நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை. கிருத்துவ மதபோதகரின் மகனாகப் பிறந்த ரால்ப் தாமஸ் ஹாட்ச்கின் கிரிப்பித் என்பவர் இங்கிருந்து தான் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தொடங்கினார்.
இந்த மலைப் பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1793 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் மலையேறும் (ட்ரெக்கிங்) அனுபவத்திற்கு ஏற்ற இடம் எனப் புகழ் பெற்றது. இங்கே உள்ள மலையேறும் தடங்கள் நீலகிரியில் மனித நாகரீகத்தின் கால்தடம் படாத பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள சுற்றுலாத் தலங்கள்
இங்குள்ள புகழ் பெற்ற மலையேறும் தடங்கள் : கோத்தகிரி - புனித கேத்தரின் அருவி பாதை, கோத்தகிரி - கொடநாடு பாதை, கோத்தகிரி - லாங்க்வுட் ஷோலா பாதை ஆகியன. நீலகிரியின் மலைகள் புல்வெளிகள் இடையே புகுந்து சென்று மலையேறுவோரின் மனதையும் ஆன்மாவையும் வருடிச்செல்லும் பல சிறிய தடங்களும் இங்கு உள்ளன.
ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட் , கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் ஆகியவை கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள காண வேண்டிய இடங்கள் ஆகும்.
கோத்தர்களின் மலை
கோத்தகிரி மிகப் பழமையான மலைப் பிரதேசமாக இருந்தாலும் இதன் வரலாற்றின் பரப்பு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் முதலே கிடைத்துள்ளது. கோத்தகிரி என்ற பெயர் கோத்தர்களின் மலை என்று பொருள் படுகிறது.
கோத்தர்கள் பல நூற்றாண்டுகளாக கோத்தகிரியில் வாழ்ந்து வரும் கைவினைஞர் பழங்குடியினர் ஆவர்.அவர்கள் வெளி ஆட்களுடன் பழக விருப்பமில்லாதவர்கள். மேலும் அவர்களது எண்ணிக்கை கடந்த பல வருடங்களாக நிலையாக குறைந்து வருகிறது. கடைசியாக கணக்கெடுத்த போது அவர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.
கோத்தகிரியை அடைவது எப்படி: கோத்தகிரி ரயில் மற்றும் சாலை
வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரிக்கு செல்ல சரியான சமயம்: கோத்தகிரிக்கு பயணம் செல்ல கோடை காலமே சிறந்த பருவமாகும்.