நாகப்பட்டினம் - சோழகுல வள்ளிப்பட்டினம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:54 | Best Blogger Tips

நாகப்பட்டினம் நகரம் சென்னையிலிருந்து 350 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இலங்கையில்  வாழ்ந்த நாகர் இன மக்களைக் குறிக்கும் சொல்லான “நாகர்” என்ற சொல்லும், நகரம் என்று பொருள்படும், பட்டினம் என்ற சொல்லும், இணைந்து இந்த நகருக்கு நாகப்பட்டினம் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
வரலாற்றில், இந்நகருக்கான பெயர்கள் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளன. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில், “சோழகுல வள்ளிப்பட்டினம்” என்று அழைக்கப்பட்ட நாகப்பட்டினத்தை, தலெமி என்னும் வரலாற்றாசிரியர், “நிகாம்” என்ற பெயரில் தன்னுடைய குறிப்புகளில் அழைக்கிறார். போர்த்துக்கீசியர்கள், “கோரமண்டலத்தின் நகரம்” என்று குறித்துள்ளனர்.
நாகப்பட்டினம் அதன் சிறந்த வரலாறு மற்றும் பண்பாட்டினால் மிகவும் புகழ் பெற்ற நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம், நாட்டிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் ஒன்று.
இங்கு அமைந்துள்ள கோவில்கள் புனித யாத்திரை மேற்கொள்வோரால், மிகவும் கவரப்பட்டவை ஆகும். சௌந்தர்யராஜ பெருமாள் கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காயாரோகணசுவாமி கோவில், ஆறுமுகசுவாமி கோவில், போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கொண்ட நகரமாக இது விளங்குகிறது.
வேதாரண்யம் என்ற ஊரில் அமைந்திருக்கும் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகூரில் 16 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த நாகூர் தர்கா ஆகியவை நாகப்பட்டனத்துக்கு அருகாமையில் உள்ள சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.
மேலும் நாகப்பட்டினம், வேளங்கண்ணிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்துக்கும் நீங்கள் நாகப்பட்டினம் வரும் போது வந்து செல்லலாம். இந்து, இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம் ஆகிய நான்கு வகை மதங்களை ஒன்றிணைக்கும் நகரமாக இந்நகரம் விளங்குகிறது.
நாகப்பட்டினத்திற்கு அருகில், ஒரு சதுப்பு நிலம் காணப்படுகிறது. இச்சதுப்பு நிலமானது, பல்லுயிர் வசிப்பிடத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதுதவிர நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள, கோடியக்கரை என்ற ஊரில், காட்டு விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது.
வரலாறு
சோழ மன்னர்கள் காலத்தில் நாகப்பட்டினம், தலை சிறந்த துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் சிறப்புற்று விளங்கியது. மூன்றாவது நூற்றாண்டில், அசோக மன்னர், இங்கு ஒரு புத்த விகாரத்தினைக்  கட்டுவதற்கு கட்டளையிட்டார். அதன் காரணமாக, இவ்விடம், ஐந்து மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில், தலைசிறந்த புத்த மதக் கேந்திரமாக விளங்கியது.
பதினாறாவது நூற்றாண்டில், போர்த்துக்கீசியர்களின், காலனி ஆதிக்கம் இங்கு ஏற்படுத்தப்பட்டு, வாணிப மற்றும் வர்த்தக மையம் இப்பகுதியில் நிறுவப்பட்டது.  போர்துக்கீசியர்கள் இங்கு ஒரு கிறிஸ்தவ மத ஆசிரமத்தை அமைக்கும் திட்டத்தினையும் வைத்திருந்தனர்.
எனினும், பதினேழாவது நூற்றாண்டின் மத்தியில், டச்சுக்காரர்களுக்கும், தஞ்சாவூர் அரசருக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் காரணமாக, நாகப்பட்டினத்தின் நிர்வாகம், டச்சுக்காரர்களின் கையில் வந்தது.
டச்சுக்காரர்கள் பல தேவாலயங்களையும், மருத்துவமனைகளையும், இங்கு கட்டினார்கள். 1690 களில், டச்சுக்காரர்கள் ஆட்சியில், டச்சு கோரமண்டலின் தலைநகரமாக இது விளங்கியது.
டச்சுக்காரர்களின் படையெடுப்புக்குச் சான்றாக, இங்குள்ள டச்சுக்கோட்டை அமைந்துள்ளது. 1787 ஆம் ஆண்டு, டச்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் நாகப்பட்டினத்தைக் கைப்பற்றினர்.
ஆங்கிலேயர் ஆட்சியில், அப்போதிருந்த ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாகவும், மிக முக்கிய துறைமுக நகரமாகவும் நாகப்பட்டினம் விளங்கியது.
நாகப்பட்டினத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம்  மிக அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும். சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம், உள் வெளி நாட்டின், பல நகரங்களிலிருந்தும் இந்நகரத்தை இணக்கிறது.
நாகப்பட்டினம் ரயில் நிலையம், தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களை இணைக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் பல நகரங்களிலிருந்தும் தினசரி பேருந்துகள் நாகப்பட்டினத்திற்கு இயக்கப்படுகின்றன.
காலநிலை
அக்டோபர் முதல், மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலநிலை, நாகப்பட்டினத்திற்கு சுற்றுலா செல்ல சிறந்த காலநிலையாகும். இருப்பினும், ஆண்டின் அனைத்து மாதங்களிலும், பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் புனித யாத்திரைக்கு ஏற்ற மாதங்கள் ஆகும். மழைக்காலமான ஜூன் முதல், செப்டம்பர் மாதங்களில், சுற்றுலாத் தலங்கள், மிக அழகாகவும், புதியதாகவும் காட்சியளிக்கின்றன.