ஏலகிரி - இயற்கையின் மடியில் அடைக்கலம் ஆவோம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:53 PM | Best Blogger Tips

ஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். இது பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இதன் வரலாறு காலனி ஆட்சிக் காலந்தொட்டு நீள்கிறது. அந்தக் காலங்களில் ஏலகிரி முழுவதும் ஏலகிரி ஜமீன்தார்களின் தனிப்பட்ட சொத்தாக இருந்தது. அவர்களின் வீடு இன்றும் ரெட்டியூரில் உள்ளது.
ஏலகிரி புகைப்படங்கள் - புங்கனூர் லேக் பார்க்
Image source: commons.wikimedia.org
1950களின் துவக்கத்தில் ஏலகிரி இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப் பட்டது. கடல் மட்டத்திலிருந்து 1048 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏலகிரியில், பழங்குடியினர் வாழும் 14 குக்கிராமங்கள் கூட்டாக சேர்ந்து அமைந்திருக்கின்றன.

பல்வேறு பழங்குடியின மக்கள் வாழும் ஏலகிரி, தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களான ஊட்டி, கோடைக்கானல் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. இருப்பினும், சமீபகாலமாக ஏலகிரி மாவட்ட நிர்வாகம் பாராக்ளைடிங், மலையேறுதல் முதலிய விளையாட்டு வகைகளை பிரபலப்படுத்துவதன் மூலம் ஏலகிரியை ஒரு சாகச சுற்றுலா மையமாக பிரபலப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

ஏலகிரிக்கு வந்து சேர்ந்தவுடன் முதலில் ஒருவர் கவனத்தைக் கவருவது இதன் அமைதியான சூழலும் கிராமீய மணம் கமழும் அழகும் தான். பூந்தோட்டங்கள் , புல்வெளிகள் மற்றும் பழத்தோட்டங்களால் சூழப் பட்டிருப்பதால் இவ்விடம்  பழங்கள் மற்றும் இலைதழைகளின் வாசம் சூழ்ந்து காணப்படுகிறது. அழகிய இயற்கை வளம் சூழ்ந்த பாதைகளின் வழியே பயணம் செல்வது  கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

சாகச விளையாட்டுகளுக்கான  ஒரு இடம்

சாகச விளையாட்டுப் பிரியர்களிடையே ஏலகிரி பிரபலமானதாக விளங்குகிறது. சொல்லப் போனால் மகராஷ்டிர மாநிலத்தின் பாஞ்ச்கனிக்கு  அடுத்தபடியாக இந்தியாவில் விளையாட்டுக்கான இரண்டாவது சிறந்த இயற்கைத் தலமாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஏலகிரியில் பல கோயில்களும் உள்ளன. இவை ஏலகிரியை இளையவர்களையும்  முதியவர்களையும்  ஒருசேர  ஈர்க்கும் சுற்றுலா தலமாக ஆக்குகிறது. புங்கனூர் ஏரி ஏலகிரியின் குறிப்பிடத்தக்க இடங்களுள் ஒன்று.

இங்கு படகு சவாரி செய்வது மலைகளால் சூழப்பட்ட இந்த இடத்தின் இயற்கை அழகை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. மலையின் மீதிருந்து விரிந்து கிடக்கும் பசுமை நிறைந்த சமவெளிகள் காணக் கிடைக்கின்றன.
பயணிகள் தொலை நோக்கியை உபயோகித்து பரந்திருக்கும் கிராமிய அழகைக் கண்டு ரசிக்கலாம். நிலாவூர் அருவி படகு சவாரி செய்வதற்கான மற்றொரு இடமாகும்.

சுற்றிப் பார்ப்பது மற்றும் அதற்கான அனுமதிகள்

இங்கு சுற்றிப் பார்ப்பதற்கான இடங்களுள் வேலவன் கோயில் முதலான கோயில்களும், சுவாமிமலை குன்று முதலான மலை வாசஸ்தலங்களும், மலையேறும் பாதைகளும் அடங்கும்.

