்ப சோறும் மாறும். வீட்டில் ஏதேனும் விசேஷமாக இருந்தாலோ வீட்டிலுள்ளவர் எவரேனும் வெளியூர் பிராயாணம் மேற்கொண்டாலோ மட்டுமே வீட்டில் நெல்சோறு சமைப்பர். பிராயணமும் பெரும்பாலும் நடைராஜா வண்டியிலேயே இருக்கும். கொஞ்சம் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் மாட்டு வண்டியையோ குதிரை வண்டியையோ அமைத்துக்கொண்டிருந்தனர். காடு, கழனி, ஆறு, மலை எல்லாம் தாண்டி இப்படிக் கால்நடையாகவே பிராயணம் செல்லும் வழிப்போக்கர்களுக்கு ஊர் எல்லையையொட்டி, இறந்தவர்கள் ஞாபகமாக அமைக்கப்படும் சுமைதாங்கிகளே இளைப்பாறுமிடம். தலையில் உள்ள சுமையை இறக்கிச் சுமைதாங்கியில் வைத்துவிட்டு அருகிலிருக்கும் மரத்தடியில் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். வயிற்றுப்பசிக்கு வழி? வீட்டிலிருந்து கட்டிக்கொண்டு வந்த சோறு-கட்டுச்சோறு!

இப்படிதான் தன் பயணத்தைத் தொடங்கியது கட்டுச்சோறு. பின்னாட்களில், சத்திரங்களிலும் கோயில்களிலும் அது புகுந்தது. கோயில் மடப்பள்ளிகளில் காலத்தால் அழியாத ருசியைப் பெற்றது. உங்களுக்குத் தெரியுமோ? கோயில் மடப்பள்ளிகளில் பிரசாதம் கிளறுவதற்கென்றே ஒரு கல் வைத்திருப்பார்கள். அமுதுபாறை அல்லது படக்கல் என்று அந்தக் கல்லுக்குப் பெயர். வடித்த சோற்றை இந்தக் கல்லில் கொட்டிக் கிளறுவதாலேயே சோற்றுக்குத் தனி ருசி வருவதுண்டு என்று கூறுவார்கள். தமிழகத்தின் ஆரம்பக் கால உணவகங்களில் சாப்பாடு கிடையாது. பெரும்பாலான உணவகங்களில் தயிர் சாதம் மட்டுமே மதிய நேரத்தில் கிடைக்கும். அப்புறம், கொஞ்ச நாள் கழித்து புளியோதரை, அப்புறம் எலுமிச்சை, தேங்காய், தக்காளி என்று ஆரம்பித்து இப்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி வரை ஏகப்பட்ட சாத வகையறாக்கள் வந்துவிட்டன. ஆனாலும், பெரும்பாலான உணவகங்களில் கட்டுச்சோறு பத்தோடு ஒன்று பதினொன்றாகவே ஆறி, அலறி, குழைந்து கிடைக்கிறதேயன்றி மடப்பள்ளி பதத்தில் கிடைப்பதில்லை.

திருவாரூரில் ஒரு கடை இருக்கிறது. 'எஸ்.ஆர்.ஆர். கபே' என்று பெயர். கட்டுச்சோற்றை மட்டுமே பிரதானமாய்ச் சமைக்கிறார்கள். புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று
பலப்பல கட்டுச்சோற்றுடன் தொட்டுக்கொள்ள அதுஅதற்கே உரிய பருப்புத் துவையல், அப்பளப்பூ, ஊறுகாய், வெங்காயப் பச்சடியுடன் கொஞ்சம் காசு அதிகம் தந்தால் பக்கோடாவும் தருகிறார்கள். எல்லாமே திவ்யமாய் இருக்கிறது. கூட்டமும் அப்படியே!

கடை உரிமையாளர் எஸ்.ஆர். ரமேஷுடம் பேசினோம்: "கட்டுச்சோற்றுக்கு முதல் பக்குவம்... அரிசிப் பக்குவம். சோற்றுப் பருக்கை விரையாகவும் இருக்கக் கூடாது; குழைந்து ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கொண்டும் இருக்கக் கூடாது. அரிசியை நான்கு முறை களைந்து குறைந்தது அரை மணி நேரம் ஊறவைத்து வடித்தால் சோறு பதம் காணும். இரண்டாவது பக்குவம்... கரைசல் பக்குவம். அது அவரவர் கைக்கும் நாக்குக்கும் ஏற்ப அமைவது. புளியோதரை என்றால் கரைசலுக்கான பொடியை இடித்துக் கலந்தால் நன்றாக இருக்கும். தயிர் சாதம் என்றால் பாலில் தயிரும் வெண்ணெயும் கலந்து சோற்றில் கலந்தால் நன்றாக இருக்கும். இப்படி அந்தந்தச் சாதத்துக்கேற்ப இந்தப் பக்குவம் அமையும். மூன்றாவது... கிண்டு பதம். சோற்றை மசாலாவுடன் சேர்க்கும்போது பதமாகச் சோற்றின் மேலெழுந்தவாரியாக கலக்க வேண்டும். சோற்றுப் பருக்கையைக் கரண்டி காயப்படுத்திவிடக் கூடாது. எல்லாவற்றையும்விட முக்கியம் சாதத்துக்கேற்ப தொட்டுக்கை செய்வது. அது கூடிவிட்டால் எல்லாமும் கூடிவிடும்'' என்றார் ரமேஷ்.

பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு தட்டில் எல்லா வகையான கட்டுச்சாதமும் வைத்து எடுத்து வந்தார்கள். நாம் மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டோம்!

சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து...
தினமணி 2008-சமஸ்

Thanks to FB Thiru.Varagooran Narayanan