தென்கவிர்நாட்டு கவிர்குளம்…!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:05 PM | Best Blogger Tips

 May be an image of Stone Henge


 
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்நிலையாக கவிநாடு கண்மாய் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட கரையை கொண்ட இந்த கண்மாய் 3000 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு நிலங்களை கொண்டது. மூன்று மறுகால் கலிங்குகள் இந்த கண்மாய்க்கு உள்ளன.
 
தெற்கு வெள்ளாற்றின் வடக்கே அமைந்துள்ள இந்த கண்மாயின் பெரிய பாசனமடையில் இருந்து மட்டும் ஆறு பெரிய பாசன வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. 
 
இத்தகைய சிறப்பு மிக்க இந்த கவிநாடு கண்மாய் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
 
அருகில் உள்ள திருகோகர்ணம் குடைவரை சிவன் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் ராச ராசன் ஆட்சி கால கல்வெட்டுகள் இந்த கண்மாயை கவிர்குளம் எனவும், இந்த கண்மாய் அமைந்துள்ள பகுதியை தென்கவிர்நாடு எனவும் குறிப்பிடுகின்றன. (*P.S.I - 28)
 
இந்த கண்மாயின் பெரியமடையில், 
 
தூண்கால்கலுடன் கூடிய பழைய குமிழிமடை ஒன்று அமைந்துள்ளது. அதில் தென்புற தூணில் 9 வரிகளில் பழைய தமிழ் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. (*பு.வ.க - 223)
ஸ்ரீ கோமாறறஞ் 
சடையர்குயாண்டு
7 வது
வல்லநாடு
கவிர்பால்
மூதாண்டி பெ
ருந்திணை
வெண்கன் சேவித்தது.
 
அதாவது முற்கால பாண்டிய அரசனான மாறன் சடையனின் 7 வது ஆட்சி ஆண்டில் ( அதாவது கி.பி 772 ) வல்லநாட்டு கவிர்பாலை சேர்ந்த மூதாண்டி பெருந்திணை வெண்கன் என்பவர் இந்த குமிழி மடையை நிறுவி உள்ளார். 
 
(கல்வெட்டு பாடம் காமாண்டில்)
கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கல்வெட்டு சிறப்புமிக்க இந்த கண்மாயின் தொன்மையை எடுத்து காட்டும் வண்ணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
*பு.வ.க - புதுக்கோட்டை வட்டார கல்வெட்டுகள், திரு. கரு. ராசேந்திரன் - 2017.
 
*P.S.I - Inscriptions (texts) of Pudukkottai State.
 May be an image of 3 people, people smiling and temple