புலம்ப வேண்டாம்... செயலில் இறங்கவும்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:31 | Best Blogger Tips


தன் குழந்தை இப்படி இருக்கிறதே என்று புலம்புவதையே பல பெற்றோர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனரே தவிர, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதில்லை.

ஒரு தாய் இப்படி புலம்புகிறார், "நான் பள்ளியில் படிக்கும்போது அனைத்திலுமே முதலாவது மாணவியாக வருவேன். எனக்கு, படிப்பில் சோர்வு என்பதே இருந்ததில்லை. எதிலுமே, நான்தான் முதலாவதாக வருவேன். ஆனால், என் மகள் எனக்கு நேர்மாறாக இருக்கிறாள். படிப்பில் அவளுக்கு ஆர்வமே இருப்பதில்லை. தேர்வில் தேர்ச்சிப் பெறுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. பள்ளிக்குப் போகவே அவளுக்குப் பிடிக்கவில்லை" என்பதுதான் அந்தப் புலம்பல்.

அவரது மகளின் அந்த நிலைக்கு காரணங்கள் பலவாக இருக்கலாம். குறிப்பிட்ட காரணத்தைக் கண்டுபிடிப்பது, பெற்றோருக்கு கடினமாக இருக்கிறது. நன்றாக படிக்க வேண்டும் என்ற பெற்றோரின் அளவுக்கு மீறிய நெருக்கடி, குழந்தைகளுக்கு இருக்கும் ஏதேனுமொரு கற்றல் குறைபாடு மற்றும் அது கண்டுபிடிக்கப்படாமை, பள்ளியில் நடக்கும் சில சந்தோஷமான மற்றும் வருத்தத்திற்குரிய நிகழ்வுகள் போன்ற அம்சங்களில், ஏதோவொன்று, குழந்தையின் செயல்பாட்டை பாதிக்கும் காரணியாக இருக்கும். அதை கண்டுகொள்வதுதான் அனைத்து சிக்கல்களையும் புரிந்துகொள்வதற்கான அடிப்படை.

தங்களின் குழந்தை படிப்பில் முதல் மாணவராக இல்லையே, தங்களின் பக்கத்து வீட்டுப் பிள்ளையைப் போல் அதிக மதிப்பெண்களை எடுப்பதில்லையே, என்று, ஏராளமான பெற்றோர்கள் ஒப்பீடுகளிலும், வீண் கவலைகளிலுமே ஒவ்வொரு நாள் பொழுதையும் கழிக்கிறார்கள். இத்தகைய அவர்களின் எதிர்மறை எண்ணமானது, அவர்களது குழந்தைகளுக்கு தீங்காக முடிந்துவிடுகிறது.

இளம்வயது மாணவர்களின் தற்கொலைகள் மற்றும் பெருங்குற்றங்கள் போன்ற சம்பவங்கள் பெருகிவரும் இக்காலத்தில், தமது பிள்ளைகளுக்கு, பெற்றோர்கள், எந்தவகையில் ஆக்கப்பூர்வமாக உதவ வேண்டும் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

ஈடுபாடு காட்டுதல்

தங்களது பிள்ளைகளின் பள்ளியில் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்கு முழுமையாக தெரியாது என்பதை பல பெற்றோர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினையைப் போக்க, ஒரு குழந்தையின் அன்றாட செயல்பாடுகளில், சோம்பேறித்தனம் மற்றும் நேரமின்மை போன்ற காரணங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு, நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த நாளில், குழந்தையின் பள்ளியில் என்ன நடந்தது, அதன் நண்பர்கள் யார், நடத்தப்பட்ட பாடம், குழந்தைக்கு மிகவும் உதவியாக இருந்த ஆசிரியர்கள் ஆகிய அம்சங்களைப் பற்றி, பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், உங்கள் குழந்தையின் சவால்களை நீங்கள் அறிந்து, அதற்கு எப்படி உதவ முடியும் என்பதை திட்டமிடலாம்.

குழந்தையைப் பற்றிய உங்களின் அதீத எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டு, அதன் இயல்பான திறன்களுக்கு மதிப்புக் கொடுக்க, ஒவ்வொரு பெற்றோரும் பழகிக்கொள்ள வேண்டும்.

குழந்தையிடம் பேசுதல்

சில பெற்றோர்களே, தங்களின் அன்றாடப் பணிகளுக்கிடையில், தங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள். எந்த நேரத்தில், குழந்தையிடம் என்ன விஷயத்தைப் பேச வேண்டும் என்பதை முடிவுசெய்து, அந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட விஷயத்தை பேச வேண்டும். குழந்தைகள், சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கு தயங்கினாலும், நமது சகஜமான பேச்சு, அவர்களின் தயக்கத்தை உடைக்க வேண்டும்.

குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு, அக்கறையுடன் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களின் வீட்டுப் பாடங்களை நிறைவுசெய்ய, ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்ய வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், உங்களது குழந்தையை நியாயமான முறையில் புகழ்வதிலும், அதை உற்சாகப்படுத்துவதிலும் பயன்படுத்த வேண்டும்.

உதவி பெறுதல்

பெற்றோரின் சக்திக்கு மீறிய பிரச்சினைகளைத் தீர்க்க, வெளியிலிருந்து உதவி பெறுவதில் தவறில்லை. உதாரணமாக, பள்ளியில் அதீத கண்டிப்புடன் ஒரு ஆசிரியர் இருந்து, அதனால் உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டால், நீங்கள் அந்த ஆசிரியரிடம் சென்று, உங்கள் குழந்தையின் நிலைப்பற்றி பேசி, அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் உதவியைக் கோர வேண்டும்.

அந்த ஆசிரியரோடு, நீங்கள் இணைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும். இதன்மூலம், அந்த குறிப்பிட்ட ஆசிரியருடன் உங்கள் குழந்தையின் உறவு மேம்படும்.

உங்கள் குழந்தையிடம் ஏதேனும் கற்றல் குறைபாட்டை நீங்கள் கண்டுபிடித்தால், தயங்காமல், அதைக் களைவதற்கான ஆலோசனையை நிபுணர்களிடம் கேட்கலாம்.

சில சிறிய குறைபாடுகளை நீங்களே எளிதாக களைந்து விடலாம். ஆனால், பிரச்சினையை தள்ளிப்போட தள்ளிப்போட, அது பெரிதான, பெரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அப்போது, இழப்பும் அதிகமாக இருக்கும்.

 

thanks to fb Thannambikkai