ஊட்டி - மலைப்பிரதேசங்களின் ராணி!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:48 | Best Blogger Tips


தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
ஊட்டி புகைப்படங்கள் - தொட்டபெட்டா

ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள 'புளூ மவுண்டைன்' எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது. நீலகிரி என்ற பெயருக்கு பல காரணக் கதைகள் உண்டு.

12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, இங்கு பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்.

இந்த மலையில் படர்ந்துள்ள யுகலிப்டஸ் மரத்திலிருந்து வரும் புகை நீல நிறத்தில் இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.
இப்பொழுது புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாகத் திகழ்ந்தாலும், ஊட்டியின் வரலாறு பற்றி நம்மிடம் எந்தத் தகவலும் இல்லை. ஊட்டி ஏதேனும் ஒரு ராஜ்ஜியத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று அறிவதற்கு கூட எந்தவொரு சுவடியோ வேதாங்கமோ இல்லை.

19ம் நூற்றண்டில், கிழக்கிந்திய கம்பேனி ஊட்டியை ஆக்கிரமிப்பதற்கு முன்பு , தோடர் குலம் இங்கு வசித்தது என்னும் வரைக்குமே நம்மிடம் வரலாறு உள்ளது.

காலனித்துவ ஆட்சி

ஊட்டியின் கலாச்சாரம், கட்டமைப்பு போன்றவற்றில் ஆங்கில அரசின் தாக்கத்தை இன்று கூட காணலாம். ஊட்டி , இங்கிலாந்து நாட்டின் ஒரு கிராமத்தைப் போல இருப்பதாக பல சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர்.
ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர், ஊட்டிக்கு

'மலைப்பிரதேசங்களின் ராணி' என்று பெயர் சூட்டினார்கள். தென்னிந்தியாவின் பிற ஊர்களில் வெப்பத்தை அனுபவித்த ஆங்கிலேயர்கள், ஊட்டியைக் கண்டதும் பொக்கிஷத்தைக் கண்டதுபோல் மகிழ்ந்தனர். மதராஸ் ரெஜிமென்டை , ஊட்டிக்கு அருகிலுள்ள வெல்லிங்டன் என்ற ஊரில் துவக்கினர்.

இன்று வரை வெல்லிங்டன் தான் அதன் தலைமையிடமாக உள்ளது. உடல் நிலை சரியில்லாத போர்வீரர்கள் தேறுவதற்காக வெல்லிங்டனுக்கு அனுப்பப்பட்டனர். இதனால் ஊட்டி கோடை வாசஸ்தலமாகப் புகழ் பெறத் துவங்கியது.மதராஸ் பிரசிடன்சி என்ற அமைப்பின் கோடை தலைமையகமாகவும் இவ்வூர் இருந்துள்ளது.
கிழக்கிந்திய கம்பேனி ஊட்டியை ஆக்கிரமித்தப் பின், அங்கு தேயிலை, தேக்கு, கொய்னா மருந்துச்செடி போன்றவற்றை நீலகிரி மலையில் வளரவிட்டது. இதனால் இவ்வூரின் பொருளாதாரம் குறிப்பாக விவசாயம் பெருகத் துவங்கியது.

ஊட்டியின் தட்ப வெட்ப நிலை விவசாய வளர்ச்சிக்கு உதவி, இன்று பெருமளவு காபி, தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. இதுவே இன்று இவ்வூர் மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது.

தொலைந்துபோன ஊட்டியின் வரலாறு

ஊட்டியில் உள்ள சில கட்டடங்கள் அந்தக் கால வடிவமைப்புடன் இருப்பதால், இந்த ஊரே ஒரு பழமைத் தோற்றத்துடன், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதன் வளர்ச்சி ஆங்கில ஆட்சியிலிருந்துத் தொடங்கியது.
நவீன உலகிற்கு, ஊட்டியின் வரலாறு ஆங்கிலேயர்கள் குடியேறிய சமயத்திலிருந்து தொடங்குகிறது.கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் வீடுகளின் கட்டுமான பாணி அனைத்தும் பிரிட்டிஷ் காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது.

பிரிட்டிஷ் பண்பாடும் நடைமுறைகளைகளும் உள்ளூர் மக்கள் வாழ்வில் ஆழமாக பதிந்து இருக்கிறது. உள்ளூர் உணவில் கூட ஆங்கில உணவுகளின் தாக்கம் தெரிகிறது. இதன் விளைவாக, ஊட்டியின் சிறந்த உணவில், பிரிட்டிஷ் மற்றும் இந்திய மசாலாக்களின் சுவையை காணலாம்.

பிரிட்டிஷ், உள்ளூர் உழைப்பாளி மக்களுடன் சேர்ந்து செய்த வளர்ச்சிப் பணி தான், ஊட்டி இன்று புகழ் பெற உதவியது. எனவே, இன்று ஊட்டிக்கு எந்த வரலாறும் இல்லை என்றோ அல்லது இந்தியாவின் வளர்ச்சியில் அதற்கு எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லை என்றோ சொன்னால், அது தவறாகும்.

பொடானிக்கல் கார்டன் , தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது.

ஊட்டியைச் சாலை மற்றும் ரயில் வழியாக எளிதில் அடைய முடியும். நெருங்கிய விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது.

ஊட்டியில் ஆண்டு முழுவதும் இனிமையான சூழல் நிலவுகிறது. எனினும், குளிர்காலத்தில், வழக்கத்தை விட சற்று குளிராகவே இருக்கும்.