நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்றால் என்ன?
நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது ஏற்றுமதி இறக்குமதி இடையேயான வேறுபாடு ஆகும். அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிடையே வரவு செலவு போக கணக்கிடப்படும் வித்தியாசம் தான் இது. சுருக்கமாக, ஏற்றுமதியை விட இறக்குமதி, பண பரிமாற்றங்கள் உட்பட, அதிகமாக இருந்தால் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) ஒரு சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது ஒரு மிகப் பெரிய கவலைக்குரிய விஷயம் என்பது தெரிந்ததே. இதன் வரைபடம் இறக்குமதியைக் குறைக்கவும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் முயன்று தோல்வியடைந்த முயற்சிகளைக் காட்டுகின்றது.
இது பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?
நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் போது பண மதிப்பும் பாதிப்படைகிறது. இன்னும் சொல்லப்போனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்தால் ரூபாயின் மதிப்பு குறைகிறது. இதற்கு அந்நிய செலாவணி மூலமாக பணம் வெளியேறுவது காரணமாக இருக்கலாம். ஒரு வகையில் இதன் பொருள் உள்நாட்டில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது என்பதாகும். அதாவது நாட்டில் சேமிப்பு குறைந்து முதலீடு அதிகரித்துள்ளது. சேமிப்பு குறைவதற்கு காரணம் குறைந்த பணவரவு மற்றும் அதிகரித்துள்ள தங்கம், கச்சா எண்ணெயின் இறக்குமதியே ஆகும்.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைய வேண்டுமென்றால் தங்கத்தின் தேவையும் கணிசமாகக் குறைய வேண்டும்.
சமீபத்தில் அரசாங்கம் தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகளும், மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பும் படிப்படியாக நடப்புக் கணக்கு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும்.