திப்பு சுல்தான் எனும் மாவீரன்!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 PM | Best Blogger Tips

(இன்று - மே 4 - திப்பு எனும் மாவீரன் மறைந்த நாள்.)
திப்பு சுல்தான்... புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய வீரர் மற்றும் தலைசிறந்த நிர்வாகி இவர். எளிய வீரரராக, வாழ்க்கையை தொடங்கி மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி. ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான்.

திப்பு கி.பி 1767ல் தமது 17-ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார்.

கி.பி.1767முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு. இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட ஒரு இந்திய மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம் போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால் வாய்த்தது.

ஹைதர் போர் நடந்து கொண்டிருக்கும்பொழுதே மரணம் அடைந்துவிட மன்னர் ஆனார் திப்பு. அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள் போர்களத்திலேயே கழித்தார்.

'யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்' என்று தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான்.

உலகத் தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார்; சொந்த தேதி முறை பின்பற்றினார். சாவின் கென்னெடி விண்வெளி மையத்தின் நுழைவாயில் ஒரு ஓவியம் கொண்டிருக்கிறது - தில் திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது; போர்களத்தில் ஏவுகணையை முதன்முதலில் உலகிலேயே பயன்படுத்தியவர் இவர்தான். அது இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது. ந்த ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன.

மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துகாட்டு இவர். நூற்றி ஐம்பத்தாறு கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில் மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதும். கோயில்களுக்கு செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில்  இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 அளிக்கப்பட்டது. இவர் ஆட்சியில், சிருங்கேரி மடத் தலைவருடன் நெருங்கிய உறவு பாராட்டினார்.

கப்பல் கட்டும் தொழில்நுட்பம், முகலாயர்களின் ஆட்சியில் இருந்து மாறுபட்ட நிர்வாகம், இடைத்தரகர்கள் இல்லாத நிலவரி விதிப்பு என இவரின் ஆட்சியின் நிர்வாகப்பாடங்கள் ஏராளம். நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் அவர்.

ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு சதவிகிதம் மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத் தடுத்து சட்டம் இயற்றியுள்ளார். கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக் கண்காணித்தார்.

இவர் உருவாக்கிய பல்வேறு சத்தமெழுப்பும் இயந்திரப்புலி ஒன்று இன்னமும் இங்கிலாந்து மியூசியத்தில் பழுதடைந்து எவ்வளவோ முயற்சிக்குபின் சரி செய்ய முடியாமல் இருக்கிறது

ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில் தோற்று அவரின் மகன்களை போருக்கான பிணையாக கொண்டு சென்றார்கள் ஆங்கிலேயர்கள். ஆங்கில கலாசாரத்தில் அவரின் பிள்ளைகளை வளர்த்து இவரைக் காயப்படுத்தினார்கள்.

நான்காம் மைசூர் போரில் அவரின் தளபதியின் துரோகம், ஹைதராபாத் நிஜாமின் கடல் போன்ற படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம் பேர் படையை முப்பதாயிரம் பேர் கொண்ட படையோடு எதிர்கொண்டு மரணம் அடைந்தார். வீர வரலாறு ஒன்று முடிவுக்கு வந்தது.

- பூ.கொ.சரவணன்