இயற்கைப் பிரியர்களுக்கு இங்கே இயற்கையான பூங்காக்களும், அரசின் மூலிகை மற்றும் பழத்தோட்டங்களும் உள்ளன. நட்சத்திரங்களைக் கண்டு ரசிப்பதில் விருப்பமுள்ளவராக இருந்தால் வேணு பாப்பு சூரிய ஆய்வு மையத்திற்கும்  தொலைநோக்கி இல்லத்திற்கும் செல்ல மறக்க வேண்டாம்.
ஏலகிரிக்கு செல்ல சிறந்த சமயம் குளிர்கால மாதங்களான நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் தான். இருப்பினும் ஆண்டு முழுமைக்கும் இங்குள்ள காலநிலை மிதமானதாகவே இருக்கும்.
கோடையில் தட்பவெப்பம் 18 டிகிரி  செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும். குளிர்காலத்தில் தட்பவெப்பம் 11 டிகிரி  செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை  மிதமான மழை பெய்கிறது. ஜனவரியில் பொங்கல் கொண்டாடப்படும் சமயத்திலும் , அக்டோபரில் தீபாவளி கொண்டாடப்படும் சமயத்திலும் ஏலகிரி ரெட்டிப்பு அழகுடன் காட்சியளிக்கிறது.
இவ்விரு பண்டிகைகளும் இங்கு  சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடப்படும். மே மாதத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் கோடைக் கொண்டாட்டமான "கோடை விழா"  சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு அம்சமாகும்.

ஏலகிரி பிற நகரங்களுடன் சிறந்த முறையில் இணைக்கப்பட்டு எளிதில்  அடையும் வகையில் உள்ளது. ஏலகிரிக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் பெங்களூரு விமான நிலையம் ஆகும்.

விமான நிலையத்திலிருந்து வாடகை வண்டி மூலமாக ஏலகிரி செல்லலாம். சென்னை விமான நிலையமும் ஏலகிரிக்கு அருகில் உள்ளது. அருகாமையில் உள்ள ரயில் நிலையம் ஜோலார்பேட்டை சந்திப்பு.

இங்கிருந்து பேருந்துகளும் வாடகை வண்டிகளும் எளிதில் கிடைக்கின்றன. ஏலகிரிக்கு செல்லும் சாலை தமிழகத்தின் பொன்னேரியில் இருந்து சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை , சேலம் , ஓசூர் , பெங்களூரு முதலிய இடங்களில் இருந்து சீரான இடைவழியில் பேருந்துகள் ஏலகிரி செல்கின்றன. இருப்பினும் பேருந்துப் பயணம் நீண்டதாகவும் அசதி அடைய வைப்பதாகவும் இருக்கும்.
எனவே ரயில் மூலமாகவோ அல்லது சொந்த வாகனத்திலோ ஏலகிரி செல்வதே உசிதமாக இருக்கும். ஏலகிரிக்கு சொந்த வாகனத்தில் பயணம் செல்ல விரும்பினால் வழிகாட்டி பலகைகளும் மைல்கற்களும் வழி நெடுக உங்களை வழிநடத்துகின்றன.

பெட்ரோல் பங்குகளும்  வழியில் சமவெளியில் உள்ளன. இருப்பினும் மலையில் பெட்ரோல் பங்குகள் இல்லாததால் தேவைக்கேற்ப  எடுத்துச் செல்வது அவசியமாகிறது. ஏலகிரிக்குச் செல்லும் பயணம் வசதியானதாகவே இருக்கும்.

வீட்டிற்கு திரும்பும் வழியில் தேனும் பலாப்பழங்களும் வாங்க மறக்க வேண்டாம். ஏனெனில் தமிழ் நாட்டிலேயே சிறந்த தேன் இங்கு கிடைக்கிறது. தேனி வளர்ப்பு குடிசைத் தோழிலாக நடக்கிறது.

மரங்களிலும் பாறைகளிலும் காட்டுத்தேனிக்களால் உண்டாகும் தேனும் இங்குள்ள மக்களால் எடுத்துத் தரப்படுகிறது. இயற்கை அன்னையின் மடியில் சில நேரம் செலவழிக்க விரும்பினால் ஏலகிரி  உங்கள் விடுமுறையைக் கழிக்க ஏற்ற இடமாகும்.

Thanks to Thatstamil.com