பக்கவாதம் நோய் பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:58 PM | Best Blogger Tips


பக்கவாதம் என்பது ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கசிவு போன்ற சில பிரச்சினைகளால் ஏற்படுவதுதான் பக்கவாதமாகும்.

ரத்த திட்டுக்கள் ஏதேனும் ஒன்று மூளைக்குச் சென்று அங்குள்ள நாளங்களை அடைத்து விட்டாலும் பக்க வாதம் ஏற்படும். இது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்த நோய் வருவதற்கு முன்பு எந்த அறிகுறியும் இருக்காது.

இதனைத் தடுக்க, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றிற்கு உரிய சிகிச்சை அளித்து உடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். புகைக்கும் பழக்கம் பக்கவாதத்திற்கு காரணமாக அமையலாம். எனவே புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதனை கைவிட வேண்டும்.

குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள், மற்றும் குறைந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தினமும் உடற்பயிற்சி செய்வது இன்றியமையாததாகிறது.

பக்கவாதத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள்

உடலின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு உறுப்புகள் செயல்படாமல் போவது, பலகீனம், பார்வைக் குறைபாடு, நினைவுத் திறன் குறைவது, ஒரு காரியத்தை செய்ய உடலின் ஒத்துழைப்பு இன்மை, உடல் வீக்கம், அடிக்கடி மயக்கநிலை, சிறுநீர் தொடர்பான உபாதைகள் போன்றவை பக்கவாதத்திற்கு அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.

இவற்றை, சிடி அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகள் மூலமாகவோ, இசிஜி, ஸ்கேன் போன்றவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மிகப்பெரிய பிரச்சினை

சில சமயங்களில் பக்கவாத நோயால் நோயாளிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினைகள் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டு விடுகிறது.

ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்த நாளங்களில் பாதிப்பு, உடலில் வாய், கை அல்லது கால்களின் அசைவுகள் முற்றிலுமாக முடங்கிப்போவது, எலும்பு முறிவு, மூட்டுகள் விடுபட்டுப் போவது, தசைகள் கிழிவது, மூளையின் செயல்பாடு நின்றுப்போவது, சுயமாக எதையும் செய்ய இயலாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை பக்கவாதம் ஏற்படுத்திவிடுகிறது.

சிகிச்சை முறைகள்

முன்பெல்லாம் பக்கவாதம் வந்துவிட்டால் ஆயுள் முழுவதும் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது பக்கவாதம் வந்தவர்கள் பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு இயல்பான வாழ்க்கை வாழ வழி ஏற்பட்டுள்ளது.

மேலும், பக்கவாதம் வந்தவுடன் சில மருந்துகளைக் கொடுத்து உடனடியாக ரத்த ஓட்டத்தை சீரடைய வைத்து கோமா அல்லது நிரந்த பக்கவாதத்தில் இருந்து நோயாளிகளைக் காப்பாற்றும் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

மூளையில் ரத்த திட்டால் ஏற்பட்ட பக்கவாதத்தை உடனடியாகக் கண்டறிந்து தலையில் அறுவை சிகிச்சை செய்து நோயாளியை காப்பாற்றும் முறை வந்துள்ளது.

ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், ரத்த திட்டுக்கள் போன்றவற்றை உடலில் பரிசோதனை செய்து அவற்றை முன்கூட்டியே நீக்குவதால் மேற்கொண்டு பக்கவாதம் வராமலும் தடுக்க முடியும்.

பக்கவாதம் பாதித்தவர்களுக்கு உடனடியாகக் கொடுக்கப்படும் சிகிச்சையை விட, பிறகு அவர்களுக்கு அளிக்கும் பிசியோதெரப்பி பயிற்சியே நல்ல முன்னேற்றத்தை அளிக்க உதவும்.

பேசும் பயிற்சி, கை, கால்களை அசைக்க பயிற்சி, நடக்கும் பயிற்சி, சிறுநீரை அடக்கும் பயிற்சி போன்றவையும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது —
 
 
Thanks to FB சுபா ஆனந்தி