கொல்லிமலை - இயற்கையின் பொக்கிஷம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:45 | Best Blogger Tips

கொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இவ்வழகிய மலைத்தொடரை காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
கொல்லிமலை புகைப்படங்கள் - அரப்பளீஸ்வரர் கோயில்

ராசிபுரத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு கொல்லிமலையில் இருக்கும் அறப்பலீஷ்வரர் கோவிலில் இருந்து ரகசிய பாதை இருப்பதாக சொல்லப்படுகிறது. இக்கோவிலால் கொல்லிமலை யாத்ரீக ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.
வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் இக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். எட்டுக்கை அம்மன் என்றும் கொல்லிப்பாவை என்றும் அழைக்கப்படும் பெண்கடவுளின் பெயரால் இம்மலை கொல்லிமலை என்று வழங்கப்படுகிறது. ஆதிகாலம் தொட்டே இம்மலை கொள்ளிப்பாவை அம்மனின் அருளால் பாதுகாக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

கொல்லிமலையைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளோர், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை வருடம் முழுவதும் நிரம்பி வழிகிறது. இங்கு காணப்படும் ஆகாய கங்கை என்ற அருவி மிகவும் புகழ்பெற்றது.
கலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த 'ஓரி திருவிழா' நிறைய மக்களை இப்பகுதிக்கு வரவழைக்கிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அரசால் மலை காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாசிலா அருவியும், சுவாமி பிரவானந்தா ஆசிரமமும் இங்கு அமைந்திருக்கும் மேலும் இரண்டு சுற்றுலா இடங்களாகும்.
கொல்லிமலைக்கு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு. கொல்லிமலையில் கோடைகாலங்களிலும் ரம்மியமான தட்பவெட்ப நிலையே நிலவுகிறது. குளிர்காலங்களில் பனி மிக அதிகமாக இருப்பதால் குளிர் மற்றும் மழைக்காலங்களில் கொல்லிமலைக்கு பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.